Published:Updated:

திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கம்.. குட்டையைக் குழப்பிய அரசியல்வாதிகள்!

திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கம்.. குட்டையைக் குழப்பிய அரசியல்வாதிகள்!
திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கம்.. குட்டையைக் குழப்பிய அரசியல்வாதிகள்!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த மலையையே லிங்கமாக கருதி பக்தர்கள் வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ‘மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம், பக்தர்கள் இடையூறு இல்லாமல் கிரிவலம் செல்ல கிரிவலப்பாதை விரிவாக்கம் செய்யப்படும்’ என முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 110-விதியின் கீழ் அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில் 'திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கிரிவலம் யாத்திரை செல்லும் பாதை 7 மீட்டர் அகலமாக இருக்கிறது, அதனை 10 மீட்டராக மாற்ற வேண்டும் எனவும், பக்தர்களுக்கு தங்கும் வசதிகளும் செய்துதரப்படும். இதன் மொத்த மதிப்பு ரூ.65 கோடி' என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, இந்த ஆண்டு (2016) ஜனவரி மாதம் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜூரஞ்சன் கிரிவலப்பாதை அகலப்படுத்துவதற்காக பாதையை நேரில் ஆய்வு செய்தார். அதன் முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறையினர் கிரிவலப்பாதையில் உள்ள மரங்களையும், மூலிகை செடிகளையும் வெட்டி வேரோடு சாய்த்தனர்.

 இந்த விரிவாக்கம் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அப்போதே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் கலெக்டரிடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதைய திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஞானசேகரன், பணியினை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார். ஆனால், பணி நேற்று தொடர்ந்து நடைபெற்று வந்தது. சில சமூக ஆர்வலர்கள் சென்று கேள்வி கேட்டவுடன் தற்காலிகமாக நிறுத்துவது போல நிறுத்திவிட்டு, மீண்டும் பணி இரவு, பகலாக தொடர்ந்தது. இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களை வெட்டக்கூடாது என தடுத்தனர். இதை பொருட்படுத்தாத குத்த்கைதாரர்கள் 'நாங்கள் மரங்களை வெட்டியே தீருவோம், உங்களால் முடிந்ததை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு மரம் அகற்றும் பணியை மேற்கொண்டு இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மனிதச்சங்கிலி போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப்போராட்டத்தில் வெளிநாட்டவர்களும் இணைந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால் மரம் வெட்டுவோர் மட்டும் தங்களது வேலையை நிறுத்தியதாக தெரியவில்லை.


 இதனை கண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், கடந்த ஜூலை மாதம் தாமாக முன்வந்து கிரிவலப்பாதையில் மரங்களை வெட்டுவதை தடை செய்தது. அந்த தீர்ப்பில் "கிரிவலப்பாதையை அகலப்படுத்தும்போது மரங்களை வெட்டவோ, அகற்றவோ கூடாது. அகலப்படுத்தும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுபற்றி மாவட்ட ஆட்சியரும், தமிழக வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என அனைவரும் தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும் என சொல்லப்பட்டிருந்தது. இதற்கிடையில், கிரிவலப் பாதையில் உள்ள மரங்கள், மூலிகை செடிகள் வெட்டப்படுவதை எதிர்த்து முகிலன் என்பவரும் தேசிய பசுமைதீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுபற்றி விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்படும் என சொல்லியிருந்தது.

இதன்படி, கிரிவலப் பாதையில் நடந்த சாலை விரிவாக்கப் பணிகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 28-ம் தேதி ஆய்வு செய்தது. இதுகுறித்து, கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட அறிக்கையில், 'தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவின்படி, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் மற்றும் ஓய்வு பெற்ற முதன்மை வன பாதுகாப்பு அலுவலர் டி.சேகர் ஆகியோர் தலைமையில், 29.09.2016 மாலை 3:00 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிரிவலப்பாதை பணிகள் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடக்கும். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்" என்று தெரிவித்தார். அதன்படி, நேற்று மாலை 3 மணிக்கு பசுமைத்தீர்ப்பாயம் அமைத்த குழு பொதுமக்களுடன் ஆலோசித்தது. பொதுமக்களில், மரங்கள் வெட்ட ஆதரவாக ஒரு தரப்பினரும், மரங்களை வெட்ட வேண்டாம் என ஒரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். "மரங்களை வெட்டலாம்" என கருத்து சொன்ன தரப்பினர் அதிகமாக அரசியல் பின்புலத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். "மரங்களை வெட்ட வேண்டாம்" என்ற தரப்பில் பெரும்பாலும் யாருக்கும் அரசியல் பின்புலம் இல்லை. அவர்கள், "மரங்களை வெட்டுவத்தை விட்டுவிட்டு நீர்நிலைகளை தூர்வாரி சுத்தமாக வையுங்கள்" என்ற கருத்தையே முன்வைத்தனர். மக்கள் கருத்து சொல்ல வேண்டிய கூட்டத்தில், அரசியல்வாதிகள் கலந்துகொண்டு கருத்துகள் சொன்னதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்ட ஆய்வுக்குழு, தனது அறிக்கையை தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கும். இனி முடிவு தேசிய பசுமைத்தீர்ப்பயத்தின் கைகளில்...     

- துரை.நாகராஜன்.
படங்கள்: கா.முரளி.