Published:Updated:

தானே நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்ட பிரமாண்ட ஓவியக்காட்சி தொடக்கம்!

தானே நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்ட பிரமாண்ட ஓவியக்காட்சி தொடக்கம்!
தானே நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்ட பிரமாண்ட ஓவியக்காட்சி தொடக்கம்!

250-க்கும் மேற்பட்ட ஓவியர்கள் பங்களிப்பு!

சென்னை: தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில், விகடன் குழுமம் நடத்தும் பிரமாண்ட ஓவிய விற்பனைக் காட்சி சென்னையில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது.

தானே நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்ட பிரமாண்ட ஓவியக்காட்சி தொடக்கம்!

முதல் முறையாக தமிழின் முன்னணி ஓவியர்கள் 250-க்கும் மேற்பட்டோர் பங்களித்துள்ள 350-க்கும் மேற்பட்ட ஓவியங்களுடன் சென்னை லலித் கலா அகாடமியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓவியக்காட்சியை ஆளுநர் ரோசய்யா தொடக்கி வைத்தார்.

இந்த ஓவியக்காட்சி குறித்து விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் கூறியது:

"சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவுகளின் வரிசையில் தமிழ் மக்களைப் பெருந்துயரத்தில் ஆழ்த்திவிட்டது 'தானே' புயல். கடலூர், விழுப்புரம், நாகை மற்றும் புதுவை மாநிலங்களில் 735 கிராமங்கள், 2 லட்சம் வீடுகள், 30 லட்சம் மக்கள் என 'தானே' சுருட்டிப் போட்ட பாதிப்புகளின் பட்டியல் நீள்கிறது.

'தானே' புயலின் துயரை முற்றிலுமாகத் துடைத்தெடுத்து, அந்த மக்களுக்கு அவர்களின் பழைய வாழ்க்கையை மீட்டெடுத்துக் கொடுக்க, குறைந்தபட்சம் ரூ. 5,000 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும், பாதிப்புக்குள்ளான மக்கள் பழைய நிலைக்குத் திரும்ப 20 வருடங்களாவது ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் புயலால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு 'விகடன் குழுமம்' தன்னாலான உதவிகளைச் செய்யும் நோக்கில், 'தானே துயர் துடைப்போம்' என்கிற திட்டத்தை முன்னெடுக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1,00,00,000 நிதி திரட்டப்பட்டு, நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

முதல்கட்டமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் புயலால் சரிந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துதல், மருத்துவ முகாம்கள், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணிகள், வீடுகள் கட்டித் தரும் பணிகள், மீனவர்களுக்குப் படகுகள் அளிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு மேலும் நிதி திரட்டும் நோக்கில், சர்வதேச அளவில் புகழ் பெற்ற தமிழக ஓவியர்களுடன் கை கோத்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறோம். முதல் முறையாக 250-க்கும் மேற்பட்ட ஓவியர்களின் 350-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன.

ஓவியக்காட்சி என்றாலே, வசதியானவர்கள்தான் பங்கேற்க முடியும்; ஓவியங்களை வாங்க முடியும் என்ற கருத்தாக்கத்தை மாற்றும் வகையில், சாதாரணமானவர்களும் வாங்குவதற்கேற்ப ரூ.3,000 முதல் ரூ.4 லட்சம் வரையிலான ஓவியங்கள் இந்த ஓவியக்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மார்ச் 5-ம் தேதி முதல் மார்ச் 10-ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த ஓவியக்காட்சி நடைபெறுகிறது.

இந்த ஓவியக்காட்சியில் விற்கப்படும் ஓவியங்கள் மூலம் திரட்டப்படும் நிதி, தானே நிவாரணப் பணிகளுக்குச் செலவிடப்படும்," என்றார் சீனிவாசன்.

முன்னதாக ஓவியக்காட்சியைத் தொடக்கிவைத்த ஆளுநர் ரோசய்யா, ஓவியக்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறியதோடு, "பேரிடர்களை எதிர்கொள்ளும் பெரும் பணியில் அரசோடு, இப்படி ஒவ்வொருவரும் கை கோப்பது முக்கியம்" என்றார்.

கண்காட்சியில் இடம்பெறும் அனைத்து ஓவியங்களையும் www.vikatan.com/thaneartshow வலைதளத்தில் காணலாம்.

விகடன் ஆற்றிய பணிகள்!

85 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க 'ஆனந்த விகடன்' குழுமம், தமிழ்ச் சமூகம் எப்போதெல்லாம் பெரும் இடர்களை எதிர்கொள்கிறதோ, அப்போதெல்லாம் மக்களோடு கை கோத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை ஒரு மரபாகக் கொண்டிருக்கிறது.

2003-ல் வானம் பொய்த்து தமிழகம் பெரும் வறட்சியைச் சந்தித்த நேரத்தில், விவசாயிகளின் துயர் துடைக்கும் நோக்கத்தில் 'தத்தெடுப்போம் கிராமத்தை' என்ற திட்டத்தை முன்னெடுத்தது விகடன் குழுமம். வறட்சியால் பாதிக்கப்பட்ட தஞ்சைப் பகுதி கிராமங்களில் ஆறு மாத காலம் எளியோருக்கு அரிசி வழங்கி, ஆயிரக்கணக்கானோர் பசி துடைக்க உதவியது இத்திட்டம்.

2004-ல் சுனாமிப் பேரழிவின்போது நிதி திரட்டிய விகடன் குழுமம், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதை அளித்தது.

இப்போது 'தானே துயர் துடைப்போம்' திட்டத்தைச் செயல்படுத்திவரும் விகடன் குழுமம், பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வழங்கிய லட்சக்கணக்கான பணத்தைக் கொண்டு களத்தில் நிவாரணப் பணிகளை முன்னெடுத்துவருகிறது.

முதல்கட்டமாக, இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் கடலூர் அம்பலவாணன்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி மறுவாழ்வு முகாம்களில் உள்ள 310 வீடுகளில் வசிக்கும் 1,099 ஈழத் தமிழர்களுக்குத் தேவையான அரிசி, மளிகைச் சாமான்கள், உடைகள், குழந்தைகளுக்கான பால் பவுடர், போர்வை போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது. இந்தப் புயலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

புயலால் கடும் சேதத்தைச் சந்தித்திருக்கும் பள்ளிக்கூடங்களைப் புனரமைத்துத் தரும் பணியை அம்பலவாணன்பேட்டை பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்கி இருக்கிறது.  

பல்லாயிரக்கணக்கான மரங்கள் வீழ்ந்தன 'தானே' புயலால். கிட்டத்தட்ட 22,500 ஹெக்டேர் முந்திரி மரங்களும் 1,000 ஹெக்டேர் பலா மரங்களும் பூமியில் சாய்ந்து கிடக்கும் நிலையில் வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதே பெரும் சவாலாயிற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு. நடுத்திட்டு கிராமத்தில் இருந்து 'மரம் வெட்டி, நிலத்தைச் சுத்தப்படுத்திக் கொடுக்கும் திட்ட'த்தை விகடன் தொடங்கி இருக்கிறது.

நிவாரணப் பணிகளில் மருத்துவச் சேவையின் முக்கியத்துவம் அறிந்து பத்திரக் கோட்டை, அரசடிக்குப்பம் புதூர் கிராமங்களில் இருந்து தொடர் மருத்துவ முகாம் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.

பாதிப்புகள் நீளமானவை... நிவாரணப் பணிகளும் நம் முன்னுள்ள சவால்களும்தான்... விகடன் கை கோக்க அழைக்கிறது... வாருங்கள் தானே துயர் துடைப்போம்..!