Published:Updated:

காவிரியும், மோடியும்...! பிரதமர் மோடிக்கு ஒரு மனம் திறந்த மடல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காவிரியும், மோடியும்...! பிரதமர் மோடிக்கு ஒரு மனம் திறந்த மடல்
காவிரியும், மோடியும்...! பிரதமர் மோடிக்கு ஒரு மனம் திறந்த மடல்

காவிரியும், மோடியும்...! பிரதமர் மோடிக்கு ஒரு மனம் திறந்த மடல்

அன்புள்ள பிரதமருக்கு,

வழமையான விசாரிப்புகளால் இந்தக் கடிதத்தை பிக்சல்களால் நிரப்பி, உங்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உங்களின் வேலை அழுத்தம் புரிகிறது. உங்கள் கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சொன்னதுபோல் உங்களுக்கு இப்போது எல்லையைக் காக்கும் வேலை இருக்கிறது. ‘எல்லைச்சாமி’யாக எதிரி நாடுகளிடமிருந்து நீங்கள் எங்களைக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றே நாங்கள் நம்புகிறோம். அதனால், தேவையற்றதை எழுதி, உங்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எப்போதும் பிறரின் நலத்தை விரும்புபவர்கள் நாங்கள். அதனால், இந்த அழுத்தங்கள் எதுவும் உங்களை ஆட்கொள்ளாமல் இருக்க வேண்டும், இப்போதும்போல் எப்போதும் நீங்கள் ஆரோக்கியத்துடனே இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனே இந்தக் கடிதத்தைத் தொடங்குகிறேன்.

நீங்கள் எங்களைப் பழிவாங்குகிறீர்களா..?

‘‘அரசியலில் முரண்படுபவர்கள், உங்களிடம் ஆயிரம் விமர்சனங்களை வைக்கலாம். ஆனால், நாங்கள் ஒரு விஷயத்தை ஆழமாக நம்பினோம். நீங்கள், இந்திய ஒருமைப்பாட்டை விரும்புபவர். இன, மொழிப் பிரிவினைகள் எல்லாம் கூடாது, ‘இது ஒற்றைத் தேசம்’ என்ற சிந்தாந்த பின்னணியில் வளர்ந்தவர். அந்த ஒருமைப்பாட்டைக் காக்க, நீங்கள் எந்த எல்லைக்கும் செல்வீர்கள்... நீங்கள் எவ்வளவு கடுமையான முடிவையும் எடுப்பீர்கள் என்று நம்பினோம். ஆனால், உற்சாகமான ஒரு திங்கட்கிழமை... அந்த எண்ணத்தைச் சிதைத்தது. மறைத்து எல்லாம் பேச விரும்பவில்லை. உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை சுக்குநூறாகியது. ஆம், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது’ என்று உங்கள் தலைமையிலான அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் சொன்னபோது உங்கள் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை செல்லரிக்கத் தொடங்கியது. உங்கள் மீது அளவு கடந்த, காதல்கொண்ட என் நண்பன் முதலில், ‘மச்சான்... இது மோடிக்குத் தெரிஞ்சு இருக்காதுடா...’ என்று விவாதத்தைத் தொடங்கியவன்... ‘இல்லடா... அவருக்குத் தெரியாமல் இங்க எதுவும் நடக்காது. ஏன்டா, அவரு இப்படிப் பண்ணினாரு...’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டான். இறுதியில், அவனே ‘டேய், ஒருவேளை... தமிழ்நாட்டுல சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்ல... கட்சி தோற்றுப்போனதால... அவரு அப்படிப் பண்ணினாரோ... அவங்களையும் ஜெயிக்கவச்சு இருக்கலாம்டா...’ என்று விவாதத்தை வேறு ஏதோ ஒரு திசையில் எடுத்துச் சென்றான்.

உண்மையில், அவன் சொன்னதுதான் காரணமா? உங்கள் கட்சியை வெற்றிபெற வைக்கவில்லை என்று நீங்கள் எங்களைப் பழிவாங்குகிறீர்களா? அப்படியாயின், தேச ஒருமைப்பாடு, ஒற்றைப் பாரதம், இந்தியம், ஒற்றை மக்கள் என்று நீங்கள் முன்வைக்கும் பதங்கள் எல்லாம் எதற்காக? இல்லை, நீங்கள் முன்வைக்கும் பாரதத்துக்கு வெளியேதான் எங்கள் நிலம் இருக்கிறதா...?

இந்தியா என்ற பரந்த பரப்பில், தனது தனித்துவத்தைக் கரைத்துவிடக் கூடாது என்று தமிழர்கள் எப்போது நினைத்து இருக்கிறார்கள்? அதற்காகப் போராடி இருக்கிறார்கள். ஆனால், இங்கு எப்போதும் பெரும்பான்மை தமிழர்கள் இந்தியத்துடன் தன்னைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பியதில்லை. அப்படியான கருத்தியலை முன்வைப்பவர்களைத் தமிழர்கள் அரசியல் அரங்கில் புறக்கணித்தே வந்து இருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்று மத்திய அரசுடன் முரண்பட்டு இருக்கிறோமே அன்றி, தமிழர்கள் எப்போதும் இந்தப் பன்மைத்துவத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விரும்பியதில்லை. ஆனால், அந்தத் தமிழினத்தைத்தான் நீங்கள் வஞ்சிக்கிறீர்கள்... பாகுபாட்டுடன் நடத்துகிறீர்கள் என்று இப்போது தமிழன் நம்பத் தொடங்கிவிட்டான். இது நிச்சயம் கூட்டாட்சி தத்துவத்துக்கு நன்மை பயப்பதல்ல.

காவிரி இன்றி எங்கள் வாழ்வில்லை..!

உங்கள் கட்சியைச் சேர்ந்த தமிழகத் தலைவர்கள், உங்களுக்குக் காவிரி குறித்து எந்த அளவுக்குச் சொல்லி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மத்திய நீர்வளத் துறை அமைச்சராவது இதுகுறித்து விளக்கி இருக்கிறாரா என்று தெரியவில்லை. காவிரி எங்களுக்கு வெறும் ஆறு மட்டுமல்ல... அது, எங்கள் பண்பாடு; அது, எங்கள் நாகரிகம்; அது, எங்கள் குருதியுடன் கலந்தது. நீர் எப்போதும் அனைத்தையும் நீர்த்துப்போகவைக்கும் தன்மையுடையது என்கிறது விஞ்ஞானம். ஆனால், காவிரி எங்கள் வாழ்வை, எங்கள் வளத்தை அடர்த்தி ஆக்கியது. காவிரி இன்றி எங்கள் வாழ்வில்லை. தமிழினத்தை அழிக்க எந்த ஆயுதங்களும் தேவையில்லை, காவிரியைத் தடுத்தால் போதும். இதை உங்கள் தலைவர்கள் சொன்னார்களா என்று தெரியவில்லை. இல்லை, சொல்லியும் நீங்கள் மெளனம் காக்கிறீர்களா..? நமது ஜவான்களைக் கொன்ற பாகிஸ்தானிடம், ‘ரத்தத்தையும், தண்ணீரையும் ஒரே நேரத்தில் நாம் பங்கிட்டுக்கொள்ள முடியாது’ என்று நீங்கள் பேசலாம். ஆனால், தமிழன் யாரை, என்ன செய்தான்..?

‘அப்படியாகவெல்லாம் இல்லை... அவர்களுக்கே தண்ணீர் இல்லை...’ என்று தயவுசெய்து நீங்கள் சொல்லிவிடாதீர்கள். ஒரு குடும்பத்தின் தலைவன் இரு சகோதரர்களையும் சமமாக நடத்த வேண்டும். இல்லாத சமயத்திலும், இருப்பதைப் பங்கிட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றம் சொல்லியே கேட்கவில்லை... நாங்கள் சொல்லியா கேட்கப்போகிறார்கள் என்று உங்கள் தமிழகத் தலைவர்கள் சொல்வதுபோல் சொல்லிவிடாதீர்கள். 56 இன்ச் மார்புடைய உங்களைக் கம்பீரமான தலைவராக, எம்மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை நீங்களே கொன்றுவிடாதீர்கள்.

அண்மையில் ராஜ்நாத் சிங், ‘உங்கள் 56 இன்ச் மார்பளவில்... ஒரு இன்ச்கூட குறையவில்லை’ என்றார். அதை மெய்ப்பிக்க, நீங்கள் காவிரி விஷயத்தில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுங்கள். உங்கள் கம்பீரத்துக்காக மட்டுமல்ல, நீங்கள் எடுக்கப்போகும் முடிவில்தான் நீங்களும், நானும் நம்பும் தேசத்தின் ஒருமைப்பாடு அடங்கி இருக்கிறது.

உணர்விலிருந்து எழுத்தப்பட்ட கடிதம்!

8 பிட்டுகள் சேர்ந்து ஒரு பைட் உருவாகிறது என்கிறது கணினிப் பொறியியல். கணினியில் ஒவ்வொரு  கோப்பின் கணமும் இந்த பைட்டுகளால்தான் அளவிடப்படுகிறது. இந்தக் கடிதம் அதிகபட்சம் 10 கிலோபைட் இருக்கலாம். ஆனால், இதில் நிரப்பப்பட்டுள்ள எங்களது உணர்வுகள் இந்தக் கணக்குகளுக்கு அடங்காது. அது, முடிவிலிக்கும் அப்பாலானது. ஆம், உங்களது ‘மான் கி பாத்’ (மனதின் குரல்) போல், எங்கள் மனதின் அடியாளத்திலிருந்து சொற்களை எடுத்து இந்தக் கடிதத்தை எழுதிவிட்டேன். அந்த உணர்வின் கணத்தை, அது எந்த உணர்வில் எழுதப்பட்டதோ அந்த உணர்வின் முழுப்பொருளை நீங்கள் நிச்சயம் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.’’

எப்போதும் உங்கள் நலத்தை நாடும்,
காவியன், புது ஆற்றங்கரை, தஞ்சாவூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு