Published:Updated:

'உள்துறை அமைச்சர் போதும்!'- அ.தி.மு.க: 'பொறுப்பு முதல்வர் வேண்டும்!' - கவர்னர்

'உள்துறை அமைச்சர் போதும்!'- அ.தி.மு.க:   'பொறுப்பு முதல்வர் வேண்டும்!' - கவர்னர்
'உள்துறை அமைச்சர் போதும்!'- அ.தி.மு.க: 'பொறுப்பு முதல்வர் வேண்டும்!' - கவர்னர்

ராஜ் பவனில் நடந்த அரசியல் பஞ்சாயத்து

முதல்வர் ஜெயலலிதா குணமாக நீண்ட நாட்கள் ஆகும் என்று மருத்துவமனை தரப்பில் சொன்னதால், ஆளுங்கட்சியில் அடுத்தடுத்த விறுப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் காலகட்டம் மாதிரியான அசாதாரண அரசியல் சூழ்நிலையில்  பி.ஜே.பி. அரசு மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமித்தது. தற்போது ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிற சூழ்நிலையில், பி.ஜே.பி-யின் ஆதரவு அ.தி.மு.க&வில் யாருக்கு என்கிற பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ராகுல் வந்த பின்னணி...

இதுபற்றி டெல்லியில் உள்ள பி.ஜே.பி. தலைவர் ஒருவரிடம் பேசியபோது, '' முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையை மையமாக வைத்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ...தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால், சசிகலாவை முன்னிருத்த ஆதரவு கேட்டு எங்களிடம் சிலர் வந்தார்கள். ஆனால், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் 'நோ' சொல்லிவிட்டனர். முதல்வர் ஜெயலலிதா நிச்சியமாக உடல்நலம் சரியாகி முதல்வர் நாற்காலியில் அமருவார். அவருக்குத்தான் எங்களது ஆதரவு. வேறு யாரும் அந்த நாற்காலிக்கு சொந்தம் கொண்டாட நினைத்தால், சும்மா இருக்கமாட்டோம். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அடுத்து சசிகலா இருப்பதை மறந்துவிடாதீர்கள். தீர்ப்பு எப்படி இருக்குமோ? தெரியவில்லை. அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்? என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டோம். சசிகலா கோஷ்டியினருக்கு டெல்லி பி.ஜே.பி-யின் ஆதரவு கிடைக்காது என்று தெரிந்தவுடன், எங்களை சமாளிக்க காங்கிரஸுடன் பார்ட்னர் ஷிப் பற்றி பேசினார்கள். தமிழகத்தில் தற்போது தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர், சசிகலா சமூகத்தை சேர்ந்தவர். அந்த வகையில், திருநாவுக்கரசர் சொல்லித்தான் ராகுல் உடனே தமிழகத்துககு போய்விட்டு வந்தார். காங்கிரஸ் ஆதரவு தந்தால், துணை முதல்வர் பதவி திருநாவுக்கரசருக்கு வழக்கப்படும் என்று பேசி முடித்துள்ளார்கள். இன்னும் ஒரிரு நாளில் பிரதமர் மோடி சென்னைக்கு போகிறார். முதல்வரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கப்போகிறார். அதன் பிறகுதான்...அடுத்தகட்ட அதிரடி திருப்பங்கள் தமிழகத்தில் ஏற்படும். பொறுத்திருந்து பாருங்கள்''  என்று சொல்கிறார்.
பி.ஜே.பி.

டார்ச்சர் ஆரம்பம்...

டெல்லியில் ராகுல் ஒ.கே. சொல்லிவிட்டார் என்று தெரிந்ததும், பி.ஜே.பி. மேலிட பிரமுகர்கள் டென்ஷன் ஆனார்கள்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்த கவர்னரை உடனே கிளம்பி தமிழகம் வந்தார். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி, ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்தவேண்டும் என்று பி.ஜே.பி&யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி அறிக்கை விட்டார். கவர்னரும், சுவாமியும் அக்டோபர் 7-ம் தேதியன்று சென்னையில்தான் இருந்தனர். சுவாமி போய் நேரில் கவர்னரை அக்டோபர் 8-ம் தேதியன்று சந்திப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது. தமிழகத்தின் முக்கிய அமைச்சர்களை நேரில் ராஜ் பவனுக்கு கவர்னர் வரவழைத்து பொது விஷயங்கள் குறித்து விவாதித்தார் என்று பத்திரிக்கை செய்தி அனுப்பினார்கள். ஆனால், உள்ளுக்குள் நடந்தது வேறு! காவிரி பிரச்னை சீரியஸாகிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு விவகாரங்களை தமிழக அரசு கையாளுவதில் புகார்கள் வருகின்றன. இதையெல்லாம் சமாளிக்க, உடனடியாக பொறுப்பு முதல்வரை நியமிக்கும்படி கவர்னர் தரப்பில் சொன்னதாக கேள்வி. ஆனால், அதற்கு அ.தி.மு.கழக அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.


அ.தி.மு.வின் அடுத்த மூவ்

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால், முதல்வர் ஜெயலலிதா வசம் இருக்கும் துறைகளி உள்துறையை ஸ்பெஷலாக கவனிக்க அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்கிறோம். முதல்வரின் மற்ற துறைகளை சீனியர்கள் பிரித்துக்கொண்டு கவனிக்கிறோம். மற்றபடி...'முதல்வர் என்கிற நாற்காலியில் இனி ஜெயலலிதா திரும்பி வந்து அமர வேண்டும். வேறு யாரும் உடகார கூடாது என்று ஒருமனதாக முடிவு செய்திருக்கிறோம்' எனறு தெரிவித்திருக்கிறார்கள். இதை கவர்னர் ஏற்றுக்கொள்ளவில்லையாம். அமைச்சரவையில் இதுவரை இல்லாத உள்துறை அமைச்சர் பதவியில் புதியதாக யாரையும் உட்காரவைக்க வேண்டுமானால், ஜனாதிபதி, மத்திய அரசிடம் நான் ஆலோசனை நடத்தவேண்டும். சட்ட ஆலோசனையும் தேவைப்படும். 'இதெல்லாம ஏதற்கு?..பேசாமல் பொறுப்பு முதல்வரை நியமிக்கவேண்டியதுதானே?' என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டாராம்.


ஒ.பி.எஸ் மீண்டும் பொறுப்பு முதல்வர் ஆவாரா?

இங்குதான் சிக்கலே இருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, ஒ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றி முதல்வரிடம் போட்டுக்கொடுத்து ரெய்டு நடந்ததற்கு சசிகலாதான் காரணம் என்று ஒ.பி.எஸ்&ஸின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக குற்றம் சாற்றுகிறார்கள். இந்த நிலையில், அவர் முதல்வர் ஸீட்டில் மறுபடியும் அமர்ந்தால், சசிகலாவுக்கு எதிராக தனது அதிகாரத்தை ஒ.பி.எஸ். பயன்படுத்தி விடுவாரோ? என்று சசிகலா கோஷ்டியினர் நினைக்கிறார்கள. அதனால், ஒ.பி.எஸ்&ஸுக்கு வாய்ப்புகள குறைவுதான் என்கிறார் ஆளுங்கட்சியின முக்கிய பிரமுகர் ஒருவர்.

மன்னார்குடிகாரர்களின் திடீர் முடிவு?''

சசிகலா புஷ்பாதான் எங்களை குடும்பத்தினரைப் பற்றியும், சசிகலா பற்றியும் டெல்லியில் வத்தி வைக்கிறார். நாங்கள் ஏதோ ஆட்சியை பிடிக்கப்போவதாக வீண் வதந்தியை பரப்புகிறார். அதெல்லாம் பொய். எங்களைப் பொறுத்தவரையில், ஜெயலலிதா உடல்நலம் தேறி வீட்டுக்கு வரவேண்டும் என்பதில்தான் முழு மூச்சில் செயல்படுகிறோம். அவர் வந்து முதல்வர் பதவியில் அமர்ந்தவுடன் மற்றதை பிறகு பார்க்கலாம்''  என்று சொல்கிறார். நிலவரம் கலவரமாக இருப்பதால்,
மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு கைகொடுக்காவிட்டால், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கும். எனவே, சசிகலாவின் சொல்படி கேட்டு நடக்கும் ஒருவரை தற்போதைக்கு பொறுப்பு முதல்வராக ஆக்கிவிட்டு, பிறகு நடக்கும் அரசியல் நிகழ்வுகளை வைத்து அடுத்தகட்ட அரசியல் மூவ் செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.
பொறுத்திருந்து பார்ப்போம்!

-  ஆர்.பி.