Published:Updated:

பொங்கல் ஊக்கத்தொகை : முதலமைச்சர் கருணாநிதி அறிவிப்பு

Vikatan Correspondent

சென்னை, ஜன.14,2011: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறை, பால் உற்பத்தியாளர் சங்கம், நுகர்வோர் கூட்டறவு சங்க ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகிய வற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2006-ல் இந்த அரசு பொறுப்பேற்றபின் ஆண்டுதோறும் செயல்திறன் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் திருநாள் ஜனவரி திங்கள் 15ஆம் நாள் கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களில், 2010ஆம் ஆண்டில் 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணி புரிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 85 , 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.195, 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ரூ.625 வீதம் செயலாக்க ஊக்கத் தொகை வழங்கிட முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
 
இந்த ஆணையின் காரணமாகப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஓரு லட்சத்து 25 ஆயிரத்து 125 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 80 லட்சத்து ஆயிரம் செயல்திறன் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
 
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டு றவு இணையம் மற்றும் 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளர்களில் கடந்த 2010ஆம் ஆண்டில், 200 நாள்களுக்கு மேல் பணிபுரிந்துள்ள பணியாளர்களுக்கு தலா ரூ.1000, 151 நாள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்துள்ள பணியாளர்களுக்கு தலா ரூ.400, 91 நாள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்துள்ள பணியாளர்களுக்கு தலா ரூ. 240, 90 நாட்களும் அதற்குக் குறைவாகப் பணிபுரிந்துள்ள பணியாளர்களுக்கு தலா ரூ.145, வீதம் 6 ஆயிரத்து 352 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.63 லட்சத்து 52 ஆயிரம் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
 
இது போல் பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் ஆகிய வற்றில் கடந்த 2010ஆம் ஆண்டில்,200 நாள்களுக்கு மேல் பணி புரிந்துள்ள பணியாளர்களுக்கு தலா ரூ.1000, 151 நாள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்துள்ள பணியாளர்களுக்கு தலா ரூ. 400, 91 நாள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்துள்ள பணியாளர்களுக்கு தலா ரூ.240, 90 நாட்களும் அதற்குக் குறைவாகப் பணிபுரிந்துள்ள பணியாளர்களுக்கு தலா ரூ. 145 -வீதம் மொத்தம் 19 ஆயிரம் பணியாளர்களுக்கு ரூ. 1 கோடியே 90 லட்சம் செலவில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை வழங்கிட முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது