Published:Updated:

எழுபதாண்டுகளுக்கு முன்பு உரியில் என்ன நடந்தது தெரியுமா?: எரியும் எல்லைக்கோடு! அத்தியாயம் - 1

பாகிஸ்தானைத் பொறுத்தவரை பதானியர்களும் பயங்கரவாதிகளும் கூலிப்படையினர்தான். முதலில் கூலிப்படையினரைக் கொண்டு ஊடுருவி, அவர்களின் வழியே தாக்குதலை ஆரம்பிப்பார்கள். பிறகு மெல்ல மெல்ல முகமூடியைக் கழற்றிவிட்டு, நேரடியாகக் களத்தில் இறங்குவார்கள்.

உரிக்குள் நுழைந்துவிட்டார்கள் எதிரிகள் என்ற செய்தி ஒட்டுமொத்த ராணுவத்தினரையும் பதற்றம் கொள்ளச் செய்தது. இன்னும் நூறு கிலோமீட்டர் தாண்டினால் ஸ்ரீநகரைத் தொட்டு விடலாம் என்ற நிலையில், இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தனர். உரிய இடத்திலிருந்து உத்தரவு வந்த வேகத்தில் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர்.

அதுவரைக்கும் தடையின்றி வந்துகொண்டிருந்த எதிரிகளுக்கு உரியில் கிடைத்த மூர்க்கத்தனமான எதிர்ப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது. போதாக்குறைக்கு, எதிரிகளின் முன்னேற்றத்தைத் தடுக்க உரியில் இருந்த பாலம் ஒன்றைத் தகர்த்தெறிந்தனர் ராணுவத்தினர். அதற்கு உத்தரவிட்டவர் பிரிகேடியர் ராஜீந்தர் சிங். திடீரென பாதைகள் தடைபட்டதால் சற்றே தடுமாறிப்போனார்கள் எதிரிகள். என்றாலும், சட்டென்று சுதாரித்துக் கொண்டு ஆவேசத் தாக்குதல் நடத்தி அடுத்தடுத்த பகுதிகளுக்குள் ஊடுருவத் தொடங்கினர்.

மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவம், சமீபத்தில் நிகழ்ந்த உரி தாக்குதல் அல்ல. சற்றேறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இதே அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நிகழ்ந்த சம்பவம். ஆம், பிரிவினைக் கோடு கிழிக்கப்பட்ட கையோடு நம்மீது பாகிஸ்தான் நடத்திய மறைமுகத் தாக்குதலுக்கான ஆரம்பப்புள்ளிகளுள் இதுவும் ஒன்று.  

உரியின் வழியாக நிகழ்த்திய இந்த ஊடுருவல்தான் அடுத்த சில நாள்களில் நிகழ்ந்த மாபெரும் திருப்பங்களுக்கு அடித்தளமிட்டது. எங்களைக் காப்பாற்றுங்கள் என்று இந்திய அரசிடம் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் விண்ணப்பம் போட்டது, மெளண்ட் பேட்டனின் தலையீடு, இருதரப்புப் பேச்சுவார்த்தை, வி.பி.மேனனின் பயணங்கள், காஷ்மீர் இணைப்பு, இந்திய – பாகிஸ்தான் முதல் யுத்தம் என எல்லாம் நிகழ்ந்தது இந்த உரி தாக்குதலுக்குப் பிறகுதான். அன்று தொடங்கிய யுத்தம் இன்னமும்கூட முடியவில்லை என்று சொல்லலாம்.

எழுபதாண்டுகளுக்கு முன்பு உரியில் என்ன  நடந்தது தெரியுமா?: எரியும் எல்லைக்கோடு! அத்தியாயம் - 1

சற்றேறக்குறைய எழுபதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது சமீபத்திய உரி தாக்குதல். முன்பு உரிக்குள் ஊடுருவியவர்கள் பதானியர்கள் என்கிற பழங்குடிமக்கள். இப்போது ஊடுருவியவர்கள் பயங்கரவாதிகள் என்கிற பாகிஸ்தானின் வளர்ப்புப் பிள்ளைகள்.

பாகிஸ்தானைத் பொறுத்தவரை பதானியர்களும் பயங்கரவாதிகளும் கூலிப்படையினர்தான். முதலில் கூலிப்படையினரைக் கொண்டு ஊடுருவி, அவர்களின் வழியே தாக்குதலை ஆரம்பிப்பார்கள். பிறகு மெல்ல மெல்ல முகமூடியைக் கழற்றிவிட்டு, நேரடியாகக் களத்தில் இறங்குவார்கள்.

இப்படி இந்தியா மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். சுதந்தரம் அடைந்த கையோடு நடந்த முதல் யுத்தம்,  நேருவின் மறைவுக்குப் பிறகு சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்த இரண்டாம் யுத்தம், வாஜ்பாய் காலத்தில் நிகழ்ந்த கார்கில் யுத்தம் என்று பாகிஸ்தான் நிகழ்த்திய நேரடி யுத்தங்கள் அனைத்திலுமே பாகிஸ்தானுக்குத் தோல்விதான். சேதங்கள் மிக அதிகம்தான்.

எழுபதாண்டுகளுக்கு முன்பு உரியில் என்ன  நடந்தது தெரியுமா?: எரியும் எல்லைக்கோடு! அத்தியாயம் - 1

மறைமுகத் தாக்குதல்களிலும்கூட அவர்களுக்கு ஏகப்பட்ட பொருட்செலவுதான். கெட்டப் பெயர்தான். அவமானம்தான். ஆனாலும் அவற்றைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், இந்தியா மீது தொடர்ந்து மறைமுக, நேரடி யுத்தங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இவற்றின் பின்னணியில் இன்னார்தான் இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிடமுடியாது.

ஒரு யுத்தத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் அரசியல் ஆட்சியாளர்கள் இருந்திருப்பார்கள். இன்னொரு யுத்தத்தின் சூத்திரதாரிகளாக ராணுவ ஆட்சியாளர்கள் இருந்திருப்பார்கள். பல சமயங்களில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் பங்களிப்புதான் மிகப் பிரதானமாக இருந்திருக்கும். குறிப்பாக, மறைமுக ஊடுருவல்களுக்கு மாதிரித் திட்டம் வகுத்துக் கொடுப்பது பெரும்பாலும் இவர்களுடைய கைங்கர்யமாகத்தான் இருக்கும். அரிதான சமயங்களில் அனைவரும் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்ட தருணங்களும் உண்டு.

இத்தனைக்கும் என்னதான் காரணம்?

காஷ்மீர்!

ஆம், காஷ்மீர் என்பது பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கனவு தேசம். ஜின்னாவிடம் தொடங்கிய இந்தக் கனவு அவருக்குப் பிறகு வந்த அத்தனை ஆட்சியாளர்களுக்கும் இருந்திருக்கிறது. ஆம், அயூப் கான், யாஹ்யா கான், ஜியா உல் ஹக், ஜுல்ஃபிகர் அலி புட்டோ தொடங்கி பேனசீர் பூட்டோ, பர்வேஸ் முஷாரஃப், நவாஸ் ஷெரீஃப் வரை வரை அனைவருக்கும் அந்தக் கனவு உண்டு. ஒருவேளை, அவர்களுக்குக் காஷ்மீர் கனவு இல்லை என்றால், ஒன்று, அவர்கள் ஆட்சியாளராக வந்திருக்க முடியாது, அல்லது ஆட்சியாளராக நீடித்திருக்க முடியாது. இதுதான் பாகிஸ்தானின் அரசியல் யதார்த்தம்.

எழுபதாண்டுகளுக்கு முன்பு உரியில் என்ன  நடந்தது தெரியுமா?: எரியும் எல்லைக்கோடு! அத்தியாயம் - 1

கனவை நோக்கிய நகர்வில் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் நிகழ்த்திய காய் நகர்த்தல்களையும் மறைமுகமாக நடத்திய ஊடுருவல்களையும் நேரடியாகத் தொடுத்த யுத்தங்களையும் உன்னிப்பாகக் கவனித்தால், காஷ்மீர் பிரச்னை என்ற விருட்சத்தின் ஆணிவேரையும் கண்டுபிடிக்கமுடியும். அவற்றின் கிளைகளிலும் இலைகளிலும் ஊடுருவியிருக்கும் விஷத்தின் வீரியத்தையும் புரிந்துகொள்ள முடியும்! அதற்கான ஒரு முயற்சியே இந்தத் தொடர்!

- தொடரும்...

- ஆர். முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு