Published:Updated:

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

Published:Updated:
அணு ஆட்டம்!

ஹிரோஷிமாவின் வேதனை  

சில நேரங்களில் இரவு வேளைகளில்
தூக்கம் திடீரென என்னைவிட்டு விலகிவிடுகிறது.
திறந்த கண்களோடு
நான் சிந்திக்கத் துவங்குகிறேன்,
அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்த அந்த
      விஞ்ஞானிகளைப்பற்றி!
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் நிகழ்ந்த
பயங்கரமான மனித அழிவுகள் பற்றிக் கேட்ட பிறகு
எப்படி அவர்களால் இரவு தூங்க முடிந்தது? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திபயங்கரமான ஆயுதத்தை
உருவாக்கியவர்களின் கண்டுபிடிப்பு
1945 ஆகஸ்ட் நாளின் இருண்ட இரவில்
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது
மரணத்தின் நடனத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.
இருநூறு ஆயிரம் மக்கள் பலியிடப்பட்டனர்,
பல்லாயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டனர்,
அவர்களால் நடத்தப்பட்ட அழிவு அசுரத்தனமானது

என்பதை ஒரு கணமேனும் அவர்கள் உணர்ந்தார்களா?
உணர்ந்தால், காலம் அவர்களைக் கூண்டிலேற்றும்,
இல்லையெனில், வரலாறு அவர்களை ஒரு போதும்
                                   மன்னிக்காது!

- அடல் பிஹாரி வாஜ்பாய்.  

1992-ம் வருடம் ஹிரோஷிமா நினைவு நாள் அனுசரிக்கும்போது, நான் அங்கே போயிருந்தேன். அணுகுண்டுத் தாக்குதல்களில் சிக்கி மீண்டோர் பலரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள், காயம்பட்ட உடல்களையும், வடுக்கள்கொண்ட மனங்களையும், அடிபட்ட ஆத்மாக்களையும்பற்றிப் பேசியது நிலைகுலையச் செய்தது. ஹிரோஷிமாவில் இருந்த சமாதான அருங்காட்சியகத்தில் நான் கண்ட காட்சிகள், மிகுந்த வலியினை உருவாக்கின.

அணு ஆட்டம்!
##~##

அணுகுண்டு வெடித்தபோது ஏதோ ஒரு வீட்டு முற்றத்தில் மூன்று சக்கர சைக்கிள் ஒன்றை ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை... அப்படியே ஆவியாகி மறைந்து விட, அந்த சைக்கிள் கிட்டத்தட்ட ஒரு பந்து போல உருண்டு உருக்குலைந்து இருந்தது. அந்தப் பொருளை நீண்ட நேரம் பார்த்துவிட்டு அந்தக் குழந்தையைப்பற்றிச் சிந்தித்தேன். இவ்வுலக வன்முறையை, ராணுவம், போர், அணுகுண்டுபோன்ற அநியாயங்களை, அசிங்கங்களை அந்த வண்ணத்துப் பூச்சியிடம் எப்படி விளக்க முடியும் என்று அல்லாடியது மனம். முகம் தெரியாத, பெயர் அறியாத அந்தப் பிஞ்சுக் குழந்தையிடம் வயதில் பெரியவன் என்ற முறையில் மௌனமாக மன்னிப்புக் கேட்க மட்டுமே என்னால் முடிந்தது!

அணு ஆயுதம்... வாழ்வின் எதிர்ப்பதம். சாவு, மரணம், மறைவு, இறப்பு, முடிவு, அந்தம், அழிவு, நாசம், நிர்மூலம் என எந்த வார்த்தையை எடுத்துச் சொன்னாலும், அது அணு ஆயுதத்தின் நேரடி அர்த்தமாகவே அமையும். அமெரிக்கா அணுகுண்டு தயாரித்து இரண்டாம் உலகப் போரில் பரிசோதித்து விட்ட நிலையில்... அன்றைய உலகின் இன்னொரு பெரியண்ணன் சோவியத் ரஷ்யாவுக்கு அரசியல்

அணு ஆட்டம்!

நெருக்கடி ஆரம்பித்தது. மன்ஹாட்டன் திட்டத்தில் வேலை செய்த க்ளாஸ் ஃப்யூக்ஸ் என்பவர் பல முக்கியத் தகவல்களைத் தர, சோவியத் விஞ்ஞானிகளின் முயற்சியில் 1949 ஆகஸ்ட் 29-ம் நாள் சோவியத் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைப் பரிசோதித்தது. ஓரிரு ஆண்டுகளுக்குள் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் ஒருவரையருவர் தாக்கி முற்றிலுமாக அழித்துவிடும் அளவுக்கு அணு ஆயுதங்களைத் தயாரித்துக் குவித்தனர். தொடர்ந்து பிரிட்டன் 1952 அக்டோபர் மாதமும், பிரான்சு 1960 பிப்ரவரியிலும், சீனா 1964 அக்டோபர் மாதத்திலும் தங்களின் முதல் அணு ஆயுதங்களைப் பரிசோதித்தன.

அணு ஆட்டம்!

1970-களில் தொடங்கி அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் அணு ஆயுதப் போட்டியைக் குறைக்க, நீக்க, ஆயுதப் பரிசோதனைகளைத் தடுக்க, ஏவுகணைகளைத் தடை செய்ய, விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுவாமல் இருக்க, பல பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஒரு சில ஒப்பந்தங்களையும் உருவாக்கின. ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபர் ஆனபோது, அமெரிக்கா மீது ஏவப்படும் சோவியத் அணு ஆயுதங்கள் தரையைத் தொடும் முன்னரே, அவற்றை விண்வெளியில் மோதி வெடிக்கச் செய்யும் 'ஸ்டார் வார்ஸ்’ எனும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தார். கோர்ப்பசேவ் தலைமையிலான சோவியத் ரஷ்யா சிதறுண்டபோதும், அமெரிக்கா - ரஷ்யாவுக்கு இடையே சந்தேகமும் பொறாமையும் ஆயுதப் போட்டியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இன்று அணு சக்தி பரவலாக்கத் தடை சட்டத்தில் கையெழுத்து இட்டுள்ள ஐந்து நாடுகளும், இதில் கையெழுத்து இடாத மூன்று நாடுகளும், அணு ஆயுத வெடிப்பு சோதனை எதுவும் செய்யாத இஸ்ரேல் நாடுமாக மொத்தம் ஒன்பது நாடுகள் அணு ஆயுதங்களுடன் இருக்கின்றன.

பெட்டிச் செய்தியில் காணப்படும் எண்ணிக்கை தவிர, அமெரிக்க அணு ஆயுதங்கள், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, துருக்கி நாடுகளிலும் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. தென் ஆப்பிரிக்கா 1980-களில் ஆறு அணுகுண்டுகளைத் தயாரித்து இருந்தாலும், 1990-களில் அவற்றைச் செயல் இழக்கச் செய்து முற்றிலுமாக அழித்துவிட்டது.

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் களுக்குப் பிறகு, நாவல்கள், நாடகங்கள், கவிதைகள், திரைப்படங்கள் எனப் பல வடிவங்களில் மனிதகுல அச்சங்களும், கரிசனங்களும் வெளிப்படுத்தப் படுகின்றன. ஆக்க சக்தியை உபயோகித்து அழிவைத் தேடிவைத்து இருக்கும்போது அஞ்சுவதும், அதனைப் புரிந்துகொள்ள முயல்வதும் இயல்புதானே?

அணு ஆட்டம்!

டாக்டர் ஸ்ட்ரேன்ஞ்லவ் (Dr.Strangelove)  1964-ம் வருட பிரிட்டிஷ் திரைப்படம்.

பர்பெல்சன் விமானப் படைத் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் ஜேக் ரிப்பர் என்பவருக்கு ஒரு சந்தேகம். அமெரிக்க மக்களின் குடிநீரில் வேதியியல் பொருட்களைக் கலந்து, அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்க சோவியத் ரஷ்யா முயல் கிறது என நம்புகிறார். இதனை முறியடிக்க அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதலை ஏவுகிறார்.

அமெரிக்க அதிபர், முப்படைகளின் தளபதி யாருக்கும் அவர் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த விமானங்களைத் திருப்பி அழைக்கும் ராணுவத் தலைமையகத்தில் அமெரிக்க அதிபரும், முப்படைத் தளபதியும், அணுசக்தி ஆலோசகர் டாக்டர் ஸ்ட்ரேன்ஞ்லவ் என்பவரும் அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள். எப்படி இந்த அணு ஆயுதப் போரை நிறுத்துவது என்று தெரியாமல், அமெரிக்காவுக்கான சோவியத் தூதரை அழைக்கிறார்கள். அவரிடம் பேசி சோவியத் அதிபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கும்படி விண்ணப்பிக்கிறார்கள்.

ஆனால், சோவியத் தூதர் பயங்கரமான ஒரு தகவலைத் தெரிவிக்கிறார். 'இறுதி நாட்களின் இயந்திரம்’ என ஒன்று இருப்பதாகவும், சோவியத் நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நிகழ்ந்தால், அந்த இயந்திரம் மொத்த உலகத்தையே அழித்துவிடும் என்றும் தெரிவிக்கிறார்.

டாக்டர் ஸ்ட்ரேன்ஞ்லவ், அழகான பெண்களையும், இளமையான ஆண்களையும் பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் குகைகளுக்குள் வாழச் செய்து, கதிர் வீச்சு அபாயம் குறைந்த பிறகு அவர்களைவைத்து அமெரிக்காவை மறு நிர்மாணம் செய்யலாம் என்று அறிவுரை சொல்கிறார். ஸ்டேன்லி க்யூப்ரிக் இயக்கி 1964-ல் வெளிவந்த இந்த நகைச்சுவைத் திரைப்படம் 'எல்லாக் காலத்துக்குமான உலகின் சிறந்த 24-வது நகைச்சுவைத் திரைப்படமாக’ அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. புகழ்பெற்ற விமர்சகர் ரோஜர் ஈபெர்ட் இந்தப் படத்தை, 'இந்த நூற்றாண்டில் வெளியான மிகச் சிறந்த அரசியல் நையாண்டித் திரைப்படம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆட்டம்!

     டி.கப்ரியேல்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மேற்கு பெர்லின் நகரில் வளர்ந்த கப்ரியேல், இடதுசாரி மாணவர் அமைப்பில் சேர்ந்து போர்களுக்கு எதிராகப் போராடினார். மதம், கலாசாரம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்காக 1972-ம் வருடம் இந்தியாவுக்கு வந்தார். நாடு முழுக்கச் சுற்றிய கப்ரியேல் மதுரையில் தனது குடும்பத்தை அமைத்துக்கொண்டு, இந்தியக் குடியுரிமை பெற்று, இந்தியாவின் சமூக, சுற்றுச்சூழல், மேம்பாட்டுப் பிரச்னைகளில் அதிதீவிரமாகப் பங்கேற்றுப் பணியாற்றி வருகிறார். மேதா பட்கர் தலைமையேற்று நடத்தும் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இயங்கும் கப்ரியேல், கூடங்குளம் உள்ளிட்ட பல அணு சக்தி நிறுவனங்களுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்!

- அதிரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism