Published:Updated:

மைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - அத்தியாயம் 1

மைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - அத்தியாயம் 1
மைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - அத்தியாயம் 1

மைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - அத்தியாயம் 1

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ - இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது. ஜெயலலிதாவை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், இந்த வரியை... அதன் உள்ளே பல அடுக்குகளில் ஒளிந்து இருக்கும் விஷயத்தை, அதன் அடர்த்தியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆம், இந்த வரியைப் புரிந்துகொள்வதும் ஜெயலலிதாவை புரிந்துகொள்வதும் வெவ்வேறானது அல்ல.

பெங்களூரு நோக்கி முதல் பயணம்:

பெரிய வசதியெல்லாம் இல்லைதான். ஆனால், குறையொன்றும் இல்லை என்பதாகத்தான் அம்முவின் (ஜெயலலிதா) வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது, அந்தச் சம்பவம் நிகழும்வரை. அப்போது அம்முவுக்கு இரண்டு வயதுக்கும் குறைவுதான். அவரது அப்பா ஜெயராம், பிணமாகக் கிடத்தப்பட்டு இருக்கிறார். சோகம் அப்பிய இரவு... எங்கும் அழுகை குரல். அம்முவுக்குத் தன்னைச்சுற்றி என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று புரியவில்லை. அதுவும் குறிப்பாகத் தன் அம்மா வேதவல்லி ஏன் அழுதுகொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஆனால், ஏதோ சரியில்லை என்று மட்டும் தெரிந்தது.

ஜெயராமின் அப்பா நரசிம்மன் ரெங்காச்சாரி, மைசூர் மகாராஜா அரண்மனையில் மருத்துவ பொறுப்பாளராக பணிபுரிந்தவர். அரண்மனையில் பணியென்றால் கேட்கவா வேண்டும்...? நல்ல ஊதியம் தான்.  நிறைவான வாழ்வு தான். ஆனால், ஜெயராமிற்கு அதை முறையாக நிர்வகிக்க தெரியவில்லை. ஆம், கல்லூரி முடித்தும் வேலைக்கு செல்லாமல், அப்பாவின் சொத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். மழையில் கரையும் மண் வீடு போல, சேமிப்பும் கரைந்து கொண்டே போனது.   ஹூம்... உங்களுக்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். ஜெயராமிற்கு வேதவல்லி முதல் மனைவி அல்ல... இரண்டாம் மனைவி.

வேதவல்லி அன்று தன் கணவருக்காக மட்டும் அழவில்லை. இனி, தன் இரண்டு பிள்ளைகளையும் எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற கேள்வி நடுக்கத்தை உண்டாக்கியது. கணவர் இல்லை... இனி தனியாக மைசூரு மாண்டியாவில் வசிக்க முடியாது. இப்போது வேதவல்லிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தன் தந்தை ரெங்கசாமி வசிக்கும் பெங்களூருவுக்குச் செல்வது மட்டும்தான். கணவருடைய ஈமக்கிரியை முடிந்தவுடன் தன் இரண்டு பிள்ளைகளுடன் பெங்களூருவுக்குப் பயணமானார்.

சினிமா வாய்ப்பு:

ரெங்கசாமிக்கு, ஹிந்துஸ்தான் ஏவியேசன் லிமிடெட்டில் குமாஸ்தா பணி. ஸ்ரீரங்கத்திலிருந்து வந்து பெங்களூருவில் வேலைநிமித்தமாக

செட்டில் ஆனவர். அவரும், ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். அதனால் தன் அப்பாவின் சுமையைக் குறைக்க, அம்முவுக்கு நல்ல கல்வியைத் தர வேதவல்லி பணிக்குச் செல்ல வெரும்பினார். தட்டச்சு தெரியும், சுருக்கெழுத்தும் நன்கு வரும். அப்போது இந்த தகுதிகளே போதுமானதாக இருந்தது. பணி கிடைத்தது.  ஆனால், அதிலிருந்து வந்த ஊதியம் போதுமானதாக இல்லை. வாழ்க்கை, வெயில்பொழுதில் வனாந்திரத்தில் நடப்பதுபோன்று இறுக்கமாகச் சென்றுகொண்டிருந்தது.

அந்த சமயத்தில் தான் , கன்னட சினிமா தாயாரிப்பாளர் கெம்பராஜ், வேதவல்லியைப் பார்த்தார். லட்சணமான முகம் என ஒரு நடிகைக்கான அம்சத்தைக் கண்டு கொண்டார். உடனடியாக ரெங்கசாமியைச் சந்தித்து, “என் படத்துக்கு ஒரு நாயகியை தேடிக்கொண்டு இருக்கிறேன். உங்கள் மகள் பொருத்தமாக இருப்பார். நடிக்க அனுமதிப்பீர்களா...?” என்று கேட்ட அடுத்த நொடியே ரெங்கசாமிக்கு கோபம் தலைக்கேறியது. ‘‘முடியாது’’ என்று மறுதலித்தார். உண்மையில், அந்தச் சமயத்தில் வேதவல்லிக்கும் சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்ததுதான். அதற்கு ஒரே காரணம் ‘நல்ல ஊதியம்’. ஆம், பொருளாதாரச் சிரமத்தில் இருக்கிறோம். இந்தச் சமயத்தில் இது நல்ல வாய்ப்பு. இரு பிள்ளைகளையும் படிக்கவைக்கலாம்... அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். ஆனால், அப்பா மறுக்கிறாரே. இப்போது என்ன செய்ய முடியும்...? என்று அமைதியாக இருந்துவிட்டார்.

ரெங்கசாமி மறுத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அப்போது, அவரது இன்னொரு மகள் அம்புஜா விமானப் பணிப்பெண்ணாகப் பணியில் இருந்தார். ஓர் ஆச்சாரமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் விமானப் பணிப்பெண்ணாகப் பணி செய்வது ரெங்கசாமிக்குப் பிடிக்கவில்லை. அம்புஜாவுடன் பேசுவதையே நிறுத்தி இருந்தார். இன்னொரு மகளும் தங்கள் சமூகநெறியை மீறி ஒரு பணிக்குச் செல்வதை ரெங்கசாமி விரும்பவில்லை.

ஆனால், மனிதர்களின் விருப்பங்கள் மட்டுமே நிகழ்கிறதா என்ன..? அப்போது, விதி வேறு மாதிரி இருந்தது. ஆம், விமானப் பணிப்பெண்ணாக இருந்த அம்புஜா, வித்யாவதி என்று தன் பெயரை மாற்றி சினிமாவில் நடிக்க தொடங்கி இருந்தார். இந்தப் புள்ளியிலிருந்துதான் அம்முவின் வாழ்க்கை மாறியது.

ஆம்... அம்புஜா, ‘வித்யாவதி’யாக மாறாமல் இருந்திருந்தால்... ஒருவேளை, அம்முவும் ‘அம்மா’வாக மாறாமல் இருந்து இருப்பார்.

வித்யாவதி சென்னையில் தங்கி திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது, வித்யா தன் சகோதரி வேதவல்லியை, தன்னுடன் சென்னை வந்து தங்குமாறு அழைத்தார். ‘‘அம்முவை, தான் நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறேன்’’ என்றார். எந்த மறுப்பும் சொல்லாமல் இந்த வாய்ப்பை வேதவல்லி ஏற்றுக்கொண்டு சென்னைக்குப் பயணமானார்.

(தொடரும்)

- மு.நியாஸ் அகமது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு