Published:Updated:

கருணாநிதி விழாவில் கவிஞரின் வர்ணனை!

குடும்பச் சொத்தும்... மக்கள் சொத்தும்!

கருணாநிதி விழாவில் கவிஞரின் வர்ணனை!

குடும்பச் சொத்தும்... மக்கள் சொத்தும்!

Published:Updated:
##~##

'இக்கட்டான நேரத்திலும்கூட, வழக்கம்போல நம் தலைவரின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்!’ என்று 'கனத்த முன்னுரை’ கொடுத்துவிட்டே, பாசத் தலைவனின் 88-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்கள் தி.மு.க. இளைஞர் அணியினர்! 

கடந்த வாரம், காமராஜர் அரங்கத்தில், கருணாநிதியைப் பாராட்டிப் போற்றிய அந்த விழாவின் ஹைலைட்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனல் அடிக்கும் காய்ச்சலைப் பொருட்படுத்தாது, கவி பாட வந்தார் வைரமுத்து. ''போராட்டம் என்பது சிலருக்குக் கனவு... தொடர்ச்சியாக வராது. சிலருக்கு ஜலதோஷம்... வந்து வந்து போகும். சிலருக்குத் தூக்கம்... அடிக்கடி கலையும். சிலருக்கு காதல்... சில முறை வந்து போகும். ஆனால், கலைஞருக்குப் போராட்டம் என்பது சுவாசம். அதனால்தான், 88 வயதான கலைஞர், தனது 70 வருடப் பொது வாழ்க்கையிலும் இடையறாத போராளியாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறார். 'பொது வாழ்க்கைக்கு வருகிறவர்களுக்கு முதல் தகுதியே, அவமானத்தைத் தாங்குவதுதான்!’ என்று பெரியார் சொன்னார். இந்த 88 வயதிலும்கூட, ஒரு மனிதனுக்கு இத்தனை சுமைகள், துன்பங்கள், போர்கள், அவமானங்கள், துயரங்கள்... எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் மிக அதிகமான அவமானங்களுக்கு உள்ளான ஒரே தலைவன் கலைஞர்தான்.

கருணாநிதி விழாவில் கவிஞரின் வர்ணனை!

முத்தமிழறிஞர் கலைஞர் ஒரு ரப்பர் மரம்! எத்தனை முறை வெட்டினாலும், பால் கசிந்துகொண்டே

கருணாநிதி விழாவில் கவிஞரின் வர்ணனை!

இருக்கும். பால் கசியக் கசிய, மீண்டும் மீண்டும் வெட்டிக்கொண்டே இருப்பார்கள். ரப்பர் மரத்துக்கு ரணங்கள் ஒன்றும் புதிது அல்ல. எனக்கு இரண்டு நாட்களாக 102 டிகிரி காய்ச்சல். வேறு ஒரு சந்தர்ப்பமாக இருந்தால், 'என்னால் வர இயலவில்லை. மன்னித்துவிடுங்கள்’ என்று சொல்லி இருப்பேன். ஆனால், இந்த நிலையில், 106 டிகிரி காய்ச்சல் இருந்தாலும் 'நான் வந்தே தீரவேண்டும்!’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு வந்தேன்.

ராஜராஜ சோழன், பாண்டிய மன்னர்கள் கட்டிய அரண்மனைகள் இன்று இல்லை. ஆனாலும், அவர்கள் கட்டித் தந்த கோயில்கள் இன்றைக்கும் அழியாமல் கம்பீரமாக நிற்கின்றன. காரணம், அரண்மனை என்பது குடும்ப சொத்து. கோயில்கள்... மக்கள் சொத்து. அரண்மனை என்ற குடும்ப சொத்தைக் காலம் தள்ளிவிடும். கோயில் என்ற மக்கள் சொத்தைக் காலம் கட்டிக் காத்து நிற்கும். கலைஞர் இந்த சமுதாயத்துக்கு வைத்திருக்கிற பொது சொத்து, அறிவு சொத்து 'அண்ணா நூலகம்’தான்!

முதல் அமைச்சர் பதவி என்பது வரும், போகும். ஆனால், அவருடைய தமிழை யாரும் பிரிக்க முடியாது. புயலோ, மழையோ, வெயிலோ... பாறை பாறைதான்; வானம்... வானம்தான்; கலைஞர்... கலைஞர்தான்!'' என்று உச்ச ஸ்தாயில் பேச்சை முடிக்க... உடன்பிறப்புகளின் கைதட்டலில், அரங்கமே அதிர்ந்தது.

அடுத்துப் பேசிய சுப.வீரபாண்டியன், ''இந்தத் தேர்தலிலே தி.மு.க. தோல்வி அடைந்தது உண்மை​தான். ஆனால், பத்திரிகைகள் அதை ஊதிப் பெருக்கிக் காட்டியது. 'அலை மாறுவதற்கு’ நாம் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உழைக்கத் தொடங்கினால், ஐந்து மாதங்களே போதும். அம்மையார் கொஞ்சம் உதவி செய்தால், மூன்று மாதங்களேகூடபோதும். கட்டாயம் செய்வார். ஏனென்றால், அது அவரது இயல்பு. முதல் கட்டமாக, சமச்சீர்க் கல்வியைத் தடை செய்து தமிழனின் தலையிலேயே கைவைத்து இருக்கிறாரே!

கலைஞர் ஒரு போராளிதான். ஆனால், அதற்காக இந்த 88 வயதிலும் அவரைப் போராளியாகவே வைத்திருக்கிறதே இந்தத் தமிழகம் என்பதுதான் வேதனை!'' என்றார்.

குடும்பத்துடன் மலேசிய சுற்றுப் பயணத்தில் இருந்த குஷ்புவை விழாவில் பேச வைப்பதற்காகவே, ஒரு நாள் ஸ்பெஷல் பயணமாக சென்னைக்கு அழைத்து வந்தனர். கத்தைப் பேப்பர்களை கையில் வைத்தபடி குஷ்பு பேசிய டமிலும் அழகு!

''நா பேப்பர் பாத்துப் படிச்சேன்னு தப்பா நெனக்காதீங்க... வேர யாரோ எள்திக் குடுத்ததப் படிச்சிப் படிச்சி ஆச்சியப் புடிச்சிட்டாங்க. அதனால, இது பரவாயில்ல...'' என்று சமாளித்து முடித்த கையோடு, ப்ளைட் பிடிக்கப் பறந்தார்.

மொத்தத்தில், 'இது மக்களின் தோல்வி, மக்கள் தூங்கிவிட்டார்கள், நன்றி மறந்தவர்கள்....’ என்று மனதைத் தேற்றிக்கொண்டார்கள் உடன்பிறப்புகள்!

- த.கதிரவன்,

படங்கள்:    எ.ரஞ்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism