Published:Updated:

சசிகலா புஷ்பா மூலம் சசிகலாவுக்கு செக்!?  -புதிய வழக்குகள் பாயுமா?

சசிகலா புஷ்பா மூலம் சசிகலாவுக்கு செக்!?  -புதிய வழக்குகள் பாயுமா?
சசிகலா புஷ்பா மூலம் சசிகலாவுக்கு செக்!?  -புதிய வழக்குகள் பாயுமா?

சசிகலா புஷ்பா மூலம் சசிகலாவுக்கு செக்!?  -புதிய வழக்குகள் பாயுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் துறைகளை நேற்று முதல் கவனிக்கத் தொடங்கிவிட்டார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். ' சசிகலாவுக்கு எதிராக சில புகார்களை சி.பி.ஐ உள்பட மத்திய அரசு நிறுவனங்களில் கொடுக்க இருக்கிறார் சசிகலா புஷ்பா' என்ற தகவலும் அ.தி.மு.க வட்டாரத்தில் வலம் வருகிறது. 

தமிழக முதல்வர் ஜெயலலிதா 22 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். ' முதல்வர் அனுமதியின் பேரில் ஓ.பன்னீர்செல்வத்திடம் துறைகள் ஒப்படைக்கப்படுகிறது' என ஆளுநர் அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய தி.மு.க தலைவர் கருணாநிதி. ' முதல்வரின் கையெழுத்தைப் பயன்படுத்தி மோசடி நடப்பதாக பெண் எம்.பி ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்' எனவும் சுட்டிக் காட்டியிருந்தார். தி.மு.கவின் கேள்விக்கு அரசிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இந்நிலையில், "  முதல்வருக்கு டிஹைட்ரேட் எதனால் ஏற்பட்டது? கடந்த சில மாதங்களாக அவருக்கு என்னென்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன? என்பதற்கு சி.பி.ஐ விசாரணை தேவை' என மத்திய புலனாய்வுத் துறையிடம் மனு கொடுக்க இருக்கிறார் சசிகலா புஷ்பா. சட்டரீதியாகவும் இந்த விவகாரத்தைக் கொண்டு செல்ல இருக்கிறார்" என நம்மிடம் விவரித்தார் அவரது வழக்கறிஞர் ஒருவர், தொடர்ந்து, 

" சசிகலாவுக்கு எதிராக நாங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க தொண்டர்களே வரவேற்கிறார்கள். 'முதல்வரின் உடல்நிலையைப் பயன்படுத்தி மோசடி நடக்கிறது' என்று முன்பே புகார் கூறினார் சசிகலா புஷ்பா. அதைத்தான் கருணாநிதி உள்ளிட்டவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐயிடம் புகார் கொடுக்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து, இத்தனை ஆண்டுகளாக சசிகலாவின் வரவு செலவுகள், பணப் பரிவர்த்தனைகள் குறித்து சில விஷயங்களை நிதித்துறை அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். இதன்பேரில் உரிய விசாரணை நடத்துமாறு, வரும் திங்கள்கிழமை மனு கொடுக்க இருக்கிறார். கூடவே, தேர்தல் ஆணையத்திடம், ' முதல்வர் கையெழுத்துடன் எந்தக் கடிதம் வந்தாலும், தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்' எனப் புகார் கொடுக்க இருந்தார் சசிகலா புஷ்பா. 'இந்தநேரத்தில் இந்தப் புகார் வேண்டாம். அப்படியொரு நேரம் வரும்போது புகார் கொடுங்கள்' என ஆளுங்கட்சியின் சீனியர் ஒருவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, கடிதத்தைக் கிடப்பில் வைத்திருக்கிறார். 

ஒருவேளை, கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முடிவில் சசிகலாவும் அவரது குடும்பமும் இருந்தால், 2011-ம் ஆண்டு, ' பதவியே வேண்டாம்' என்று ஜெயலலிதாவிடம் அவர் கொடுத்த மன்னிப்பு கடிதத்தை எடுத்துக் கொண்டு, வீதிதோறும் வலம் வரும் முடிவில் இருக்கிறார் சசிகலா புஷ்பா. அரசியல் கட்சிகளைவிடவும் சசிகலா புஷ்பாவை சமாளிப்பதுதான் அவர்களுக்குப் பெரும் தலைவலியாக இருக்கிறது. 'ஓ.பி.எஸ் வசம் துறைகள் ஒப்படைக்கப்பட வேண்டும்' என்பது மத்திய அரசின் முடிவு. ஓ.பி.எஸ் இருப்பதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறது. 'முதலமைச்சர் பூரண நலம் பெற்றுத் திரும்ப வேண்டும்' என்பதுதான் அனைத்து அமைச்சர்களின் எண்ணமாக இருக்கிறது. சசிகலாவின் பின்னால் அணி திரள்வதற்கு சில முக்கிய அமைச்சர்கள் விரும்பவில்லை" என்றார் விரிவாக. 

'சசிகலா புஷ்பாவை இயக்குவதே பா.ஜ.கவின் சில மூத்த நிர்வாகிகள்தான்' எனக் கொந்தளித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " முதல்வருக்கு உடல்நலமில்லாத சூழலைப் பயன்படுத்தி, ஆட்சியை தங்கள் போக்கில் செலுத்தும் முடிவில் சில பா.ஜ.க நிர்வாகிகள் செயல்படுகிறார்கள். இதற்கு சசிகலா புஷ்பாவை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்கின்றனர். சசிகலாவுக்கு எதிரான எம்.எல்.ஏக்கள் யார்? அமைச்சர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களிடம் தூதுவர்கள் மூலம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தொழிலதிபர் ஒருவரும் துணை போகிறார். அவர் மூலம்தான் சில வேலைகளை துரிதமாகச் செய்து வருகின்றனர். நேற்றுகூட, ' தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல்நிலையத்தில் சசிகலா புஷ்பா மீது கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறுவதற்கு வருகிறார்கள்' என்றனர். 

புகாரை வாபஸ் பெறுவதற்கு பணிப் பெண்கள் வரவில்லை. உடனே, புஷ்பாவுக்கு எதிராக ஆஜரான வக்கீல் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து புகார் கொடுத்த போதும், சசிகலா புஷ்பா, ராக்கெட் ராஜா உள்ளிட்டவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. ' உள்துறை அமைச்சகத்துக்குப் போன் போடுகிறார்கள். எங்களுக்கு எதுக்கு வம்பு?' என போலீஸார் ஒதுங்கிக் கொண்டனர். இதுவே, முதல்வர் கோட்டையில் இருந்திருந்தால் நிலைமை வேறு மாதிரி அமைந்திருக்கும். அந்தளவுக்கு மத்திய அமைச்சர்கள் சிலரின் துணையோடு செயல்படுகிறார் புஷ்பா. தன் மீதான அனைத்து புகார்களையும் வாபஸ் பெறுவதற்கு தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்" எனவும் ஆதங்கப்பட்டார். 

சசிகலாவுக்கு எதிரான சசிகலா புஷ்பா மோதலின் அடுத்தகட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் அரசியல் கட்சியினர். 

- ஆ.விஜயானந்த் 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு