Published:Updated:

கார்கில் போர் நினைவு நாள்: அங்கே ஜின்னா, இங்கே நேரு! | எரியும் எல்லைக்கோடு - 2

கார்கில்
கார்கில் ( விகடன் )

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்குப் பதான்கள் என்று பெயர். அவர்கள், தொழில்முறை போர்வீரர்கள் அல்லர். ஆனால், ஆயுதங்களைக் கையாளுவதில் ஆர்வமும் அனுபவமும் கொண்டவர்கள். அனுபவம் என்றால், முறைப்படி வித்தை கற்றவர்கள் அல்லர்!

காஷ்மீர் கனவு ஜின்னாவின் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருந்தது. மன்னர் ஹரிசிங்கைப் பேசியே வழிக்குக் கொண்டுவரலாம் என்று பார்த்தால், அவர் அதற்கு இடம்கொடுப்பதாகத் தெரியவில்லை. எனில், யுத்தம் மட்டும்தான் சரியான வழி என்றனர் ஜின்னாவின் அருகில் இருந்த தலைவர்கள்.

அதேசமயம், நேரடி யுத்தம் செய்வதில் அவர்களுக்குப் பிரச்னை இருந்தது. ஒருவேளை, நாம் போரைத் தொடங்கியதும், ‘காஷ்மீரைக் காப்பாற்றுகிறோம்’ என்ற பெயரில் இந்தியா களத்தில் இறங்கிவிட்டால், அது இரு நாட்டுக்கும் இடையேயான யுத்தமாகப் பரிணாமம் பெறும். சுதந்திரம் வாங்கிய கையோடு பெரிய நாட்டுடனான யுத்தம் பேராபத்தாகப் போய்விடும். என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தபோது, பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு நினைவுக்கு வந்தவர்கள், பதான்கள்!

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்குப் பதான்கள் என்று பெயர். அவர்கள், தொழில்முறை போர்வீரர்கள் அல்லர். ஆனால், ஆயுதங்களைக் கையாளுவதில் ஆர்வமும் அனுபவமும் கொண்டவர்கள். அனுபவம் என்றால், முறைப்படி வித்தை கற்றவர்கள் அல்லர்! கரடுமுரடாகக் கையாளக்கூடியவர்கள். கண்ணில் கொஞ்சம் பணத்தையும் மனத்தில் நிறைய ஆசையையும் காட்டினால் போதும், உயிரைக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள். ஆகவே, அவர்களை முதலில் காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்து கலகம் ஏற்படுத்தலாம் என்று முடிவானது.

கார்கில் போரில் கணவனை இழந்த பெண்: `அவர் நாட்டை காதலித்தார்; அவ்ளோதான் எனக்குத் தெரியும்!’ஆம், மறைமுக யுத்தம். இயன்றவரைக்கும் பதான்களைக் கொண்டே காஷ்மீரைக் கபளீகரம் செய்வது. தேவைப்பட்டால், ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி பாகிஸ்தான் ராணுவத்தைக் களத்தில் இறக்குவது. முதலில், முஸாபராபாத்தைத் தாக்குவது. அடுத்து, டோனல். முடிந்ததும் ஊரியும் பாரமுல்லாவும். பிறகு, தலைநகராம் ஸ்ரீநகர். இறுதியாக, காஷ்மீர். இதுதான் திட்டம். பெயர், ஆபரேஷன் குல்மார்க்.

ஆபரேஷனுக்குத் தேவையான அத்தனை ஆயுதங்களும் பதான்கள் கைகளில் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டன. யார் கண்ணிலும்படாமல், அவர்களைக் கொண்டுபோய் காஷ்மீர் எல்லையில் இறக்கிவிடும் பணியையும் பாகிஸ்தான் ராணுவமே செய்துகொடுத்தது.

திட்டமிட்டபடி 22 அக்டோபர் 1947 அன்று காஷ்மீர் எல்லைக்குள் அசைவின்றி நுழைந்த பதான்கள், ஆவேசத் தாக்குதலில் இறங்கினர். திடீர்த் தாக்குதலை எதிர்பார்த்திராத மன்னர் ஹரிசிங்கின் ராணுவ வீரர்கள் நிலைகுலைந்து போயினர். முதலில் முஸாபராபாத் வசப்பட்டது. கூடவே, உற்சாகமும் வெறியும் சேர்ந்துகொண்டன. விளைவு, கண்ணில்பட்ட மனிதர்களை எல்லாம் அடித்து உதைத்தார்கள் பதான்கள். எதிரில் வந்த பெண்களை எல்லாம் இழுத்துவைத்து நாசம் செய்தார்கள். கடைகள், வீடுகளை எல்லாம் சூறையாடினார்கள்.

கார்கில் ஊடுருவல்,கொதித்தெழுந்த இந்தியா! எரியும் எல்லைக்கோடு - 6

விஷயம் மன்னர் ஹரிசிங்கின் கவனத்துக்குச் செல்வதற்கு முன்னர் காஷ்மீர் நண்பர்கள் வழியே இந்திய கவர்னர் ஜெனரல் மெளன்ட் பேட்டனின் காதுகளுக்குச் சென்றுவிட்டது. அவர் வழியே இந்தியப் பிரதமர் நேருவுக்கும் சென்றது. இறுதியாகத்தான் மன்னர் ஹரிசிங்குக்கு. காஷ்மீரில் நடப்பதைக் கவனமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தது இந்தியா. ஆனால், மன்னர் ஹரிசிங்கோ பதற்றத்தின் உச்சியில் இருந்தார். முஸாபராபாத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளுக்கும் முன்னேறிக் கொண்டிருந்தனர் பதான்கள்.

இப்படியேபோனால் ஒட்டுமொத்த காஷ்மீரையும் வாரிச்சுருட்டிவிடுவார்கள் என்பது மன்னர் ஹரிசிங்குக்குப் புரிந்தது. கூடவே, மாற்று யோசனைகளும் வரத்தொடங்கின. அவற்றில், முதன்மையான யோசனை... இந்தியாவின் உதவியைக் கோருவது. வெளிப்படையாகக் கேட்டேவிட்டார். அபய கோரிக்கையை அப்படியே ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இல்லை. முதலில் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிடுங்கள். பிறகு, காஷ்மீரைக் காப்பாற்ற உரிமையோடு உள்ளே வருகிறோம் என்றார்கள். அப்படிச் சொல்வதற்குக் காரணம் இருந்தது. எந்தவிதமான உறுதியும் இல்லாமல், சட்டென்று நிகழ்த்தக்கூடிய சாகசம் அல்ல போர். பின்னாளில் ஐ.நா உள்ளிட்ட பலருக்கும் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்பதால், நிபந்தனைப் பட்டியலை நீட்டியது இந்தியா.

நிர்கதியில் நிற்கும்போது நிபந்தனையை ஏற்க மறுப்பது சாத்தியமில்லை என்பது மன்னர் ஹரிசிங்குக்குப் புரிந்தது. மெல்ல தலையசைத்தார். அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் அரங்கேறின. வி.பி.மேனன், சாம் மானெக்சா உள்ளிட்டோர் காஷ்மீர் விரைந்தனர். மன்னரைச் சந்தித்துப் பேசினர். பிறகு டெல்லி திரும்பிய அவர்கள் நேரு, மெளன்ட் பேட்டனிடம் பேசினர்.

இங்கும் அங்குமாக நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் சட்ட நடவடிக்கைகள் முறைப்படி தொடங்கின. உடனடியாகப் புறப்பட்டு ஜம்மு சென்ற வி.பி.மேனன், அங்கிருந்த மன்னர் ஹரிசிங்கிடம் கையெழுத்து வாங்கினார். ஆம், அந்த நொடியில் காஷ்மீர் இந்தியாவின் அதிகாரபூர்வ ஆளுகைக்குள் வந்தது.

`அன்று பாக். படைத்தளதியைக் கொன்றேன்; இன்று போக்குவரத்தை சரிசெய்கிறேன்!' - கார்கில் வீரரின் நிலை

அரசியல் நகர்வுகள் அரங்கேறியதைத் தொடர்ந்து ராணுவம் தன்னுடைய நகர்வைத் தொடங்கியது. இந்திய ராணுவம் ஸ்ரீநகர் நோக்கி அணிவகுத்தது. இதன் பொருள், இந்தியா தன்னுடைய பிரதேசங்களுள் ஒன்றான காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்திருக்கும் பாகிஸ்தான் ஆதரவு படையினருக்கு எதிராக யுத்தம் தொடங்கியிருக்கிறது என்பதுதான்.

விஷயம் ஜின்னாவை ஆத்திரம்கொள்ளச் செய்தது. ஒருபக்கம் தந்திரமாகக் காஷ்மீரை எழுதிவாங்கிக்கொண்டு, இன்னொரு பக்கம் யுத்தத்துக்குத் தயாராகியிருப்பதை அவர் துளியும் ரசிக்கவில்லை. ஆகவே, பதிலடி கொடுக்கும் பணியில் பாகிஸ்தானை ஈடுபடுத்தத் தயாரானார். அந்த நொடியில் பதான்களுக்கும் காஷ்மீருக்குமான மறைமுக யுத்தம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நேரடி யுத்தமாக மாறியது.

பாரமுல்லாவை பாடாய்ப்படுத்திவிட்டு ஸ்ரீநகர் விமானநிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தது பதான்களின் படை.  அவர்களுக்காகவே காத்துக்கொண்டிருந்த இந்திய ராணுவம், பதான்கள் மீது மின்னல் வேகத் தாக்குதலை நடத்தியது. பெரிய எதிர்ப்புகள் இன்றி மெல்லமெல்ல முன்னேறிக்கொண்டிருந்த பதான்களுக்கு இந்தத் திடீர்த் தாக்குதல் அதிர்ச்சியைக் கொடுத்தது.

யுத்த தந்திரங்கள் பற்றிய எந்தவிதமான புரிதலும் இல்லாதவர்கள் பதான்கள். ஆனால், இந்திய ராணுவமோ முறையான வியூகங்களுடன் தாக்குதல் நடத்தியது. விளைவு, ஸ்ரீநகர் விமான நிலையத்தைக் கைப்பற்றும் பதான்களின் நோக்கம் பிசுபிசுத்துப் போனது. என்றாலும், துவண்டுபோன பதான்களுக்குத் தோள்கொடுக்க பாகிஸ்தான் ராணுவம் நேரடியாகக் களத்தில் இறங்கியது. 

பாகிஸ்தான் கூலிப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது இந்திய ராணுவம். அதற்கான பரிசாக பதான்களின் கைகளுக்குச் சென்றிருந்த ஜாங்கர் இந்திய ராணுவத்தின் வசம் வந்துசேர்ந்தது. அடுத்தடுத்து இந்திய ராணுவம் முழுவேகத்தில் தாக்குதல் நடத்தியதில் பாரமுல்லாவும் வசப்பட்டது. அடுத்த நான்காவது நாள் ஊரியையும் பதான்களிடம் இருந்து விடுவித்தது இந்திய ராணுவம்.

இங்கே எதுவும் செல்லுபடியாகாது என்று தெரிந்ததும் பாகிஸ்தான் கூலிப்படையும் ராணுவமும் லே பிராந்தியத்துக்குச் சென்று கார்கிலைக் கைப்பற்றின. அங்கிருந்த இந்தியப் படையினரால் கார்கிலைக் காப்பாற்ற முடியவில்லை. மாதக்கணக்கில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

ஓர் இடத்தை அவர்கள் கைப்பற்றுவதும், உடனே இந்தியப் படை அதிரடியாகச் செயல்பட்டு அதை மீட்டெடுப்பதும் தொடர்கதையாக மாறிக்கொண்டிருந்தது. ஆனால், அப்படித் தொடர்வதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை. விரைவில், முற்றும்போடுவதில் ஆர்வம் செலுத்தியது. இத்தனைக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்த பெரும்பாலான முனைகளில் இந்தியாவின் கைகளே ஓங்கியிருந்தன.

இறுதியில், இந்தியா ஒரு முடிவுக்கு வந்தது. பேசாமல் விஷயத்தை ஐக்கிய நாடுகள் சபையிடம் கொண்டு போகலாம். இதுதான் பிரதமர் நேருவின் வாதம். அதில், சில தலைவர்களுக்கு உடன்பாடில்லை. குறிப்பாக, உள்துறை அமைச்சர் வல்லபபாய் பட்டேலுக்கு அதில் துளியும் உடன்பாடில்லை.

ஒருவேளை, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா விசாரணை நடத்துகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். விசாரணை எப்படி நடக்கும்? காஷ்மீர் மீது பரிபூரண உரிமை கொண்ட இந்தியாவையும் கொஞ்சமும் உரிமை இல்லாத பாகிஸ்தானையும் சம அந்தஸ்தில் வைத்தே விசாரணை நடக்கும். இது அவமானம். அநாவசியமும்கூட. ஆகவே வேண்டாம் என்றே பலரும் சொன்னார்கள். எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டு உள்வாங்கிக் கொண்ட நேரு தனக்கு எது சரியென்று தோன்றியதோ அதைத்தான் செய்தார்.

‘‘எங்களுடன் முறைப்படி இணைந்த காஷ்மீர் பிராந்தியத்துக்குள் பாகிஸ்தான் ராணுவத்தின் பரிபூரண ஆசிர்வாதம் பெற்ற ஆசாமிகள் நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். காஷ்மீரின் ஒவ்வோர் அங்குலமும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியேற வேண்டும். கூலிக்கு வந்து குழப்பம் ஏற்படுத்தும் அத்தனை பேரும் வெளியேற வேண்டும். ஆவனச் செய்யுங்கள்.’’

Vikatan

நேருவின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் விசாரணையைத் தொடங்கியது. விசாரணை என்றால், அதற்கு தனியே குழு ஒன்றைப் போடுவது பாரம்பர்ய பழக்கம். அதன்படி இந்தியா – பாகிஸ்தான் பிரச்னைக்காக ஐ.நா. குழு உருவாக்கப்பட்டது. மேற்படி பகுதிகளுக்கு அந்தக் குழுவின் உறுப்பினர்கள் நேரில் செல்வார்கள். என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து உள்ளது உள்ளபடி அறிக்கையாகத் தயார் செய்துகொடுப்பார்கள். இதுதான் நடைமுறை.

அதன்படியே எல்லாம் நடந்தன. பாகிஸ்தான் ஆதரவுபெற்ற கூலிப்படையினர் உடனடியாக காஷ்மீர் பிராந்தியத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு வந்தது ஐ.நா-விடம் இருந்து. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 13, 1948 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருதரப்பும் யுத்தத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கையை எடுங்கள். இதுதான் தீர்மானத்தின் சாரம்.

போர் நிறுத்தம் என்பது அதிகாரப்பூர்வமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே நடைபெறும் யுத்தத்துக்கு மாத்திரமே. ஆனால், பாகிஸ்தான் ஆதரவுப் படையினர் தங்களுடைய வாலை சுருட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆகவே, அந்தக் காரியத்தை முடிக்கும் பணியில் இந்திய ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டது. மெல்ல மெல்லக் கூலிப்படையினர் விரட்டி அடிக்கப்பட்டனர். இறுதியாக ஜனவரி 1, 1949 அன்று போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இறுதியாக காஷ்மீரை யார், எந்த அளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தபோது ஐந்தில் இரண்டு பங்கு காஷ்மீரை பாகிஸ்தான் கபளீகரம் செய்திருந்தது. மீதமுள்ள ஐந்தில் மூன்று பங்கே இந்தியாவுக்கு எஞ்சியது.

கொஞ்சம் புரியும்படி சொல்லவேண்டும் என்றால், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான அன்று எந்தப் படை எங்கு இருக்கிறதோ அதை அடிப்படையாகவைத்து எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி காஷ்மீரில் ஐந்தில் இரண்டு பங்கு பாகிஸ்தான் வசம் சென்றுவிட்டது. இதனை பாகிஸ்தான் அரசு, ‘ஆஸாத் காஷ்மீர்’ என்று அழைக்கிறது. ஆனால் அதனை இந்தியா, ‘பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் (Pakistan Occupied Kashmir)’ என்கிறது.

எல்லையில் போர் மேகங்கள் கலைந்திருந்தன. ஆனாலும், இருதரப்புக்கும் இடையே அரசியல் ரீதியிலான உரசல்கள் நின்றுவிடவில்லை. அந்த உரசல்களில் இருந்து மீண்டும் ஒரு யுத்த நெருப்பு உருவாவதற்கு 16 ஆண்டுகள் பிடித்தன. அதுதான் 1965 யுத்தம்!

(பதற்றம் தொடர்கிறது...)

- ஆர்.முத்துக்குமார்

அடுத்த கட்டுரைக்கு