Published:Updated:

இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

Vikatan Correspondent

புதுதில்லி, ஜன.13: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அந்நாட்டின் தூதர் பிரசாத் காரியவாசத்தை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.

எனினும் அந்த மீனவர் கொல்லப்பட்டதில் தங்கள் நாட்டு கடற்படைக்கு தொடர்பில்லை என இலங்கை தூதரகம் மறுத்துள்ளது. இதுகுறித்து இலங்கைத் தூதர் காரியவாசம் கூறுகையில், இலங்கை கடற்படைக்கு இதில் தொடர்பில்லை என்றாலும், இந்தியா அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளதால் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கைக்குள் நுழைந்தாலும் மீனவர்கள் மீது ஒருபோதும் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என இலங்கை கடற்படைக்கு கடுமையான உத்தரவுகள் போடப்படிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரிடம் இருந்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்,எம்.கிருஷ்ணா கோரியுள்ளார்.