Published:Updated:

மிஸ்டர் கழுகு: சி.பி.ஐ. சிக்கலில் தமிழக கோடீஸ்வரர்கள்!

மிஸ்டர் கழுகு: சி.பி.ஐ. சிக்கலில் தமிழக கோடீஸ்வரர்கள்!

மிஸ்டர் கழுகு: சி.பி.ஐ. சிக்கலில் தமிழக கோடீஸ்வரர்கள்!

மிஸ்டர் கழுகு: சி.பி.ஐ. சிக்கலில் தமிழக கோடீஸ்வரர்கள்!

Published:Updated:
##~##

ழுகார் உள்ளே நுழையும் போதே, எம்.ஜி.ஆர். பாடல் ஒன்றை ஹம்மிங் செய்தபடி வந்தார்.   

''மண்வெட்டி கையில் எடுப்பார் சில பேர். மற்றவருக்குக் குழி பறிப்பார்... அது தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத் தானறிய மறந்திருப்பார்!'' என்ற பாடல். வழக்கம்போல, புதிரை அவரே அவிழ்ப்பார் என்று பொறுமை காத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கவர்னர்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் என்பது நாடறிந்த செய்தி. சென்னா ரெட்டி, ஃபாத்திமா பீவி, ராம் மோகன்ராவ், பர்னாலா என்று கவர்னர்களைச் சுற்றி பின்னப்பட்ட விஷயங்கள் எத்தனையோ உண்டு. இப்போது... பர்னாலாவின் முறை!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில்தான் கவர்ன​ராக வந்தார் சுர்ஜித்சிங் பர்னாலா. 'கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படும்’ என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்த அன்றே, கவர்னர் மாளிகைக்குப் பறந்து சென்றார் கருணாநிதி. இதைத் தொடர்ந்து, சட்டத்துக்கு ஒப்புதல் தராமல் இருந்தவர் பர்னாலா. அப்படிப்பட்ட பர்னாலாதான்,  இப்போது சட்டசபையில் 'கேபிள் டி.வி. அரசுடைமை ஆக்கப்படும்’ என்ற அறிவிப்பை தன் கவர்னர் உரையில் வாசித்தார்!''

மிஸ்டர் கழுகு: சி.பி.ஐ. சிக்கலில் தமிழக கோடீஸ்வரர்கள்!

''இதைத்தான் 'காலத்தின் கட்டாயம்’ என்பார்களோ?''

மிஸ்டர் கழுகு: சி.பி.ஐ. சிக்கலில் தமிழக கோடீஸ்வரர்கள்!

''காலத்தின் கட்டாயம் இன்னமும் தொடர்கிறது. 'புதிய தலைமைச் செயலகம் கட்டுமானப் பணியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என்று சட்டசபையில் அறிவித்து இருக்கிறார் பர்னாலா. பாவம் அவர்! அந்தப் புதிய தலைமைச் செயலகத்தின் திறப்பு விழாக் கல்வெட்டில் அவர் பெயரும்தான் இடம் பெற்று உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா கலந்துகொண்ட திறப்பு விழாவுக்கு உடல்நிலை காரணமாக பர்னாலா வரவில்லை என்றாலும், கல்வெட்டுப் பெயரை யாரும் மறைக்க முடியாது அல்லவா!''

''இன்னும் இருக்கா?''

''துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர் மாளிகையில் உள்ள ஒருவர் நடத்திய அத்துமீறல்​கள்பற்றி கடந்த ஆட்சியில் பேசப்பட்டு வந்தன. இருக்கின்ற ஒரு அண்ணா பல்கலைக்கழகத்தை ஐந்தாகப் பிரித்ததே வசூலுக்காகத்தான் என்று சிலர் விளக்கம் அளிக்கும் அளவுக்கு விவகாரம் பேசப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளித்த பர்னாலாவே, 'பிரிந்துகிடக்கும் அண்ணா பல்கலைக்கழகம், பழையபடி சென்னையில் ஒரே பல்கலைக்கழகமாக ஆக்கப்படும்’ என்ற அறிவிப்பை வாசித்தார். அதாவது, துணைவேந்தர் கனவில் இருந்தவர்களின் தலையில் கவர்னரே மண் அள்ளிப் போட்டு விட்டார். ஏற்கெனவே துணைவேந்தர் நாற்காலியில் சுழன்றவர்கள் முகங்கள் சுருங்கிவிட்டன.''

''நீர் பாடிய பாடலுக்குப் பொருள் சொல்ல​வில்லையே...'' என்றோம்.

''எதிரியின் கையை வைத்தே அவர் கண்ணைக் குத்தவைப்பது என்பார்களே... அதைப்போல, கருணாநிதிக்கு வேண்டப்பட்ட பர்னாலாவை வைத்தே, புதிய தலைமைச் செயலகத்துக்கு விசாரணை கமிஷன், கேபிள் டி.வி. அரசுடைமை என்று அறிவிப்புகளை வெளியிட்டது ஜெயலலிதாவின் ராஜதந்திரம். துணைவேந்தர்கள் நியமனம் பர்னாலா குடும்பத்துக்கே சிக்கலைக் கொடுக்கும் என்கிறார்கள். முதலில் நான் பாடிய பாட்டை இப்போது படியும்... புரியும்!'' என்று உத்தரவு போட்ட கழுகார் தொடர்ந்தார்....

''புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவு போட்​டுள்ளது அரசு.  ஓய்வு பெற்ற நீதிபதியை இதற்காக நியமிக்கப்போகிறார்கள். நீதிபதிகள் ராமன், கே.எஸ்.பக்தவத்சலம், எஸ்.நடராஜன், கே.சுப்பிரமணியன் ஆகியோரில் யாராவது ஒருவர் நியமிக்கப்படலாம். 'விசாரணையை சந்திப்போம்’ என்று ஸ்டாலினும் சொல்லி இருக்கிறார். இதற்குப் பின்னணியாக ஒரு விஷயத்தைச் சொல்கிறது தி.மு.க. தரப்பு. 'இந்த மாதிரியான விசாரணை கமிஷன்கள் எல்லாம் மிரட்டலுக்கு மட்டும்தான் பயன்பட்டது. 1996-2001 தி.மு.க. ஆட்சியில் பெரம்பூர் பாலம் கட்டத் தொடங்கி, முடிவதற்கு முன்பே ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. 2001-ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, நீதிபதி ஆறுமுகம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. ஆனால், அதன் அறிக்கை கடைசி வரையில் வெளிவரவில்லை. பெரம்பூர் பாலத்தில் ஊழல் நடக்கவில்லை என்று நீதிபதி சொல்லி இருந்தார். அதனால்தான், அறிக்கை கடைசி வரையில் வெளியாகவில்லை. ஒருநாள் நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்றார்கள். அது தொடர்பாக அமைக்கப்பட்ட ராமன் கமிஷன், வெங்கடேசப் பண்ணையார் என்கவுன்ட்டர் பற்றிய நீதிபதி ராமன் அறிக்கை ஆகியவையும் இதுவரை வெளியாகவில்லை’ என்று அலட்சியமாகச் சொல்கிறது தி.மு.க. அதனால் இப்போது, 'அரசாங்கப் பணம் கட்டுமான நிறுவனத்தின் மூலமாக கருணாநிதி குடும்பத்துக்கு எப்படிக் கைமாறியது என்பதை நிரூபிப்போம்’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள், அ.தி.மு.க. அமைச்சர்கள்.''

''ம்...''

மிஸ்டர் கழுகு: சி.பி.ஐ. சிக்கலில் தமிழக கோடீஸ்வரர்கள்!

''கருணாநிதியின் உதவியாளர் நித்யா என்கிற நித்தியானந்தன் மீது விரைவில் அதிரடிகள் பாயப்போகின்றன. கடந்த தி.மு.க. ஆட்சியில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக நித்யா நியமிக்கப்பட்டார். ஆனால், அந்தப் பணியை அவர் செய்யாமல், கருணாநிதிக்கு மட்டும் உதவிகரமாக இருந்தார். ஆட்சி மாறிய பிறகு, கருணாநிதியிடம் அவர் அரசு வேலையைப் பார்க்க முடியாது அல்லவா? அதனால், விடுப்பில் இருப்பதாக செய்தித் துறைக்குக் கடிதம் அனுப்பிவைத்தாராம். ஆனால், இப்போதும் அவர் கருணாநிதியோடு வலம் வரும் புகைப்படங்கள் நித்யாவின் பதவிக்கு வேட்டுவைக்கும். 'விடுப்பு என்று சொல்லிவிட்டு எப்படி கருணாநிதியிடம் வேலை பார்க்கலாம்? டெல்லி வரைக்கும் அலையலாம்?’ என்று நித்யாவுக்கு சஸ்பெண்ட் ஆர்டர் ரெடியாம். சீக்கிரமே அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். அதுகுறித்து அவருக்கும் கவலை இருக்காதுதான். ஆனால், அதிரடியாக அவர் மீது வழக்குகளும் பாயும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.''

''டெல்லி விஷயங்களுக்கு வாரும்!''

''கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காத வருத்தம் கருணாநிதிக்கு. ஜூன் 3 அன்று கோர்ட் லிஸ்ட்டில் அந்த வழக்கைச் சேர்க்காமல் நீதிபதி சென்றுவிட்டார். விடுமுறைக் காலம் முடிந்து நீதிமன்றம் திறப்பதற்கு ஒரு மாதம் ஆகிவிடும். அதுவரை உள்ளேதான் என்பது கருணாநிதியைக் கலங்கவைத்தது. அன்றைய தினம் டெல்லி சென்று மகளைச் சந்திக்கத் திட்டமிட்டார் கருணாநிதி. ஆனால், அடுத்தடுத்து டெல்லியில் இருந்து வரும் தகவல்கள், கருணாநிதியை இன்னும் சோர்வடையச் செய்துவிட்டன.''

''என்னவாம்?''

''தமிழகத்தின் செல்வாக்கான தொழில் புள்ளிகளை  சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் மையப் புள்ளியாகச் சொல்லப்படும் ஸ்வான்நிறுவனம் தனது துணை நிறுவனமான சினியுக் மூலமாக

மிஸ்டர் கழுகு: சி.பி.ஐ. சிக்கலில் தமிழக கோடீஸ்வரர்கள்!

214 கோடியை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்தது​தானே கனிமொழி மற்றும் சரத்குமார் கைதுக்குக் காரணம் ஆனது.''

''ஆமாம்!''

''இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும், கலைஞர் டி.வி. சார்பில் சினியுக் நிறுவனத்துக்கு அவசர

மிஸ்டர் கழுகு: சி.பி.ஐ. சிக்கலில் தமிழக கோடீஸ்வரர்கள்!

அவசரமாகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தனர். அதாவது, ஆ.ராசா கைதுக்குப் பிறகுதான் இந்தப் பணம் கைமாறியது. உடனடியாக இவ்வளவு பணத்தைத் திரட்ட கலைஞர் டி.வி-யால் எப்படி முடிந்தது என்பதையும் சி.பி.ஐ. நோண்டியதாம். 'கருணாநிதிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஒரு தொழில் அதிபர்  இந்த உதவியைச் செய்து இருக்கலாம்’ என்று சிலர் தூபம் போட, அது தொடர்பாக சி.பி.ஐ. சில விளக்கங்களை அவரிடம் கேட்டதாகச் சொல்கிறார்கள். 'இரண்டு வருடங்களாக கலைஞர் டி.வி. எங்களது விளம்பரங்களை ஒளிபரப்பியது. அதற்குத்தான் இந்தப் பணத்தை மொத்தமாகக் கொடுத்தோம்’ என்று அந்த மனிதர்கள் விளக்கம் அளித்தார்களாம்.''

''அப்படியா?''

''அமைச்சர் தயாநிதி மாறனை மையமாக​வைத்துக் கிளம்பி உள்ள விவகாரத்தில், 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் பெயர் அடிபடுகிறது. இவர் நடத்திய ஏர்செல் நிறுவனத்துக்குத்தான் தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் செய்ததாகவும்... ஆனால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் இதன் பங்குகளை வாங்கிய பிறகு அனுமதி கிடைத்ததாகவும் டெல்லி மீடியாக்கள் போட்டுத் தாக்குகின்றன. இந்த சந்தேக வலையை சி.பி.ஐ. வசம் பின்னிவிட்டவரே சிவசங்கரன்தான் என்றும், கடந்த மே 15-ம் தேதி சி.பி.ஐ. வசம் சிவசங்கரன் ஒரு கடிதத்தைத் தாக்கல் செய்து உள்ளதாகவும் தகவல்.

சிவசங்கரனைப் பின்னால் இருந்து இயக்கும் ஆட்கள், சென்னையில் அதுவும் குடும்ப உட்பகை நபர்களாகவே இருக்கிறார்கள் என்பதும் கூடுதல் தகவல். 'செல்வாக்கான குடும்பத்தின் பெண்மணி ஒருவர் டெல்லி ஹோட்டல் ஒன்றில் சிவசங்கரனை சந்தித்துப் பேசினார். அதன் பிறகுதான் இந்தக் கடிதத்தை அவர் சி.பி.ஐ-க்கு அனுப்பினார்’ என்கிறார்கள் டெல்லியில். இந்த வாக்குமூலங்களை வைத்து சி.பி.ஐ. என்ன செய்யப்போகிறது என்பது ஒரு சில நாட்களில் தெரிந்துபோகும்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பத் தயாரான கழுகார்...

''கலைஞர் டி.வி.க்கு எப்படிப் பார்த்தாலும் சிக்கல் உறுதி என்று நினைக்கும் அதன் நிர்வாகம் புதிதாக 'கலைஞர் ஆசியா’ என்ற புதுச்சேனலைத் தொடங்கும் காரியத்தில் இறங்கி உள்ளதாம். பொதுவாகவே தலைவர்கள் பெயரில் தொடங்கும் சேனல்கள் சிக்கல் ஆவது வழக்கம்தான். ஜெ.ஜெ. டி.வியை ஆரம்பித்தார்கள். அது முடங்கியபிறகு தான் ஜெயா டி.வி. எழும்பியது. இப்போது கலைஞர் டி.வி.க்கு அது நடக்கத் தொடங்கி உள்ளது!'' என்ற பிட்டைப் போட்டுவிட்டுக் கிளம்பினார்.

படங்கள்: சு.குமரேசன், கே.குணசீலன்

பொன்முடி மீது வழக்கு!

''கனிமொழி செய்த குற்றம், நான் செய்த குற்றம்... கலைஞர் தொலைக்காட்சியில் பங்குதாரராக அவர் பெயரைச் சேர்த்தபோது, அவர் மறுத்தார். எதிர்காலத்தில் அவருக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, நான்தான் சேர்த்தேன். கனிமொழி இன்றும் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார். அந்தக் கொடுமையான வெயிலில் ஒரு மலரை வைத்தால், 10 நிமிடங்களில் வாடிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் அடைபட்டு இருக்கிறார்...'' - திருவாரூரில் கருணாநிதி இப்படிச் சொன்னபோது, வார்த்தைகள் தழுதழுத்தன. ஆனால், கடைசியில் என்ன நினைத்தாரோ... ''என்னுடைய வேதனையைப் பகிர்ந்துகொள்ள வரவில்லை. அந்த வேதனை சுடும் நெருப்பாக என்னை மாய்த்துவிடுவதற்கு முன்பு தி.மு.க-வைக் காக்க... கொள்கை, லட்சியம் காக்க என்ன காரியம் செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டுத்தான் நான் மறைவேன்!' என்று கம்பீரமாகச் சொல்லித்தான் முடித்தார்.

மழை பெய்யாமலே திருவாரூர் நனைந்தது, தி.மு.க. தொண்டர்களின் கண்ணீரால்!  

இந்தக் கூட்டத்தில் பொன்முடி பேச்சுதான் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. 'வந்தவுடன் வேலையைக் காட்டிவிட்டார் ஜெயலலிதா. அந்த அம்மாவுக்குப் பல மொழிகள் தெரியும் எனச் சொல்கின்றனர். தொழிலுக்காகப் பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். நான் படத்தில் நடிப்பதைச் சொல்கிறேன்...'' என்று திருப்பினார். இதை உளவுத் துறையினர் வேகமாகக் குறிப்பெடுத்து உடனடியாக மேலிடத்துக்கு அனுப்பினர். விரைவில், ஏதேனும் வழக்கு பொன்முடி மீது பாயலாம் என்கின்றனர் காவல் துறையினர்.

''இவரை மாதிரி ஆளுங்க ஆபாசமாப் பேசி, தலைவரையும் சிக்கல்ல மாட்டிவிடுறாங்க!'' என்று தொண்டர் ஒருவர் புலம்பியதைக் கேட்க முடிந்தது! 

வானில் மிதந்த வடிவேலு வாழ்த்து!

ஜூன் 3-ம் தேதி கருணாநிதி அதிகப்படியான அப்செட்டில் இருந்தார். இது அழகிரிக்கு வருத்தம் கொடுத்தது. மலேசியாவில் இருந்த நடிகர் வடிவேலுவை போனில் பிடித்து, 'தலைவரிடம் பேசி கொஞ்சம் சந்தோஷப்படுத்துப்பா’ என்று சொல்ல... அடுத்த நிமிடமே மலேசியாவில் இருந்து கோபாலபுரத்துக்கு போன்!

பத்து நிமிடங்கள் சந்தோஷமாகக் கழிந்ததாம் கருணாநிதிக்கு. அப்படியே அழகிரிக்கும் தகவலைத் தந்து அமைதியானாராம் வடிவேலு!

மிஸ்டர் கழுகு: சி.பி.ஐ. சிக்கலில் தமிழக கோடீஸ்வரர்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism