Published:Updated:

சிறுத்தை செயற்குழுவில் சீறிய திருமா

வெளியேற நினைப்பவர்களை வழி அனுப்பி வைக்கிறேன்!

சிறுத்தை செயற்குழுவில் சீறிய திருமா

வெளியேற நினைப்பவர்களை வழி அனுப்பி வைக்கிறேன்!

Published:Updated:
##~##

ட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்த நிலையில்... கடந்த 4-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு.  சிறுத்தைகள் சீறித் தள்ளினார்கள்... 

காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் விடுதலைச் செழியன் மென்மையாக ஆரம்பித்தார். ''ஓர் ஆண்டுக்கு முன்பு வரை மாதம்தோறும் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது. அதை மீண்டும் நடத்த வேண்டும். கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்துவது சரிதான். ஆனால், 'அந்த அணி, இந்த அணி’ என ஒரே மாவட்டத்துக்குள் கட்சியின் மாநில நிர்வாகிகள் கிட்டத்தட்ட 35 பேர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்...'' என்று அவர் சொல்ல, பலரும் கை தட்டி ஆமோதித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுச்சேரி சார்பில் துணைப் பொதுச் செயலாளர் வணங்காமுடி பேசிய வார்த்தைகள் சூட்டைக்

சிறுத்தை செயற்குழுவில் சீறிய திருமா

கிளப்பின. ''ஊர் ஊராக சைக்கிளிலும் பஸ்ஸிலும் பயணம் செய்துதான் இந்த இயக்கம் ஆரம்பத்தில் வளர்ந்தது. இன்றோ, பெரிய பெரிய கார்களில்தான் வருகிறார்கள். முன்னேற்றம்​தான் என மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஏனென்றால், நிலைமை அப்படி... ஊர்ப் பக்கம் கட்சிக் கொடி பறக்கும் கார்கள் பறந்து வர, கட்சிக்காரர்களைத்தான் பார்க்க வருகிறார்களோ என ஆவலாக அருகில் சென்று கேட்டால், 'இங்க 500 ஏக்கர் நிலம் இருக்குதாமே... அதைப் பேசி முடிக்கத்தான் வந்தேன்’னு சொல்றாங்க. கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களையும், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்களையும் வைத்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை எப்படி நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும்?'' என வணங்காமுடி சொன்னதும் அரங்கில் நிசப்தம்.

கொள்கைப் பரப்புச் செயலாளரும், எழுத்தாளருமான கவுதம சன்னா பேச வந்தபோது மேடைக்கு முன்பு சிலர், சீர்காழி வேட்பாளராக நின்று தோற்றுப்போன உஞ்சை அரசனுக்கு எதிராக கோஷமிட, பரபரப்புத் தொற்றிக்கொண்டது. எதிர்ப்பு கோஷம் ஒருவாறு அடங்கிய பிறகு பேசத் தொடங்கிய கவுதம சன்னா, தொடக்கத்திலேயே அதிரடியாகப் பேச, திருமாவளவனைத் தவிர அங்கு இருந்த அனைவருக்கும் முகம் இருண்டுபோனது. ''45 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டோம் எனச் சொல்கிறோம். நாம் சேர்க்க வேண்டியது நம்பர்களை அல்ல; கட்சிக்கு மெம்பர்களைத்தான். நமது கட்சிக்காகப் பணியாற்ற வேண்டிய பொறுப்பாளர்கள், பல இடங்களில் மிக மோசமானவர்களாக, ஏன்... ( கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தினார்!)  போலக்கூட நடந்துகொண்டார்கள். இதை ஏற்கெனவே பல இடங்களில் நான் குறிப்பிட்டு இருக்கிறேன். தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று நினைக்கும் பொறுப்பாளர்கள், மனசாட்சிப்படி, தாங்களாகவே முன்வந்து பதவி விலக வேண்டும். 'கட்சியை முட்டுச்சந்தில் நிறுத்திவிட்டோம்!’ என்ற குற்ற உணர்ச்சி உள்ளவர்கள் தானாகவே பதவி விலகுவது கட்சிக்கு நல்லது...'' என்று அதிரடியாகப் பேச, அரங்கில் கனத்த மௌனம்.

கூட்டம் மொத்தமும் மேடையைப் பார்க்க, எந்தவித ரியாக்ஷனையும் காட்டாமல், பேச்சை உற்றுக்கேட்டபடி இருந்தார், திருமா. அனைவரும் தேர்தலைப்பற்றிப் பேச, முன்னாள் எம்.எல்.ஏ-வான ரவிக்குமார் சித்தாந்தமாகக் கொட்டத் தொடங்கினார். அப்போது மேடையின் பக்கவாட்டுக்குச் சென்ற திருமாவளவன், அவர் முடிக்கும் தருணத்தில்தான் திரும்பி வந்தார்.

சரியாக மதியம் 1 மணிக்கு மைக் பிடித்த திருமா, பேச்சை முடித்தபோது மணி 2.10.

''தேர்தல் அரசியலே வேண்டாம் என இயக்கம் நடத்தியபோது இருந்த மனநிலையில்தான், இன்று நான் இருக்கிறேன். தேர்தல் தோல்விக்கு நானே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். கூட்டணி முடிவைப்பற்றி விமர்சனம் சொல்கிறார்கள். ரவிக்குமார் மட்டும் அல்ல, கூட இருக்கும் பலரும் என்னிடம் ஆலோசனை சொல்லத்தான் செய்வார்கள். ஆனால், அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு முடிவெடுப்பவன் அல்ல  திருமாவளவன். தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறக் கூடாது; நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் அதே கூட்டணி என்ற முடிவை எடுத்தேன். இந்தத் தோல்வியை மனப்பூர்வமாக, ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறேன். ஏனென்றால், இனி ஐந்து ஆண்டுகளுக்கு, என்னிடம் யாரும் பரிந்துரைக் கடிதம் கேட்டு வர மாட்டார்கள். கட்சிக் கட்டமைப்புப் பணியைச் செய்யும்படி மக்கள் உத்தரவு போட்டு இருக்கிறார்கள். என்னை நம்பி இருப்பவர்கள், தொடர்ந்து கட்சியில் பணியாற்றலாம். வெளியேற நினைப்பவர்களை, நானே வழி அனுப்பிவைக்கிறேன்!'' என்று பல சென்டிமென்ட் 'டச்’களுடன் திருமா பேசி முடித்தார். இந்தக் கூட்டத்தில், 'முக்கிய பிரமுகர்கள் சிலரை காணோமே’ என்ற பலத்த முணுமுணுப்பைக் கேட்க முடிந்தது!

- இரா.தமிழ்க்கனல், படம்: என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism