எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியாக வலம் வந்த எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வருகிறார். ' தற்போது முதல்வரின் துறைகளை கவனித்து வரும் ஓ.பி.எஸ்ஸை கண்காணிப்பதுதான் எடப்பாடிக்கு முழுநேர வேலையாக இருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
தமிழக முதல்வர் உடல்நலமில்லாமல் கடந்த 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசு அலுவல்களை கவனிப்பதற்காக பொறுப்பு முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பேசி வந்தன. இதுகுறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவும் தீவிரமாக ஆலோசனை செய்தார். இறுதியாக, 'முதல்வரின் துறைகளை மட்டும் அமைச்சர் ஒருவருக்குப் பகிர்ந்து கொடுக்கலாம்' என்று பேச்சுக்கள் வந்தபோது, 'எடப்பாடியை நியமிக்குமாறு' கோரிக்கை வைத்தார் சசிகலா. ஆளுநரோ, ' அவை முன்னவர் என்ற அடிப்படையிலும் முதல்வருக்கு அடுத்தபடியாக புரோட்டோகால்படி ஓ.பி.எஸ்தான் இருக்கிறார். அவரே முதல்வரின் துறைகளை கவனிக்கட்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார். ஆளுநரின் இந்த அதிரடியை சசிகலா உள்ளிட்டவர்கள் எதிர்பார்க்கவில்லை.
'எடப்பாடி பழனிச்சாமி மீது ஏன் இவ்வளவு நம்பிக்கை?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " வன்னியர்கள் அதிகம் நிறைந்திருக்கும் எடப்பாடி தொகுதியில் வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த பழனிச்சாமிக்கு, தேர்தலில் முக்கியத்துவமான வெற்றிகள் கிடைத்ததில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அணியின் பக்கமே நின்றார். எடப்பாடியின் தீவிர அரசியலுக்குத் தொடக்கத்தைக் கொடுத்தவர் செங்கோட்டையன். கட்சிக்குள் முக்கியத்துவம் கிடைக்கத் தொடங்கியதும், செங்கோட்டையனை ஓரங்கட்டினார். ' தன்னைத் தவிர சேலம் மாவட்ட அரசியலில் யாரும் கோலோச்சிவிடக் கூடாது' என்பதில் தெளிவாக இருக்கிறார். கட்சியின் சீனியர்களான எஸ்.கே.செல்வம், விஜயலட்சுமி பழனிச்சாமி எனப் பலரும் அமைதியாக இருக்கின்றனர். தனக்கு நெருக்கமான வெங்கடாசலத்தை மாநகர் மா.செவாக கொண்டு வந்தார்.
"முதல்வர் மீது காட்டிய விசுவாசத்துக்காகத்தான், 1989-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து எடப்பாடிக்கு எம்.எல்.ஏ சீட் ஒதுக்கப்பட்டு வந்தது. அதிலும், 89 மற்றும் 91 ஆகிய இரண்டு தேர்தல்களில் மட்டுமே வென்றார். அதன்பிறகு தொடர்ந்து தோல்விகள்தான். இடைப்பட்ட காலத்தில் ஆவின் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். சட்டமன்ற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், ஒவ்வொரு எம்.பி தேர்தலிலும் எடப்பாடியின் பெயர் லிஸ்ட்டில் வந்துவிடும். திருச்செங்கோடு மக்களவைத் தேர்தலில் மூன்று முறை போட்டியிட்டு, ஒரே ஒருமுறை வென்றார். 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று வந்த கையோடு, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் பதவியைக் கொடுத்தார் ஜெயலலிதா. இதற்கு முக்கியமான காரணம், சேலத்தில் அ.தி.மு.க போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதுதான். கடந்த தேர்தலில் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10-ல் அ.தி.மு.கவுக்கு வெற்றி கிடைத்தது. சசிகலாவின் பூரண ஆசீர்வாதமும் எடப்பாடிக்கு கிடைத்தது. அதன்பிறகு, அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டபோதும், எடப்பாடியின் முக்கியத்துவம் குறையவில்லை.
அரசு தொடர்பான ஒப்பந்தங்களில் அவர் காட்டி வந்த நேர்மையால், பதவிக்கு பங்கமில்லாமல் பார்த்துக் கொண்டார். அமைச்சர்களுக்குள் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர், ஓ.பி.எஸ், பழனியப்பன் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் மீது கார்டன் கோபம் திரும்பியது. அவர்களைப் பற்றி தலைமைக்குக் கூடுதல் தகவல்களைக் கொடுத்ததே, எடப்பாடிதான் என்ற பேச்சும் இருக்கிறது. அதற்கு விசுவாசகமாகத்தான், ஓ.பி.எஸ் வகித்துவந்த பொதுப் பணித்துறை எடப்பாடியின் கைக்குத் திரும்பியது எனவும் சொல்கின்றனர். இன்றைய தேதியில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி, தங்கமணி, வேலுமணி என மூன்று முக்கிய அமைச்சர்களும் சசிகலாவின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்றனர். தேர்தல் உள்பட கொடுக்கப்படும் அசைன்மெண்ட்டுகளைத் தெளிவாக முடித்துக் கொடுப்பதுதான் மிக முக்கியமான காரணம். தலைமைச் செயலாளரை விடவும் எடப்பாடி மீது அதிக நம்பிக்கையோடு இருக்கிறார் சசிகலா" என்றார் அவர்.
"தொடக்ககாலத்தில் சசிகலாவால் முன்னிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ், தற்போது மன்னார்குடி உறவுகளால் வெறுக்கப்படுகிறார். கட்சியில் அவர் முன்னிறுத்தப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான், கவர்னரை சந்திப்பதற்காக ஓ.பி.எஸ் செல்லும்போது, அருகில் எடப்பாடியும் அமர வைக்கப்பட்டார். தலைமைச் செயலகத்துக்கு ஸ்டாலின் வந்தபோதும், எடப்பாடி வரவேற்கிறார். நிதியமைச்சர் எங்கு சென்றாலும், நிழல் போலவே பின் தொடர்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர். இதையும் ஒரு வகையில் வரவேற்கிறார் ஓ.பி.எஸ். ' தான் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்வதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும்' என அமைதியாக இருக்கிறார். முதல்வரின் அதிகாரங்கள் நிதியமைச்சர் கைவசம் இருந்தாலும், எடப்பாடிதான் அனைத்து பணிகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். கோட்டையில் அவரது ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கிறது" என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.
ஐவரணி என்ற பெயரில் கடந்த ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தியவர்களை, ஆட்சியின் முடிவில் களையெடுப்பைத் தொடங்கினார் ஜெயலலிதா. தற்போது மூவரணி என்ற பெயரில் ஆதிக்கம் தொடங்கியிருக்கிறது. ஆட்சியின் முடிவில்தான் இதற்கும் விடை கிடைக்குமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
- ஆ.விஜயானந்த்