Published:Updated:

உத்தரப் பிரதேசத்தின் புதிய முதல்வர் அகிலேஷ் யாதவ்!

உத்தரப் பிரதேசத்தின் புதிய முதல்வர் அகிலேஷ் யாதவ்!
உத்தரப் பிரதேசத்தின் புதிய முதல்வர் அகிலேஷ் யாதவ்!
உத்தரப் பிரதேசத்தின் புதிய முதல்வர் அகிலேஷ் யாதவ்!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக, முலாயம் சிங்கின் மகனும், கட்சியின் மாநிலத் தலைவருமான அகிலேஷ் யாதவை, சமாஜ்வாடி கட்சி தேர்ந்தெடுத்துள்ளது.

இதன் மூலம், 38 வயது அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேசத்தின் இளம் முதல்வர் என்ற சிறப்பைப் பெறவுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், சமாஜவாதி கட்சி 224 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

தேர்தல் முடிவுகள், கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. ஹோலி பண்டிகைக்குப் பின் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், அதன் பின்பும் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நிலை நீடித்தது.
 
கட்சியின் பெரும்பாலானோர், அகிலேஷ் சிங்கை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவரது தீவிரமான பிரசாரம்தான் கட்சி வெற்றி பெற வழிவகுத்தது. எனவே, அதை அங்கீகரிக்கும் வகையில் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றனர்.

ஆனால், இதற்குத் தயக்கம் காட்டும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், முலாயம் சிங் முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று லக்னோவில் நடைபெற்றது.

சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் எம்.பி.க்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசம் கான் சட்டமன்ற கட்சித் தலைவர் பதவிக்கு அகிலேஷ் யாதவின் பெயரை முன்மொழிந்தார். முலாயம் சிங்கின் சகோதரர் சிவ்பால் சிங் யாதவ் இதனை வழிமொழிந்தார்.

சட்டமன்ற சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக இதனை ஏற்றனர்.
இதைத் தொடர்ந்து சட்டமன்ற சமாஜ்வாதி கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அகிலேஷ் யாதவ்...

உத்தரப் பிரதேசத்தின் புதிய முதல்வர் அகிலேஷ் யாதவ்!

சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகனான அகிலேஷ் யாதவ் (வயது 38), ராஜஸ்தானில் உள்ள ராணுவப் பள்ளியில் பயின்றவர். மைசூரில் இளங்கலை பொறியியல் முடித்த பிறகு, சிட்னி பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் பெற்றார்.

பின்னர் தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்த அகிலேஷ், 2000-ல் கன்னவுஜ் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தத் தொகுதியை 2004 மற்றும் 2009 ஆகிய பொதுத் தேர்தல்களிலும் தக்கவைத்துக் கொண்ட அகிலேஷ், கட்சியின் மாநிலத் தலைவரானார்.

அண்மையில் நடந்து முடிந்தத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் நட்சத்திரத் தலைவராக உத்தரப் பிரதேசத்தில் வலம் வந்த அகிலேஷ், மாநிலம் முழுவதும் தனது தலைமையில் தீவிரத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

மாற்றத்தை விரும்பிய உத்தரப் பிரதேச மக்கள் மனத்தில், நம்பகத்தன்மை மிக்க இளம் தலைவராக அகிலேஷ் பதிவானதன் விளைவாகவே, எவரும் எதிர்பாராத அளவுக்கு மகத்தான வெற்றி கிட்டியது என்பது சமாஜ்வாடி கட்சியினரின் வாதம்.