Published:Updated:

பஞ்சாப் முதல்வர் பாதல் பதவியேற்பு: ஜெ.-க்கு அழைப்பு

சென்னை: பஞ்சாப் மாநில புதிய முதல்வராக பிரகாஷ் சிங் பாதல் பதவியேற்கும் நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா சார்பில், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.தம்பிதுரை மற்றும் டாக்‍டர். வா.மைத்ரேயன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்‍குறிப்பில், அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் சிரோன்மணி அகாலிதள் - பாரதிய ஜனதா கட்சிக்‍ கூட்டணி, பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, பிரகாஷ் சிங் பாதல், அம்மாநில முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார்.

பிரகாஷ் சிங் பாதல், முதல்வர் ஜெயலலிதாவை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ள தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துமாறு கேட்டுக்‍ கொண்டார்.

பிரகாஷ் சிங் பாதலின் பதவி​யேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தாம் பெரிதும் விழைந்தாலும், வரும் 18-ம் தேதி நடைபெற இருக்‍கும் சங்கரன்கோயில் இடைத்தேர்தலை முன்னிட்டு, வரும் 14-ம் தேதி தாம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாலும்,

இந்தத் தேர்தல் பிரச்சார நாள் முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டதாலும், தம்மால் நேரில் கலந்து கொள்ள இயவில்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, தமது சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‍ கழகத்தின் சார்பிலும், மு.தம்பிதுரை எம்.பி. மற்றும் வா.மைத்ரேயன் எம்.பி. ஆகியோரை பதவியேற்பு நிகழ்ச்சிக்‍கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார் என தமிழக அரசின் செய்திக்‍குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.