ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்திலுள்ள கந்துகூரில் நேற்று மாலை தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தெலுங்கு தேசக் கட்சியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். இந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு உரையாற்றவிருந்தார்.
அவரின் வருகையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். அந்த இடிபாடுகளில் சிக்கி கீழே விழுந்தவர்களில் இதுவரை 7 பேர் வரை உயிரிழந்ததாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, பொதுக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய சந்திரபாபு நாயுடு, உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.