Published:Updated:

முதன்மைச் செயலாளர் டு பண்பாட்டுத்துறை ஆணையர் -7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ரூ.1.04 கோடியில் புது கார்கள்!

ஐ.ஏ.எஸ்
ஐ.ஏ.எஸ்

எடப்பாடியின் இரண்டு செயலாளர்கள் உட்பட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு 1.04 கோடி மதிப்பில் 7 புதிய கார்கள் தமிழக அரசு வாங்கியிருக்கிறது.

எடப்பாடி அமைச்சரவை கார்களுக்கு அதிகம் செலவழித்து வருகிறது. 2018-ம் ஆண்டு சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசுக் கொறடா ராஜேந்திரன், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என ஆட்சியாளர்களுடன் ரொம்ப நெருக்கமாக இருப்பவர்களுக்காக 11 புத்தம் புது கார்கள் வாங்கிக் கொடுத்தது. அந்த 11 கார்களின் மொத்த மதிப்பு 1.90 கோடி ரூபாய். இதுபற்றி புலனாய்வு செய்து விகடனில் கட்டுரை எழுதியிருந்தோம்.

New Cars
New Cars

`முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடியை மாற்ற வேண்டும்’ எனச் சொல்லி, கவர்னர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். `அப்படி மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அரசுக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டார் சபாநாயகர் தனபால். அதன்பிறகு, அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சமயத்தில்தான் சபாநாயகர், துணை முதல்வர், அமைச்சர், துணை சபாநாயகர், அரசுக் கொறடா, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கார்கள் வாங்கப்பட்டன. தர்மயுத்தம் நடத்திவிட்டு மீண்டும் எடப்பாடியுடன் இணைந்த ஓ.பன்னீர்செல்வமும் பாண்டியராஜனும் முறையே துணை முதல்வராகவும் அமைச்சராகவும் பதவியேற்றார்கள். அவர்கள் இருவருக்கும் புதுக் கார்கள் தரப்பட்டன.

ஜெயஸ்ரீ முரளிதரன்
ஜெயஸ்ரீ முரளிதரன்

இந்த நிலையில், மேலும் புது கார்கள் வாங்கப்பட்ட தகவல் நமக்குக் கிடைத்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இரண்டாவது முதன்மைச் செயலாளராக இருப்பவர் எஸ்.விஜயகுமார் ஐ.ஏ.எஸ். நான்காவது செயலாளராக இருப்பவர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ். இந்த இரண்டு பேருக்கும் 26 லட்சத்து 33,902 ரூபாய் மதிப்பில் இரண்டு கார்களை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். இதற்கான செலவைத் தமிழக அரசின் பொதுத் துறை செய்திருக்கிறது.

உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக மங்கத்ராம் சர்மா இருந்தபோது அவரது அலுவலகப் பயன்பாட்டுக்காக 14.50 லட்சம் மதிப்பில் புதிய கார் வாங்கியிருக்கிறார்கள். உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தொலைதூரக் கல்வி மையங்கள் துவங்கப் பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி வழங்கியதை எதிர்த்து தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனால் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டவர் மங்கத் ராம் சர்மா.

போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் இருந்த நேரத்தில் 15 லட்சத்து 52,250 ரூபாய் மதிப்பில் புதிய கார் வாங்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு ராதாகிருஷ்ணன் வேறு துறைக்குப் போய்விட்டார்.

அதேபோல கலை பண்பாட்டுத் துறை ஆணையருக்கு 12.36 லட்சம் மதிப்பில் கார் வாங்கியிருக்கிறார்கள். கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையருக்கு 16 லட்சத்து 79,700 ரூபாய்க்கு புதிய கார் வாங்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் அலுவலகப் பயன்பாட்டுக்கு 18 லட்சத்து 93,540 ரூபாய்க்கு புதிய கார் வாங்கப்பட்டுள்ளது. இந்தக் கார்கள் கடந்த நிதியாண்டு இறுதியில் வாங்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Value of Cars
Value of Cars

இப்படி 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு வாங்கப்பட்ட கார்களின் மொத்த மதிப்பு 1 கோடியே 4 லட்சத்து 45,563 ரூபாய்.

அடுத்த கட்டுரைக்கு