Election bannerElection banner
Published:Updated:

வேலூர் தி.மு.க: காட்பாடியில் 10-வது முறையாக துரைமுருகன் போட்டி; 7 எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் சீட்

துரைமுருகன்
துரைமுருகன்

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 10-வது முறை போட்டியிட்டாலும், அவர் சந்திக்கும் 12-வது சட்டமன்றத் தேர்தல் இது.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளில் வாணியம்பாடி, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய மூன்று தொகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள 10 தொகுதிகளில் தி.மு.க நேரடியாகப் போட்டியிடுகிறது. இதில், ஏழு சிட்டிங் எம்.எல்.ஏ-களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் 10-வது முறையாக காட்பாடியில் களம்காண்கிறார். வேலூர் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திகேயன், அணைக்கட்டு சிட்டிங் எம்.எல்.ஏ நந்தகுமார், ஆம்பூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சிட்டிங் எம்.எல்.ஏ வில்வநாதன், ஆற்காடு சிட்டிங் எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.காந்தி, திருப்பத்தூர் சிட்டிங் எம்.எல்.ஏ நல்லதம்பி ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன்
வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன்

வாணியம்பாடி தொகுதியைக் கேட்டிருந்த மாவட்டச் செயலாளர் செக்குமேடு தேவராஜுக்கு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணியை எதிர்த்து ஜோலார்பேட்டையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 2016 தேர்தலில் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டு பின்னடைவைச் சந்தித்த அமலு, இந்த முறை குடியாத்தம் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். 2011 தேர்தலில், கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சீத்தாராமனுக்கு இந்த முறை கே.வி.குப்பம் தொகுதியிலேயே சீட் வழங்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 10-வது முறை போட்டியிட்டாலும், அவர் சந்திக்கும் 12-வது சட்டமன்றத் தேர்தல் இது. கருணாநிதிக்கு அடுத்தபடியாக சட்டமன்றத்தில் அரை நூற்றாண்டுக்கால அனுபவமுடையவராகவும் துரைமுருகன் இருக்கிறார். 1971-ல் காட்பாடி தொகுதியிலிருந்து முதன்முறையாக சட்டமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டார் துரைமுருகன். அதன் பின்னர், 1977 மற்றும் 1980-களில் நடைபெற்ற தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1984 தேர்தலில் மறுபடியும் காட்பாடியில் போட்டியிட்டபோது தோல்வியைத் தழுவினார். 1989 தேர்தலில் மீண்டும் காட்பாடியிலேயே களமிறங்கி வெற்றிபெற்றார். தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டதால், 1991-ல் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

ராணிப்பேட்டை எம்.எல்.ஏ ஆர்.காந்தி
ராணிப்பேட்டை எம்.எல்.ஏ ஆர்.காந்தி

அதில் காட்பாடியில் போட்டியிட்ட துரைமுருகன் தோல்வியடைந்தார். 1996 தேர்தலில் மீண்டும் காட்பாடியிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பின்னர், அவருக்கு ஏறுமுகம்தான். 1996-க்குப் பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011, 2016 ஆகிய தேர்தல்களிலும் துரைமுருகனே வெற்றிபெற்று காட்பாடியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். 10-வது முறை காட்பாடியில் களமிறங்கும் துரைமுருகனை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிடுபவர் வி.ராமு. குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இவர் அ.தி.மு.க-வில் முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்தவர். தற்சமயம், குடியாத்தம் கிழக்கு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்புவகிக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு