Published:Updated:

அபாய கட்டத்தில் இன்னுமொரு யானை... பிரம்மாண்டத்தை வீழ்த்துகிறதா மனித சுயநலம்?

 அபாய கட்டத்தில் இன்னுமொரு யானை... பிரம்மாண்டத்தை வீழ்த்துகிறதா மனித சுயநலம்?
அபாய கட்டத்தில் இன்னுமொரு யானை... பிரம்மாண்டத்தை வீழ்த்துகிறதா மனித சுயநலம்?

பிரம்மாண்ட உயிரினமான யானை உயிரிழந்து கிடப்பதைப் பார்க்கும்போதும், மண்ணில் வீழ்ந்து உயிருக்காக போராடுவதை பார்க்கும் போது நிச்சயம் நாம் பரிதாபப்படுவோம். கவலைப்படுவோம். அந்த சம்பவம் நம் மனதைப் பிசையும். ஆனால் உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்த பிரம்மாண்ட உயிரினம் மண்ணில் வீழ... மிக முக்கிய காரணமே மனிதர்களாகிய நாம் தான். நம் சுயநலம் தான்.

யானைகள் அதிகம் வாழும் பகுதியான கோவை வனத்தில் சமீபகாலமாகவே யானைகளின் நிலை கவலைக்குறியதாகவே உள்ளது. யானைகள் ரயிலில் அடிபட்டு இறக்கின்றன. நோய் தாக்குதல்களில் மடிகின்றன. தந்தங்களுக்காக கொல்லப்படுகின்றன. இவை போதாதென்று யானைகளை காக்க வேண்டிய  வனத்துறையின் அலட்சியத்தாலும் யானைகள் இறக்கின்றன. யானைகள் இறப்புக்கு மனித  சுயநலமும், மனித தவறுகளுமே மிக முக்கிய காரணம்.

இப்போது இன்னுமொரு யானை உடல்நலம் குன்றி மண்ணீல் வீழ்ந்து உயிருக்கு போராடுகிறது. கோவை பெரிய தடாகம் சிட்டப்பெருக்கி பள்ளம் வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல்நலக்கோளாறு காரணமாக திடீரென நிலத்தில் விழுந்தது. தகவல் அறிந்து யானைக்கு சிகிச்சை அளிக்கத்துவங்கியிருக்கிறார்கள் வனத்துறையைச் சேர்ந்த மருத்துவர் குழு.

பிரம்மாண்டமாய் இருக்கும் அந்த உயிரினம் மயங்கி கீழே விழுந்திருப்பது என்பதுதான் பரிதாபம். "யானைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. யானைக்கு செரிமான பிரச்னை இருக்கிறது என்கிறார்கள். அப்படி என்றால் யானை உட்கொண்ட உணவில் பிளாஸ்டிக் இருந்திருக்க வாய்ப்புள்ளது' என சூழலியல் ஆர்வலர்கள் சிலர் சந்தேகம் எழுப்பினர்.

"வனத்தில் யானைகளுக்கு உள்ள அத்தனை தொந்தரவுகளும் மனிதர்களால் தான். அதில் முக்கியமானது வழித்தடங்கள், வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பு. வனத்தில் ரிசார்ட்கள் எனும் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு, புத்தாண்டு, பிறந்தநாள், விடுமுறை தினங்கள் என மனிதர்கள் கூடி கொண்டாடுகிறார்கள். மனிதர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகளும், மதுபாட்டில்களும் அப்படியே வனத்தில் தூக்கி எரியப்படுகின்றன. இதில் சில பிளாஸ்டிக் பொருட்களை யானை தெரியாமல் உட்கொள்ள வாய்ப்புள்ளது.

அதேபோல் மது பாட்டில்கள். யானைகளுக்கு பொதுவாக கால்கள் மிக முக்கியமான ஒன்று. பெரும்பாலும் யானைகள் நின்று கொண்டே தூங்கும். யானைகள் நின்று கொண்டிருக்கும்போது தான் அதனால் எளிதில் மூச்சு விட முடியும். அதனால் அதன் கால்களை அது மிக பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளும். ஆனால் வனத்தில் அத்துமீறி நுழைந்து மது அருந்தும் மனிதர்கள், அந்த பாட்டில்களை வனத்தில் அப்படியே வீசிவிட்டுச்செல்கிறார்கள். இவை யானையின் காலில் ஏறி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மணல் மூட்டை போன்ற யானையின் காலில் இந்த பாட்டில் ஏறும்போது, யானையின் எடையின் காரணமாக கிட்டத்தட்ட அந்த மது பாட்டில் கால்களுக்கு சென்று, செப்டிக் ஆகி இறக்கும் சூழல்கூட ஏற்படுகிறது," என சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யானையின் உடல்நிலை குறித்து மருத்துவ குழுவினரிடம் பேசினோம். "இரண்டாவது நாளாக சிகிச்சை அளித்து வருகிறோம். யானைக்கு தண்ணீரும் பழங்களும் உணவாக கொடுக்கப்படுகிறது. தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் க்ரிட்டிக்கல் நிலையை தாண்டவில்லை. இரவு நேரங்களில் யானைக்கூட்டம் வரலாம் என்பதால் பகலில்  மட்டும் சிகிச்சை அளித்து வருகிறோம். பிளாஸ்டிக் உணவை உட்கொண்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. யானையின் சாணத்தை கொண்டு சோதிக்கலாம். ஆனால் இரு தினங்களாக யானை சாணமிடவில்லை," என்றனர்.

யானைகளை நம் சுயநலத்துக்காக அழித்து விடக்கூடாது. நம் சுயநலத்துக்காகவேனும் யானைகளை வாழ விட வேண்டும். ஏனென்றால் யானைகள் வாழ்ந்தால் மட்டுமே வனம் வளமாய் இருக்கும். வனம் வளமாய் இருந்தால் தான் நாம் வளமாய் வாழ முடியும்.

- ச.ஜெ.ரவி,

படங்கள் : தி.விஜய்