Published:Updated:

கர்ணன் சிவாஜியும், கபாலி ரஜினியும்...! மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை..! ஜெயலலிதா டைரி குறிப்புகள் - 6

Vikatan Correspondent
கர்ணன் சிவாஜியும், கபாலி ரஜினியும்...! மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை..! ஜெயலலிதா டைரி குறிப்புகள் - 6
கர்ணன் சிவாஜியும், கபாலி ரஜினியும்...! மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை..! ஜெயலலிதா டைரி குறிப்புகள் - 6

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

“இந்த உலகத்தின், மிகவும் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும், நான் அதற்கு என்னைத் தயார் செய்துகொள்வேன்.” - இது நடிகையாக புகழ்பெற்றபின் ஜெயலலிதா சொன்னது. ஆனால், தொடக்கத்திலிருந்தே அவர் அப்படியான மனநிலையில்தான் இருந்திருக்கிறார். நடிக்க விருப்பமில்லை. ஒரு கட்டாயத்தின் பேரில்தான் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அதை அம்மு விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. படிப்பில், நாட்டியத்தில் எப்படித் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, உச்சங்களைத் தொட்டாரோ அதுபோலத்தான் நடிப்பையும் கையாண்டார். விடுமுறை நாட்களில் தனக்குப் பிடித்த வேலையைச் செய்ய முடியவில்லையே என்ற எந்த ஆயாசமும் அவருக்கு இல்லை. தன் ஆன்மாவிலிருந்து சிறந்ததை எடுத்து வழங்கினார். அதனால்தான் என்னவோ... அவர் வேண்டாம் வேண்டாம் என்றாலும் அவருக்கு வாய்ப்பு வந்துகொண்டே இருந்தது.

ஆம், ‘எபிசில்’ ஆவணப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே... அவருக்கு அடுத்த வாய்ப்பு வந்தது. வாய்ப்புகள் யாருக்காகவும் காத்திருக்காது. அது, வரும்போது இறுகத் தழுவிக்கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால், அவருக்காக வாய்ப்புக் காத்திருந்தது. நாட்கள் கணக்கில் அல்ல... மாதக்கணக்கில். அமெரிக்க நகைச்சுவை நடிகர் மில்டன், “வாய்ப்புகள் கதவைத் தட்டவில்லை என்றால், கதவுகளை நீங்களே உருவாக்குங்கள்...” என்றார். அம்முவுக்கு ஏறத்தாழ ஒன்பது மாதக்காலம், வாய்ப்பு கதவைத் தட்டிவிட்டு, அவர் திறப்பார் என்று வாசலிலேயே காத்துக்கிடந்தது.

காத்திருந்த வாய்ப்பு!

சந்தியா அப்போது, ‘நன்ன கர்த்தவ்யா’ என்ற கன்னடப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அதில், அவருக்கு மாமியார் வேடம். படத்தின் நாயகி, ஒரு பால்ய விதவை. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கச் சரியான நபர் கிடைக்கவில்லை. படத்தின் இயக்குநர் ராகவய்யா இதற்காக ஒரு நெடிய தேடுதல் வேட்டையையே நடத்திவிட்டார். ஆனால், பொருத்தமான நபர்தான் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சலிப்படைந்து, அந்தக் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை விட்டுவைத்துவிட்டு, மற்ற காட்சிகளை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அந்தச் சமயத்தில்தான் மீண்டும் காலம், தன் விளையாட்டைத் தொடங்கியது. ஆம், ஒருநாள் வேறொரு வேலையாக சந்தியாவின் வீட்டுக்கு வந்த தயாரிப்பாளர்கள், அம்முவைப் பார்க்கிறார்கள். திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியின் அதிர்வை பார்வையாளனுக்குக் கடத்த அலை, பறவைகள் எல்லாம் சில நொடிகளுக்கு உறைந்து நிற்குமே.... அதுபோல நின்றதா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் அந்தத் தயாரிப்பாளர்கள் இருவரும் திகைத்துத்தான் போய்விட்டார்கள். அதில், ஒருவர் வாய்விட்டே கூறிவிட்டார். “நாங்கள் தேடிய முகப் பொலிவுள்ள கதாநாயகி இதோ இங்கேயே இருக்கிறாரே... உங்கள் பெண்ணையே எங்கள் கதாநாயகியாகப் போடப் போகிறோம்” என்றார், ஒரு வாய்ப்பை வழங்கிய மனநிலையில். ஆனால், அதற்கு சந்தியா சம்மதிக்கவில்லை.

“முடியாது. அவளுக்கு அதில் விருப்பம் இல்லை. எனக்கும் கூடத்தான்... அவள் படிக்க விரும்புகிறாள். தயவுசெய்து வேறொரு நபரை தேடிக்கொள்ளுங்கள்” என்றார் மென்மையான மொழியில். வந்தவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அரை மனதுடன் கிளம்புகிறார்கள்.

ஆறு மாதங்கள் உருண்டோடிவிட்டன. முக்கியக் கதாபாத்திரம் இல்லாததால், நத்தை வேகத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கிறது. அந்தச் சமயத்தில் மீண்டும் அந்தத் தயாரிப்பாளர்கள் சந்தியாவைச் சந்தித்து, “இன்னும் எங்கள் படத்துக்குக் கதாநாயகி அமையவில்லை. உங்கள் பெண்ணையே தயவுசெய்து நடிக்க அனுமதியுங்கள்’’ என்கிறார்கள். மீண்டும்... மீண்டும் கேட்கிறார்கள். இவர்களை உதாசீனப்படுத்தவும் முடியாது. அதே சமயத்தில், அம்முவை நடிக்க அனுப்பவும் முடியாது. சரி... இன்னும் கொஞ்சம் காலத்தைக் கடத்திப் பார்ப்போம். ஒருவேளை,
அதற்குள் இவர்கள் வேறொரு நாயகியைக் கண்டடையலாம் என்று சமயோஜிதமாக யோசித்து இப்படியாகச் சொல்கிறார். “அம்முவின் படிப்புக் கெடக் கூடாது. அவளுக்குக் கோடை விடுமுறை வரும்வரை காத்திருப்பீர்களா?’’ என்று ஒப்புக்குக் கேட்கிறார். முடியாது என்று சொல்லிவிட்டால் சந்தோஷம்... காத்திருக்கிறோம் என்று சொன்னாலும் பிழை இல்லை. இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. இதுதான் அப்போதைக்கு சந்தியாவின் எண்ணம்.

“சரி காத்திருக்கிறோம்...” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அந்த வாய்ப்பு மூன்று மாதக்காலம், காதலிக்கு காத்திருக்கும் காதலன்போல, அம்முவின் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறது. கோடை விடுமுறை வருகிறது. அந்தத் தயாரிப்பாளர்களும் வருகிறார்கள். ‘‘தொடர்ந்து நடிக்கச் செய்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... உங்கள் மகளை இந்த முறை மட்டும் நடிக்க அனுமதியுங்கள்’’ என்று கேட்கிறார்கள். சந்தியாவுக்கு பலமான யோசனை. நிலைமை கையை மீறிப் போய்விட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. அம்முவை நடிக்க அனுமதித்துவிட வேண்டியதுதானா... என்ற எண்ணம் எழுகிறது. சரி, அம்முவிடமே கேட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு வருகிறார்.

அம்முவிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்கிறார். “என்ன சொல்கிறாய் அம்மு...? எனக்கும் விருப்பம் இல்லைதான். தொடர்ந்து கேட்கிறார்கள், புறந்தள்ள முடியவில்லை... என்ன செய்யலாம்” என்று கேட்கிறார்.   அம்மு இதற்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார் என்பதுதான் சந்தியாவின் எண்ணமாக இருந்தது. ஆனால், அன்று அம்மு என்ன மனநிலையில் இருந்தார் என்று தெரியவில்லை, “நான் திறமையாக நடிப்பேன் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை’’ என்கிறார்.

வாசலில் ஒன்பது மாத காலமாகக் காத்திருந்த வாய்ப்பு, அம்முவை உற்சாகமாகத் தழுவிக்கொள்கிறது.

கேட்காததையும் கொடுத்த கர்ணன்!

‘‘தேடுவதை நிறுத்து... விரும்பியது கிடைக்கும்’’ என்பார் ஓஷோ. ஆனால், அம்முவுக்குத் தொடர்ந்து விரும்பாதது எல்லாம் கிடைத்தது. ஆம், அம்முவுக்கு மீண்டும் இன்னொரு வாய்ப்பு வருகிறது. ‘கர்ணன்’ திரைப்படத்தின் 100 நாள் கொண்டாட்ட விழா ஒருங்கிணைக்கப்படுகிறது. அந்தப் படத்தில் சந்தியாவும் நடித்து இருந்தார் என்பதால், அவரும் விழாவுக்குச் செல்கிறார், கூடவே அம்முவும்.

அந்த நிகழ்ச்சியில் அம்முவைக் கண்ட இயக்குநர் - தயாரிப்பாளர் பி.ஆர்.பந்தலு, அம்முவை தான் எடுக்கப்போகும் கன்னடப் படத்தில் நடிக்கக் கேட்கிறார். மிக முக்கிய இயக்குநரிடமிருந்து வாய்ப்பு... மீண்டும் சந்தியாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தயக்கத்துடன் மறுத்துப் பார்க்கிறார். ஆனால், பந்தலுவும் இந்தக் கோடை விடுமுறையிலேயே படப்பிடிப்பை முடித்துக்கொள்வதாகக் கூறுகிறார். அம்மு, ‘சின்னட கோம்பே’ படத்தில் ஒப்பந்தமாகிறார்.

பரபரப்பான சினிமா வாழ்வில் அம்மு அடி எடுத்துவைத்தது... சொல்லப்போனால், இந்தப் புள்ளியில்தான். கேட்பதைக் கொடுப்பவன்தான் கர்ணன். அந்த ராசிதானோ என்னவோ...? அதன் வெற்றி விழாவில் கலந்துகொண்ட அம்முவுக்குக் கேட்காததெல்லாம் கிடைத்தது.

ஒருவேளை, அன்று அந்தத் தயாரிப்பாளர்கள் வந்தபோது, அம்மு விளையாடப் போயிருந்தால் அல்லது நாட்டிய வகுப்புக்குச் சென்றிருந்தால்... சந்தியா, அம்முவை ‘கர்ணன்’ திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்...? இன்று, தமிழக அரசியல் நிலவரம் எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், எதுவெல்லாம் இருந்திருக்காது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை முதல்வராக இருந்திருக்கமாட்டார். ‘கபாலி’ படத்தை ஜாஸ் சினிமாஸ் வெளியிட்டு இருக்காது. இதுக்கெல்லாம் மேலாக நீங்கள், இப்போது இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கமாட்டீர்கள்.

 (தொடரும்)

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

 - மு.நியாஸ் அகமது