Published:Updated:

அகதிகளால் வந்த அதிரடி யுத்தம்...! எரியும் எல்லைக்கோடு! - 5

Vikatan Correspondent
அகதிகளால் வந்த அதிரடி யுத்தம்...! எரியும் எல்லைக்கோடு! - 5
அகதிகளால் வந்த அதிரடி யுத்தம்...! எரியும் எல்லைக்கோடு! - 5

ராணுவ ரீதியாக இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த யுத்தம் என்று 1971 யுத்தத்தைத்தான் சொல்லவேண்டும். பாகிஸ்தானைத் தோற்கடித்ததோடு மட்டுமின்றி, அந்த நாட்டை இரண்டாகப் பிரித்து வங்கதேசம் என்ற புத்தம் புதிய தேசத்தையே உருவாக்கிக் கொடுத்த யுத்தம் அது. விநோதம் என்னவென்றால், இந்த யுத்தம் ஆரம்பித்தது என்னவோ உள்நாட்டுக்குள்தான். அது மெல்ல மெல்ல இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மூன்றாவது யுத்தமாகப் பரிணாமம் பெற்றது. சற்று விரிவாகப் பேசினால் புரியும்.

இந்தியாவிலிருந்து பிரிந்தது முதலே பாகிஸ்தான் என்ற தேசம் பூகோள ரீதியாக கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிளந்து கிடந்தது. பிரிந்துகிடந்ததில்கூட பிரச்னையில்லை. ஆனால் வளம், வாழ்வு, வளர்ச்சி என்பன போன்ற விஷயங்களில் இரு பகுதிகளுக்கும் இடையே பெரும் வித்தியாசம் நிலவியது.

மொழி ரீதியாகவும்கூட பிளவுகள் இருந்தன. கிழக்கு பாகிஸ்தானியர்கள் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள். மேற்கு பாகிஸ்தானியர்கள் உருது பேசும் முஸ்லிம்கள். அடிப்படை வசதிகள் தொடங்கி அத்தியாவசியக் கட்டமைப்புகள் வரை எல்லாவற்றிலுமே கிழக்கு பாகிஸ்தான் பகுதி ஒருவித பாரபட்சத்தையே எதிர்கொண்டிருந்தது. பள்ளிக்கூடம் கட்டிக்கொடுங்கள் என்று கேட்டால் பத்து மாதங்கள் கழித்துத்தான் என்ன, ஏது என்றே விசாரிக்கவே ஆள் அனுப்புவார்கள். உள்ளாட்சிப் பணிகள் பாதியில் நிற்கின்றன என்று கடிதம் எழுதினால், எட்டிப் பார்ப்பதற்கே எட்டு மாதங்கள் பிடிக்கும். நிதியுதவி என்றால் நிமிர்ந்துகூடப் பார்க்க மாட்டார்கள் ஆட்சியாளர்கள்.

இப்படி எல்லா விஷயங்களிலும் புறக்கணிப்பு, பாராமுகம் காட்டப்பட்டதன் காரணமாக கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்குள் ஒருவித உணர்ச்சிப்போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அதற்கு முகம் கொடுக்க விரும்பினார் ஷேக் முஜிபுர் ரஹ்மான். கிழக்கு பாகிஸ்தான் மக்களின் ஏகோபித்த தலைவர். அவர்களுடைய வளமான வாழ்க்கைக்கான நம்பிக்கை நட்சத்திரம். அந்தப் பிராந்தியத்தில் செல்வாக்கு நிரம்பிய கட்சியான அவாமி லீக்கின் தலைவர்.


மனக் குமுறல்களை எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு வெளியே கொட்டி வீணாக்கிவிடாதீர்கள். விரைவில் தேர்தல் வருகிறது. அதில் உங்கள் உணர்வுகளைக் காட்டுங்கள். ஆட்சியாளர்களுக்குச் சொல்லவேண்டிய செய்திகளை தேர்தல் முடிவுகள் வழியாக அழுத்தமாகச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அவர் சொன்னது போலவே தேர்தல் வந்தது. அப்போது பாகிஸ்தான் ஆட்சியாளராக இருந்தவர் யாஹியா கான். ராணுவ ஆட்சியாளர். அதற்கு முன்பு பதவியில் இருந்த அயூப் கான் ஒப்படைத்துவிட்டுப்போன பதவி. பல ஆண்டுகள் பதவியில் இருந்த அவருக்கு ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தும் ஆசை வந்தது. ஆகவேண்டிய காரியங்களைச் செய்தார். திட்டமிட்டபடி தேர்தல்கள் நடந்துமுடிந்தன. வாக்குகளை எண்ணிப் பார்த்தபோது ஆச்சரியம் காத்திருந்தது.

பூகோள ரீதியாகவும் மனரீதியாகவும் பிரிந்துகிடந்தது போலவே தேர்தல் முடிவுகளின் வழியாகவும் இரண்டாகப் பிளந்துகிடந்தது பாகிஸ்தான். மேற்கு பாகிஸ்தானில் ஜுல்ஃபிகர் அலி புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானிலோ முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

கூட்டிக்கழித்துப் பார்த்தபோது, அவாமி லீக் கட்சிக்கே ஆட்சி அமைக்கும் அளவுக்கான பெரும்பான்மை கிடைத்திருந்தது. அநேகமாக முஜிபுர் ரஹ்மானே ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் கடந்த கால் நூற்றாண்டாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த மேற்கு பாகிஸ்தானியர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. முஜிபுர் பதவியேற்பதற்கு முட்டுக்கட்டை போடத் தொடங்கினர். அதற்கு பாகிஸ்தான் அதிபர் யாஹியா கானின் ஆசியும் இருந்தது.

அதுதான் கிழக்கு பாகிஸ்தானியர்களைக் கொதிநிலைக்குக் கொண்டுசென்றது. அறுதிப் பெரும்பான்மையைவிட அதிகமான இடங்களைப் பிடித்தபிறகும் ஆட்சி அமைக்கத் தடை போடுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தயாராகினர். அதற்கு முன்னதாகக் கொஞ்சம் பேசிப் பார்த்துவிடலாம் என்று மேற்கு பாகிஸ்தானுக்குப் பயணமானார் முஜிபுர் ரஹ்மான்.

அங்கே, அதிபர் யாஹியா கானிடம் பேசினார். புட்டோ தொடங்கி பலரிடமும் பேசினார். ஆனால் எவரும் ஒத்துவருவதாகத் தெரியவில்லை. அப்படியென்றால், எங்களைத் தனியாகப் பிரித்துவிடுங்கள் என்றார் முஜிபுர். அதுதான் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களுக்கான திருப்புமுனைப் புள்ளியாக அமைந்தது.

ஆதங்கத்தோடு வந்த முஜிபுர் ரஹ்மான் கிழக்கு பாகிஸ்தான் மக்களிடம் பேசத் தொடங்கினார். ஆற்றாமை வந்துவிட்டால் அக்கம் பக்கத்தில் புலம்புவது தவிர்க்கமுடியாது அல்லவா. அப்போது அவருக்கு நெருக்கமாக இருந்த இந்திய உளவுத்துறை அதிகாரிகள் சிலரிடம் கொஞ்சம் மனம்விட்டுப் பேசினார் முஜிபுர். விஷயம் யாஹியா கானின் கவனத்துக்குச் சென்றுவிட்டது.

கிழக்கு பாகிஸ்தானை முன்வைத்து உருவாகியிருக்கும் குழப்பக் குட்டையில் இந்தியா மீன்பிடிக்கத் தயாராகிவிட்டதோ என்று சந்தேகப்பட்டார். அதைத் தடுக்கும் முயற்சியாக, “ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறாய்” என்று சொல்லி முஜிபுரை அதிரடியாகக் கைது செய்து, மேற்கு பாகிஸ்தான் சிறையில் அடைத்தார் யாஹியா கான்.

அந்த நொடியில் கிழக்கு பாகிஸ்தானுக்குள் புரட்சி வெடித்தது. எங்கு பார்த்தாலும் பதற்றம். ரகளை. உரிமைக்குரல். ஆட்சிக்கு எதிராக ஆக்ரோஷம் நிரம்பிய கோஷம். மக்கள் சாலையில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரிகளில் இருந்து வெளியே வந்த மாணவர்களும் இளைஞர்களும் யாஹியா கானுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பினர். அவர்களை அடக்க வேண்டிய காவல்துறையோ கைகட்டி வேடிக்கை பார்த்தது. ஆம், காவலர்களும் கிழக்கு பாகிஸ்தானியர்கள்தானே… ஓரவஞ்சனையை அனுபவித்தவர்கள்தானே.. 

காவலர்கள் கைகட்டி நிற்கிறார்கள். மருத்துவர்கள். வழக்கறிஞர்கள். ஆசிரியர்கள். படிப்பு வாசனை உள்ள அத்தனைபேரும் பிரச்னை செய்கிறார்கள். எனில், ராணுவத்தை அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவுக்கு வந்தார் அதிபர் யாஹியா கான். ஆம், சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவத் தாக்குதல் நடத்தத் தயாரானார். ஒருவகையில் அது அவர்கள் மீது தொடுக்கும் யுத்தத்துக்குச் சமம். அதனாலென்ன என்று சொல்லி ராணுவத்தை அனுப்பிவைத்தார்.

இறங்கிய வேகத்தில் தாக்குதல். கண்மூடித்தனமான தாக்குதல் என்று சொல்ல முடியாது. நிச்சயமாகக் கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு நடத்திய தாக்குதல் அது. கிழக்கு பாகிஸ்தானியர்கள் யார், வங்காளிகள் யார் என்று துல்லியமாகத் தெரிந்துகொண்டு தாக்கினர். விரட்டி விரட்டிக் கைது செய்யப்பட்டனர் வங்காளிகள்.

அடி தாங்கமுடியவில்லை. திருப்பி அடித்தால் ஒழிய தப்பிக்க வழியில்லை என்ற நிலை. இத்தனைக்கும் கிழக்கு பாகிஸ்தானில் ஒரு ராணுவப்பிரிவு உண்டு, மேற்கில் உள்ளது போலவே. ஆனால் இது அதிருப்தி ராணுவம். அதன் தளபதியாக இருந்தவர் ஜியாவுர் ரெஹ்மான். முஜிபுர் ரஹ்மானின் நம்பிக்கைக்குரியவர். அவரைவிட ஒருபடி மேலே சென்று, புதிய பிரகடனம் ஒன்றை வெளியிட்டார் ஜியாவுர் ரெஹ்மான்.


‘வங்கதேசம் இனி விடுதலை பெற்ற தேசம்.’

பதற்ற நெருப்பு பற்றிக்கொண்டது கிழக்கு பாகிஸ்தானில். அதில் தெறித்து விழுந்த ஒரு பொறி, முக்தி பாஹினி. பங்களாதேஷ் என்ற தேசத்தை உருவாக்கவேண்டும் என்ற கனவில் இருந்து கருவான இயக்கம் அது. முழுக்க முழுக்க இளைஞர்களைக் கொண்ட இயக்கம். அதுவும் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள். வாருங்கள். ஒன்றிணைந்து எதிர்கொள்வோம். கிழக்கு பாகிஸ்தான் ராணுவம், பாரா மிலிட்டரி படை, முக்தி பாஹினி எல்லோரும் கரம் கோத்தனர். முக்கியமாக, வங்கதேச மக்கள்.

திருப்பி அடிக்கத் தயாரானது கிழக்கு பாகிஸ்தான். ஒரு பக்கமாகவே இருந்த தாக்குதல் இருதரப்பு யுத்தமாக மாறத் தொடங்கியது. என்னதான் சுதந்தர வேட்கையுடன் போரிட்ட போதும் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னால் முக்தி பாஹினியும் கிழக்கு பாகிஸ்தான் ராணுவமும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முழு வீச்சில் இறங்கியிருந்தது ராணுவம். ஆனாலும் யுத்தம் தொடர்ந்தது.


 

போரில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த மக்கள் எப்படியாவது தப்பிக்க விரும்பினர். அப்போது அவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு அகதி அவதாரம் எடுப்பது மட்டும்தான். புறப்பட்டுவிட்டனர் இந்தியாவை நோக்கி. மூட்டை முடிச்சுகளோடு. கண்ணீரால் நனைந்த கண்களோடு. நிலப்பரப்பை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் பாகிஸ்தானைவிட மிகப்பெரிய தேசம் இந்தியா. இருப்பினும் திடீர் இடப்பெயர்ச்சியை எந்த தேசமும் அவ்வளவு சுலபமாக எதிர்கொள்வது சாத்தியமில்லை. கிழக்கு பாகிஸ்தானில் இருந்து அலை அலையாக இந்தியாவுக்குள் நுழைந்தனர் அகதிகள்.

வருத்தத்தைச் சுமந்துகொண்டு வருபவர்களை விரட்டிவிடுவதற்கு இந்தியாவின் ஆன்மா தயாராக இல்லை. எல்லோரையும் உள்ளே அனுமதித்தது. ஆயிரம். பத்தாயிரம். ஐம்பதாயிரம். லட்சம். எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்து ஐம்பது லட்சத்தைத் தொட்டது. வருபவர்கள் வெறும் மூட்டை முடிச்சுகளோடு வரவில்லை. தொற்று நோய்களையும் தோளில் சுமந்துகொண்டு வந்தனர்.

அகதிகள் முகாமைப் பார்வையிடச் சென்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு பகீரென்று இருந்தது. பாகிஸ்தானில் உருவாகியிருக்கும் உள்நாட்டு யுத்தம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான யுத்தமாகப் பரிணமித்துவிடுமோ என்று சந்தேகப்பட்டார். இறுதியில் அதுவே நடந்தது! 

(பதற்றம் தொடரும்)

- ஆர்.முத்துக்குமார்