Published:Updated:

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: மருத்துவர் ஹண்டே பேட்டி!

Vikatan Correspondent
ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: மருத்துவர் ஹண்டே பேட்டி!
ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: மருத்துவர் ஹண்டே பேட்டி!

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் அவரின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. பின்னர் அப்போலோ மருத்துவமனை அளித்த மருத்துவ அறிக்கைகள் ஜெயலலிதா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிகள் வைத்தன. இந்நிலையில், அமெரிக்க மருத்துவர் ரிச்சர்டு, சிங்கப்பூர் மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் என்று பிரதான சிகிச்சை நிபுணர்கள் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

இதனையடுத்து, எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹெச்.வி.ஹண்டே இன்று (வியாழன்) அப்போலோ மருத்துவமனை வந்திருந்தார். முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து மருத்துவர்களிடமும், மூத்த அமைச்சர்களிடமும் கேட்டறிந்தார். பின்னர் அப்போலோ வளாகத்தில் உள்ள செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது,  புரட்சித் தலைவரை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

தற்போது அம்மாவின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள, மருத்துவர் என்ற முறையில் இங்கு வந்தேன். அவருடைய உடல்நிலை நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இப்போது சிங்கப்பூரில் இருந்து இரண்டு பெண் பிசியோ தெரபிஸ்டுகள் வந்துள்ளார்கள். அவர்கள் அம்மா அவர்களுக்கு, பேசிவ் பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்கள். அது நல்ல வகையிலே பயன் தந்துள்ளது. அம்மா விரைவிலேயே வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்." என்று தெரிவித்தார்.