Published:Updated:

5.12 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்: அமைச்சர் தகவல்

Vikatan Correspondent
5.12 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்: அமைச்சர் தகவல்
5.12 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்: அமைச்சர் தகவல்
5.12 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் இன்றுவரை, 5 லட்சத்து 12 ஆயிரத்து 977 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் எழிலகம் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் முதன்மைச் செயலாளர் கே.கோபால், உணவு பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் கே.ராதாகிருஷ்ணன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் மதுமதி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆனந்த் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், தமிழக அரசு செயல்படுத்திவரும் சிறப்பு பொதுவிநியோக திட்டத்துக்கு வழங்கிவந்த மானியத்தை மத்திய அரசு 30.06.2012 உடன் நிறுத்திவிட்ட போதிலும், இதற்கான மானியச்சுமை முழுவதையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டு, மானிய விலையில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில் முதலியவற்றை வழங்கும் இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பச்சரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் மற்றும் பாமாயில் முதலியன நியாயவிலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விநியோகம் செய்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, மண்ணெண்ணெய் முதலிய பொருள்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் வகையில் அருகாமையிலுள்ள நியாயவிலை அங்காடிகளில் போதுமான பொருள் கையிருப்பில் வைக்கப்பட வேண்டும். பொதுவிநியோக திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் 044-28592828 என்ற எண்ணுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் 9445190660, 9445190661, 9445190662 ஆகிய எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும், அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொருள்கள் விநியோகம் சீரான முறையில் நடைபெறுகின்றனவா என்று கண்டறிய சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையினை ஏற்று இதுவரை 625 முழுநேர நியாயவிலை அங்காடிகளும், 1381 பகுதி நேர அங்காடிகளும் திறக்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டை வேண்டி உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 17 லட்சத்து 22 ஆயிரத்து 781 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றுவரை, 5 லட்சத்து 12 ஆயிரத்து 977 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும்.

பொதுவிநியோக திட்ட பொருள்களை கடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை 913 நபர்கள் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசு எடுத்து வரும், விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை வெளிச்சந்தையில் வெகுவாக குறைந்துள்ளது. மாவட்டங்களில் இவ்வகை பொருள்களின் விற்பனை விலையை தொடர்ந்து கண்காணித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்" என்று கூறினார்.