Published:Updated:

தமிழகத்தில் காங்கிரஸ் இல்லை... சோனியா கம்பெனிதான் இருக்கிறது !

பொங்குகிறார் தமிழருவி மணியன்

தமிழகத்தில் காங்கிரஸ் இல்லை... சோனியா கம்பெனிதான் இருக்கிறது !

பொங்குகிறார் தமிழருவி மணியன்

Published:Updated:
##~##

டந்த 8-ம் தேதி, ராஜ்காட்டில் அண்ணா ஹஜாரே உண்ணாவிரதத்தைத் தொடங்க, திருப்பூர் காந்தி சிலை அருகே தமிழருவி மணியன் தலைமையில் வாயில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு ஊழலுக்கு எதிரான அறப்போராட்டம் நடந்தது. அதில் முழங்கி விட்டு இறங்கிய தமிழருவி மணியனை அவரது 'காந்திய மக்கள் இயக்கத்தின்’ தலைமை நிலையத்தில் சந்தித்தோம்! 

''உண்ணாவிரதத்தாலும், இது போன்ற போராட்டங்களாலும் ஊழலை ஒழிக்க முடியுமா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒரு நாள் உண்ணாவிரதத்தாலும், ஒரு மணி நேரப் போராட்டத்தாலும் எந்த ஒரு சமூக மாற்றமும் நிகழ்ந்து விடாது. ஆனால், ஊழலுக்கு எதிராக மக்களிடம் ஒரு கோபத்தை ஏற்படுத்தினார் அண்ணா ஹஜாரே. சட்டம் - ஒழுங்கு கெடாதவாறு மக்கள் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது. இது, கால ஓட்டத்தில் நிச்சயம் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்!''

''தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு பதிலாக மாற்று அரசியல் கட்சி உருவாக வாய்ப்பு உள்ளதா?''

''இப்போது நடந்திருப்பது வெறும் ஆட்சி மாற்றம்தான். அரசியலில் சமுதாய மாற்றமும் உருவாகும்.

தமிழகத்தில் காங்கிரஸ் இல்லை... சோனியா கம்பெனிதான் இருக்கிறது !

நடந்து முடிந்த பொதுத் தேர்தலோடு தி.மு.க. தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கிவிட்டது. கலைஞரைப் போல் மக்களைத் திரட்டவும், வாக்குகளை சேகரிக்கவும் ஆளுமை மிக்க வேறு தலைமை தி.மு.க-வில் இல்லை. எனவே, பெரியாருக்குப் பிறகு தி.க. பெயரளவில் இயங்குவது போல், கலைஞருக்குப் பின் தி.மு.க-வும் அறிவாலயத்தில் மட்டுமே இயங்கும். இந்தத் தி.மு.க-வின் அழிவில் ஒரு வெற்றிடம் உருவாகும். அதை நிரப்புவது, ஆரோக்கியமான மக்கள் நலம் சார்ந்த மாற்று அணியாக இருக்கவேண்டும். அதை உருவாக்கும் முயற்சியில் எங்களது 'காந்திய மக்கள் இயக்கம்’ உருவாகும்!''

''முதல்வர் ஜெயலலிதாவிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?''

''மக்கள் எதிர்பார்ப்பது, இலவசத் திட்டங்கள் அல்ல; ஊழல் இல்லாத தூய்மையான ஆட்சியைத்தான்! வளர்ச்சித் திட்டங்களை ஆக்கபூர்வமாக இந்த அரசு பின்பற்ற வேண்டும். கடந்த ஆட்சியில் தி.மு.க. செய்த தவறுகள், திரும்ப நிகழாதபடி விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். ஊழல் அற்ற தூய்மையான நிர்வாகத்தைக் கொடுக்கத் தவறினால், கருணா நிதிக்குக் கொடுத்த தீர்ப்பை ஜெயலலிதாவுக்கும் வழங்க மக்கள் தயங்க மாட்டார்கள்!''

''இன்று ஊழலுக்கு எதிராகப் போராடும் நீங்கள், இந்திரா கால ஊழல் முதல் மன்மோகன் சிங் காலத்தின் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல் நடந்த வரை காங்கிரஸில்தானே இருந்தீர்கள்?''

''நான் காங்கிரஸில் இருந்தாலும் எந்த ஊழல் பேர் வழியோடும், எந்த நிலையிலும் இணக்கம் கொண்டது இல்லை. ஒரே ஒரு செப்புக் காசைக்கூட தவறான வழியில் என் பொதுவாழ்வில் பெற்றவன் இல்லை. ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் நேர்மை சார்ந்த அரசியலை முன்னிறுத்தவும், தமிழக அரசியலில் எனக்கு முழுமையான தகுதி உண்டு. என் 40 ஆண்டுகால பொதுவாழ்க்கை, ஒரு தவம் போல் நடந்திருப்பதை என்னை அறிந்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். இனி, ஒரு மாற்று அணி உருவெடுக்க என் எழுத்தும், பேச்சும், இடையறாது பயன்படும்!''

தமிழகத்தில் காங்கிரஸ் இல்லை... சோனியா கம்பெனிதான் இருக்கிறது !

''எதிர்காலத்தில் தமிழக காங்கிரஸின் நிலை எப்படி இருக்கும்?''

''தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற பெயரில் சத்தியமூர்த்தி பவனில் செயல்படுவது, சோனியா காந்தியின் ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனிதான்! அரசியல் என்பது ஒரு வேள்வி, அது எப்போதும் தொழில் ஆகி விடக்கூடாது என்றார் காந்திஜி. இன்று தமிழக காங்கிரஸில் உள்ள பல தலைவர்கள் பணத்தைப் பெருக்கவும், அதிகாரத்தைச் சுவைக்கவுமே இருக் கிறார்கள். யாருக்கும் இன நலனில் நாட்டமோ, மொழி மீது பற்றோ, உயர் பண்புகளின் மீது உண்மையான ஈடுபாடோ இல்லை! அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை, தமிழகத்தில் சோனியா காங்கிரஸ் வேர் விடுவதற்கு வாய்ப்பே இல்லை!''

''காந்திய மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருவாகுமா?''

''இது இப்போதைக்கு அரசியல் இயக்கம் இல்லை. மக்கள் பிரச்னைகளுக்கு உரிய தீர்வை உருவாக்கித் தரும் சேவை உணர்வு கொண்ட தொண்டர்களின் பாசறை. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் ஒழுங்காக மக்கள் பணி ஆற்றுகிறார்களா... தவறான வழியில் பொது சொத்தைக் கொள்ளையடிக்கிறார்களா, அதிகாரவர்க்கம் ஊழலுக்கு இடம் தராமல் பணி செய்கிறதா என்பதை எல்லாம் கூர்மையாக கவனிக்கும் காவல் நாய்களாக இருப்பார்கள். தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை எதிர்த்துக் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் வீதிகளில் நின்று, அவர் பதவியை விட்டு விலகப் போராடுவோம்! ஊழலை எதிர்ப்பவர்கள், நல்ல அரசி யலை நாடுபவர்கள் ஆகியோர் எல்லாம் காந்திய மக்கள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டால், மிக விரைவில் ஒரு சமூக மாற்றத்தை எங்களால் உருவாக்க முடியும்.

''ஈழப் பிரச்னையில் ஜெயலலிதாவின் செயல்பாடு குறித்து..?''

''சட்டமன்றத்தில், 'இலங்கை அரசை போர்க் குற்ற வாளிகள் என ஐ.நா., அறிவிக்க வேண்டும், இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை இன உணர்வாளர்கள், நெஞ்சாரப் பாராட்டுகிறோம். ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழவும், தனி ஈழம் அமைத்துத் தரவும் இந்திய அரசைத் தமிழக அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்!''

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism