Published:Updated:

நீர்... நதி... ரத்தம்..! எரியும் எல்லைக்கோடு..! - 7

“அமைதியின் தேவை பற்றிப் பேசுவதற்கு ஆள் அனுப்புவதாக இருந்தால், அந்த நபர் செல்ல வேண்டியது பாகிஸ்தானுக்குத்தானே தவிர, இந்தியாவுக்கு அல்ல

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டுருவல் நடந்திருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஆனாலும் அதைத் திட்டவட்டமாக மறுத்தது பாகிஸ்தான். எனில், தாக்குதலின் வழியாகத்தான் ஊடுருவலை உறுதிசெய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்தது இந்தியா. ‘‘ஆகட்டும்’’ என்று சொல்லிவிட்டார் அடல் பிஹாரி வாஜ்பாய். அதிரடியாகக் களத்தில் இறங்கியது இந்திய ராணுவம். 

26 மே 1999 அன்று இந்தியாவின் பீரங்கித் தாக்குதல்கள் வேகம் பிடித்தன. தாக்குதலில் வீரியம் அதிகமாக இருந்ததால் பாகிஸ்தான் ராணுவம் நேரடியாகக் களமிறங்கியது. இந்தியப் போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் காரணம் சொல்லி, இந்தியாவுக்குச் சொந்தமான மிக் ரக விமானம் ஒன்றையும், ஹெலிகாப்டர் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான் ராணுவம். அதன்மூலம் யுத்தமானது, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அதிகாரபூர்வ யுத்தமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது.

லாகூர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஈரம் காய்வதற்குள் இருதரப்பிலும் எழுந்த யுத்தம் இருநாட்டு ஆட்சியாளர்களையும் கவலைகொள்ளச் செய்தது. ஆனால், ஆரம்பித்துவைத்தது பாகிஸ்தான் என்பதால் பதிலடி கொடுத்ததில் தவறே இல்லை என்பது இந்தியாவின் வாதம். அனைத்துக்கும் அடிநாதமாக இருப்பவர் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப் என்பது பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்குப் புரிந்தது.  உண்மையில், பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கும் இந்தியாவுடன் யுத்தம் நடத்துவதில் ஆர்வமில்லை. தனது ஒப்புதல் இல்லாமலேயே இந்தியாவுக்குள் ஊடுருவல் நடந்தது என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவும் அவருடைய அகந்தை இடம்கொடுக்கவில்லை. சாட்சிக்காரனுக்குப் பதில் சண்டைக்காரனிடமே பேசிவிடலாமே என்ற முடிவுக்கு வந்தார். இந்தியப் பிரதமர் வாஜ்பாயைத் தொடர்புகொண்டார். 

‘‘வேண்டாம், விமானத் தாக்குதல்கள். நிறுத்திக்கொள்ளலாம். போரை நிறுத்திப் பேச்சைத் தொடர்வோம்’’ என்றார். வெற்றி உறுதி என்ற நிலையில்தான் போரையே தொடங்கியது இந்தியா. அதை உறுதிசெய்வதுபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்குத் தாமாக முன்வந்து சமாதான ஓலை நீட்டினார். போதாது, உற்சாகம் தொற்றிக்கொண்டது வாஜ்பாய்க்கு. ‘‘போர் நிறுத்தத்துக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை’’ என்று உதட்டைப் பிதுக்கிவிட்டார் வாஜ்பாய்.

இந்தியாவில் கார்கில் யுத்தம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வலிய வந்து வம்பிழுத்த பாகிஸ்தானுக்குப் பலமான பதிலடி தரப்பட வேண்டும் என்ற கருத்து சராசரி இந்தியர்கள் மனத்தில் அழுத்தமாக உருவானது. இந்திய ராணுவம் தனது வீரத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்தியாக வேண்டிய தருணம் வந்திருப்பதாகக் கருதினர்.

இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில், ஐக்கிய நாடுகள் சபை களத்தில் இறங்கியது. இரு நாடுகளுக்கும் தனது தூதுவர்களை அனுப்புவதாகச் சொன்னார் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான். ஆனால், அதனை பிரதமர் வாஜ்பாய் ரசிக்கவில்லை. 


 

“அமைதியின் தேவை பற்றிப் பேசுவதற்கு ஆள் அனுப்புவதாக இருந்தால், அந்த நபர் செல்ல வேண்டியது பாகிஸ்தானுக்குத்தானே தவிர, இந்தியாவுக்கு அல்ல” - இதுதான் கோஃபி அன்னானுக்கு இந்தியா தரப்பில் கொடுக்கப்பட்ட பதில்.

‘கார்கில் யுத்தத்தை ஆரம்பித்துவைத்தது பாகிஸ்தான்’ என்பது சர்வதேச நாடுகளிடம் அழுத்தமாகச் சொல்லப்பட்டது. குறிப்பாக, லாகூர் ஒப்பந்தத்தின்படி இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்னைகளைப் பரஸ்பரம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஜி-8 நாடுகளின் மாநாட்டில் கோரிக்கை விடப்பட்டது. இனியும் போரைத் தொடராமல், தனது ராணுவத்தைத் திரும்பப்பெற வேண்டுமென பாகிஸ்தானை வலியுறுத்தியது ஐக்கிய நாடுகள் சபை. 

அடுத்து, அமெரிக்கா பேசியது. ‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையிலான யுத்தம் தெற்காசியப் பிராந்தியத்தின் அமைதியைச் சீர்குலைக்கிறது’’ என்று கவலைப்பட்டார் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். அதேவேளையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பாகிஸ்தானுக்குச் சில அறிவுரைகளைக் கொடுத்தார். “அனைத்து பிரச்னைகளுக்கும் அடிப்படை பாகிஸ்தானின் ஊடுருவல்தான். பாகிஸ்தான் ராணுவத்தின் நார்தர்ன் லைட் இன்ஃபாண்ட்ரி படைப் பிரிவுதான் கார்கில் நடவடிக்கைக்குக் காரணம். ஆகவே, அந்தப் படைப் பிரிவையும் இன்னபிறரையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டார் பில் கிளிண்டன். அத்தோடு, தூதுக்குழு ஒன்றையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி, “பின்வாங்குங்கள்” என்று நெருக்கடி கொடுத்தார். 


அமெரிக்காவின் தலையீடு பாகிஸ்தானை யோசிக்கவைத்தது. அமெரிக்க அண்ணன் மிரட்டியதால், சீனத்து அண்ணனிடம் அபயம் கோர முடிவெடுத்தது. உடனடியாக சீனாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அங்கு தமது நிலையை எடுத்துச் சொன்னார். ஒருவேளை, பாகிஸ்தானின் இறையாண்மைக்கு இந்தியாவால் ஆபத்து வந்தால், அதைத் தடுத்து நிறுத்த சீனா களமிறங்கும் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்தது சீனா. சீனாவின் ஆதரவு கொடுத்த தெம்பில் இந்தியாவைச் சற்றே மிரட்டிப் பார்த்தது பாகிஸ்தான். ஆம், இந்தியா யுத்தத்தைத் தொடரும்பட்சத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்றது. ஆனால் இந்தியாவோ வெகு நிதானமாக எதிர்வினை ஆற்றியது.

“அணு ஆயுதம் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவானாலும்கூட, அதை இந்தியா முதலில் செய்யாது. ”அதன் அர்த்தம், “எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், நீங்கள் செய்தால் நாங்களும் செய்வதற்குத் தயங்கமாட்டோம்” என்பதுதான். அதிரடி எச்சரிக்கை விடுத்ததோடு நிற்கவில்லை, அதிரடி நகர்வுகளையும் நடத்தியது இந்தியா. யுத்தம் நடந்துகொண்டிருந்த கார்கில் பகுதியில் மட்டுமின்றி, பஞ்சாப் உள்ளிட்ட பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளை நோக்கி நகர்வதற்கும் ராணுவம் ஆயத்தமானது. அந்தத் தகவல் பாகிஸ்தானைச் சற்றே பயமுறுத்தியது. அந்தப் பதற்றத்துக்கு மத்தியில் கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றிய இந்திய ராணுவம், அந்த வெற்றியை வெகு விமரிசையாகக் கொண்டாடியது. அடுத்து, டைகர் ஹில்ஸ் பகுதியையும் திரும்பப்பெற்றது.


இந்தியா தனது வேகத்தை மேன்மேலும் அதிகப்படுத்திக்கொண்டிருக்க, பிரதமர் நவாஸ் ஷெரீஃபை அழைத்தார் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். போர் நிறுத்தத்தின் அவசியத்தை உணர்த்தினார். அதனைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃப் இறங்கிவரத் தயாரானார். ஆனால், அதற்கு பாகிஸ்தானுக்குள் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. போராளிகளும் எதிர்க் கட்சிகளும், ‘‘போர் நிறுத்தம் கூடாது, ஒருகை பார்த்தே தீரவேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.


12 ஜூலை 1999 அன்று பாகிஸ்தான் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் நவாஸ் ஷெரீஃப், “காஷ்மீர் போராளிகள் கார்கிலைக் கைப்பற்றியதன் நோக்கம், காஷ்மீர் விவகாரத்தை நோக்கிச் சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திருப்புவதுதான். அது நிறைவேறிவிட்டது. அமெரிக்கா தனது தனிப்பட்ட ஆர்வத்தைச் செலுத்தும் என்று உத்தரவாதம் கிடைத்துள்ள நிலையில், அங்கே யாரும் இருக்கவேண்டிய அவசியமில்லை. எல்லை தாண்டிச் சென்ற அனைவரும் உடனடியாகப் பின்வாங்கிக்கொள்ள வேண்டும்” என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஊடுருவல்காரர்கள் பலரும் வெளியேறத் தொடங்கினர். ஆனால், ஒரு தரப்பினர் மட்டும், ‘‘வெளியேற முடியாது. கார்கில் எங்கள் பூமி. எதற்காக நாங்கள் வெளியேற வேண்டும்’’ என்று கேள்விகேட்டு, முரண்டுபிடித்தனர். அந்தச் சமயத்தில் இந்தியாவின் இரு முக்கிய அமைச்சர்களிடமிருந்து எச்சரிக்கைகள் வந்துசேர்ந்தன. 

“ஊடுருவல் கும்பலின் கடைசி நபர் வெளியேறுகின்றவரை இந்திய ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தும்” என்றார் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி. இன்னும் ஒருபடி மேலே சென்ற ராணுவ அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், “இந்திய எல்லைப் பகுதியிலிருந்து வெளியேற மறுத்து, யாரேனும் பேச்சுவார்த்தை.. பிரகடனம்.. இத்யாதி இத்யாதி என்றெல்லாம் பேசினால், அவர்களுடன் நாங்கள் பேசமாட்டோம். எங்கள் ராணுவ வீரர்களின் துப்பாக்கிதான் பேசும்” என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, 70 நாட்களைக் கடந்து நடந்துகொண்டிருந்த இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்தியாவுக்குக் கிடைத்த முக்கியமான யுத்த வெற்றிகளுள் ஒன்றாக கார்கில் பதிவாகிவிட்டது. யுத்தத்தில் கிடைத்த வெற்றியைத் தேர்தல் களத்துக்கும் பயன்படுத்தி வெற்றிபெற்றார் வாஜ்பாய். 

ஆயிற்று, 18 ஆண்டுகள். இன்றுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரிய அளவிலான யுத்தம் என்று எதுவும் உருவாகவில்லை. ஆனால், அதற்கான முயற்சிகள் ஏதும் நடக்கவில்லை என்று சொல்வதற்கில்லை. குறிப்பாக, காஷ்மீரை முன்வைத்து இந்தியாவுடன் போர் நடத்தத் தேவையான தருணங்களை பாகிஸ்தானே பலமுறை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, 2008 மும்பை தாக்குதலைச் சொல்லவேண்டும்.

தீவிரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல்தான் அது என்றாலும், அதன் பின்னணியில் பாகிஸ்தான், அதன் ஆட்சியாளர்கள், அதன் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியன இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. அப்போதும்கூட இருநாடுகளுக்கு இடையே யுத்தம் மூள்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனாலும், கடுமையான எச்சரிக்கைகளோடு நிறுத்திக்கொண்டது இந்தியா. 

தற்போது மோடி தலைமையிலான ஆட்சி வந்திருக்கும் நிலையில் இந்தியா - பாகிஸ்தான் உறவு எப்படியிருக்கும் என்ற கேள்வி சர்வதேச அரங்கில் எழுந்தது. தனது பதவியேற்பு விழாவுக்கு நவாஸ் ஷெரீஃபை அழைத்தது, ஷெரீஃபின் பிறந்தநாளன்று பாகிஸ்தானுக்கே நேரில் சென்று வாழ்த்துச் சொன்னது என்று இணக்கமான சூழ்நிலைதான் இருபக்கமும் தெரிந்தது. ஆனால், அந்த இணக்கத்துக்கு உரி தாக்குதலின் வழியாக ஊறு விளைவித்திருக்கிறது பாகிஸ்தான். சர்ஜிக்கல் தாக்குதல் என்பது அதற்கான எதிர்வினைதான். விளைவு, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் உருவாகியிருக்கிறது.

சிந்து நதியில் நீரும் ரத்தமும் ஒரே சமயத்தில் பாயக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார் பிரதமர் மோடி. அதன் பொருள் வெளிப்படையானது. பாகிஸ்தானின் அடுத்தடுத்த செயல்பாடுகளைக் கொண்டுதான் எல்லைக்கோடு எரியுமா, குளிருமா என்பதைத் தீர்மானிக்க முடியும்!

(முற்றும்...)

- ஆர். முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு