Published:Updated:

' இன்னும் எத்தனை துரோகங்களை செய்வீர்கள் மோடி?'  -சிப்பெட்டால் சீறும் அரசியல் கட்சிகள் 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
' இன்னும் எத்தனை துரோகங்களை செய்வீர்கள் மோடி?'  -சிப்பெட்டால் சீறும் அரசியல் கட்சிகள் 
' இன்னும் எத்தனை துரோகங்களை செய்வீர்கள் மோடி?'  -சிப்பெட்டால் சீறும் அரசியல் கட்சிகள் 

' இன்னும் எத்தனை துரோகங்களை செய்வீர்கள் மோடி?'  -சிப்பெட்டால் சீறும் அரசியல் கட்சிகள் 

சென்னை சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றப்படுவதைக் கண்டித்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளன தொழிற்சங்கங்கள். ' மத்திய அரசு தன்னுடைய முடிவை பரிசீலனை செய்யும் வரையில், எங்கள் போராட்டம் ஓயப் போவதில்லை' எனக் கொதிக்கின்றனர் தொழிலாளர்கள். 

மத்திய அரசின் உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது சிப்பெட் (மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம்). 1968-ம் ஆண்டு முதல் இன்று வரையில் லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமாக உள்ளது. மாணவர்களுக்கான பிளாஸ்டிக் பொறியியல் படிப்புகள், ஆப்ரேட்டர் பயிற்சி வகுப்புகள், தரப் பரிசோதனை மையங்கள் என அசத்தி வருகிறது சிப்பெட். ஊழியர்கள் சம்பளம் உள்பட தனக்கான நிதித் தேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் சிப்பெட்டின் செயல்பாடு உள்ளது. இந்நிலையில், கிண்டி சிப்பெட்டை, டெல்லிக்கு மாற்றும் முடிவை மேற்கொண்டது ரசாயனத்துறை அமைச்சகம். "காவிரி விவகாரத்தின் ஒருகட்டமாகத்தான் சிப்பெட்டை இடம் மாற்றும் பணிகளைத் தொடங்கினர். உரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் கர்நாடகாவைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் லாபகரமாக இப்படியொரு நிறுவனம் இயங்க வேண்டுமா என்ற ஆதங்கத்திலேயே இடமாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர்" என வேதனைப்பட்டார் சிப்பெட் ஊழியர் ஒருவர். 

இந்நிலையில், நேற்று சிப்பெட் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் இறங்கின தொழிற்சங்கங்கள். தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், த.மா.கா, பா.ம.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என அனைத்துக் கட்சிகளும் திரண்டு வந்து ஆதரவு கொடுத்தன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சிப்பெட் தொழிற்சங்கங்களின் ஐக்கிய முன்னணியில் தலைவர் நீலகண்டன், " மத்திய அரசு தன்னுடைய முடிவை விலக்கிக் கொள்ளும் என உறுதியாக நம்புகிறோம். நாளை உரம் மற்றும் ரசாயனத்துறை இணை அமைச்சர் மன்சுக் எல் மண்டாரியா சென்னை வருகிறார். யூனியன் தலைவர்களை அழைத்துக் கொண்டு போய் அவரிடம் இதுபற்றிப் பேசுவதாக உறுதியளித்திருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை. அவர் எங்களிடம், ' உடலில் ஒரு உறுப்பு போய்விட்டாலும் எப்படி சிரமப்படுவோமோ, அதுபோலத்தான் சிப்பெட்டும். என்னுடைய ஒரு கண் போவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்'  எனத் தெரிவித்தார். நேற்று நடந்த தர்ணா போராட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து, மத்திய அமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம். மத்திய அரசு தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளும் என நம்புகிறோம். அடுத்தகட்டமாக, தீவிர உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார் நிதானமாக. 

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் பேசினோம், " பிளாஸ்டிக் தொடர்பான படிப்பில், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது 13 ஆயிரத்து 376 மாணவர்கள் சிப்பெட்டின்கீழ் இயங்கும் மையங்களில் படித்து வருகின்றனர். இதுபோன்ற சிறப்புமிக்க நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற பா.ஜ.க அரசு முயற்சி செய்வதை வன்மையாக கண்டிக்கின்றோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுப்பது, ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க மறுப்பது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழகத்தில் இடம் என மறுப்பது, சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பது என தமிழகம் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசின் துரோகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சென்னையில் உள்ள சிப்பெட் தலைமை அலுவலகத்தை மாற்றுவதற்கு அங்கு பணியாற்றும் 2500-க்கும் மேற்பட்ட பணியாளர்களும் தொழிலாளர்களும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்கள். எனவே, சிப்பெட்டை மாற்றும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்" என்றார் கொதிப்போடு. 

- ஆ.விஜயானந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு