Published:Updated:

ரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ.! இந்திரா நூயியின் வெற்றிக்கதை #HBDIndraNooyi

ரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ.! இந்திரா நூயியின் வெற்றிக்கதை #HBDIndraNooyi
ரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ.! இந்திரா நூயியின் வெற்றிக்கதை #HBDIndraNooyi

ரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ.! இந்திரா நூயியின் வெற்றிக்கதை #HBDIndraNooyi

'இந்திரா நூயி'...உலக வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் வலிமைமிக்க குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் இவரது பிறந்த நாள் இன்று. உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானமான நிறுவனமான 'பெப்சிகோ'வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றி வரும் இந்திரா நூயியின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணம். 

'முடிந்தால் முடியாதது ஏதுமில்லை' 'மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் சிறியதே' என அடுக்குமொழி வசனங்களை எளிதாகப் பேசலாம். ஆனால் இதெல்லாம் சாத்தியமில்லை எனச் சொல்வோர்க்கு இவர் ஒரு நிகழ்கால சான்று. 1955-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த இவரது முழுப்பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. இவரின் வளர்ச்சி மிகவும் நிதானமாகவும் ஆரவாரமின்றியே இன்றியே நிகழ்ந்துள்ளது. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பி.எஸ்ஸி படிப்பும், கொல்கத்தா ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படிப்பும் முடித்த கையோடு சிறிது காலம் ஏ.பி.பி என்னும் வர்த்தக நிறுவனத்திலும், பின் 'ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்' நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து சென்னை பியர்ட்செல் ஆடை நிறுவனத்தில் பணி செய்தார். தன்னுடைய பணி வெற்றிகரமாக இருந்தாலும் கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள எம்.பி.ஏ படித்தது போதாது தனக்கு நெருங்கிய பலரிடமும் தெரிவித்தார். அதனால் தனது வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவின் 'யேல்' பல்கலைக்கழகத்தில் பப்ளிக் மற்றும் பிரைவேட் மேனேஜ்மென்ட் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே படிப்பு செலவுக்காக ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றினார். குறிப்பாக தன்னுடைய ரிசப்ஷனிஸ்ட் பணியை எப்போதும் மறக்க முடியாத அளவுக்கு பல தொழில் அனுபவங்களை அப்பணி எனக்குக் கற்றுக்கொடுத்தது  என அடிக்கடி நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார். முதுகலைப் பட்டம் பெற்றதும் மோட்டோரோலா, ஏசியா பிரவுன் பொவரி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இறுதியாக 1994-ம் ஆண்டு பெப்சி குளிர்பான நிறுவனத்தில் Strategic Planning & Development பிரிவின் துணைத் தலைவராக சேர்ந்தார். பெப்சி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு இவரது வாழ்க்கையும், அந்நிறுவன வளர்ச்சியும் உலகம் முழுக்கவும் புகழ்பெற்றன. 


பெப்சி நிறுவனத்தில் சேர்ந்ததும், 'தற்போதைய நம் வளர்ச்சியும், முன்னேற்றமும் போதாது. இன்னும் நம் தயாரிப்புகளை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கூட்டு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும்' என அடிக்கடி சக ஊழியர்களிடம் சொல்வார். சொல்வதோடு மட்டுமில்லாமல் ஊழியர்களுடன் சேர்ந்து தயாரிப்பு, சேகரிப்பு, விற்பனை, கள ஆய்வு போன்ற பல பணிகளை தானே நேரடியாக களம் இறங்கினார். வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

தொடர்ந்து முந்தைய வேகத்தையெல்லாம் விட கூடுதல் உத்வேகத்துடன் உழைத்தார். உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று, பல தொழிலதிபர்களையும், மக்களையும் சந்தித்துப் பேசினார். தான் சி.இ.ஓ-வாக இருந்தாலும் சக ஊழியர்களுடன் தானும் ஓர் ஊழியர் போலவே எளிமையாகப் பழகினார். உலகம் முழுக்க அந்நிறுவன கிளைகள் அதிகமாகவே நிறுவப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட மாநிலங்களுக்குள்ளாக அந்த மக்களுக்குப் பரிட்சயமான பிரபலங்களைக் கொண்டு பெப்சி விளம்பரங்களைப் பல வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தினார். இந்தியாவில் முன்னணி விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு பெப்சி குளிர்பானத்திற்கான விளம்பரங்களை அதிக அளவில் செய்தார். இதனால் உலகம் முழுக்க பெப்சியின் விற்பனை வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக பெப்சியின் விற்பனை வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். இந்தியாவில் விற்பனையாகும் முதல் ஐந்து குளிர்பானங்களில் பெப்சியும் ஒன்று.

இந்திராவின் திறமைக்கு சி.இ.ஓ பதவியுடன் கூடுதலாக 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடிவந்தது. ஃபார்ச்சுன் பத்திரிகையின் 2006, 2007, 2008, 2009-ம் ஆண்டுகளின் உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார். அந்தச் சமயங்களில் ஓர் இந்தியப் பெண்மணியாக உலகம் முழுக்க இவரது பணித் திறன் பெருமையாக பேசப்பட்டது.


படிப்பைத் தீவிரமாக காதலிப்பவர்; படித்தால்தான் அனைவருமே பல சாதனைகளை புரிய முடியும். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதால் எளிதாக உயர்வடைய முடியும் எனச் சொல்லும் இவரது பிடித்தமான செயல்பாடு ஓய்வு நேரங்களில் பெரும்பாலும் புத்தகங்கள் படிப்பதுதான். மாறிவரும் காலச்சூழலுக்கும் புதுப்புது ரசனைகளுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்ப தனிப்பட்ட முறையிலும் ஒரு நிறுவனத்தின் தலைவர் என்ற முறையிலும் தன்னை மேம்படுத்தியும், அப்டேட் செய்து கொண்டேயும் இருப்பார். புதுப்புது விஷயங்களைத் தயக்கமின்றி தெரிந்தவரிடம் கற்றுக்கொள்வார். இதனால்தான் ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து பெப்சி நிறுவனத்தின் தலைவராகவும், உலகின் முன்னணி வர்த்தக ஆளுமைப் பெண்மணியாகவும் திகழ்கிறார். குறிப்பாக பெப்சி குளிர்பானங்களைத் தடைசெய்ய வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எதிர்ப்புகுரல் ஒலிக்கும் அதே வேளையில், அப்பிரச்னைகளை தகர்த்து நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் இவரது உறுதியான செயல்பாடு பலரும் பாராட்டும்படியாகவே இருக்கிறது. உலகில் அதிகம் சம்பாதிக்கும் நபர்களில் ஒருவராக கருதப்படும் இந்திரா, ஒரு நிமிடத்திற்கு பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக இந்திரா நூயின் வழிநடத்தும் திறனும், தொலைநோக்குத் திறனும், உழைப்பும், இலக்கை சரியாக எய்தும் திறனும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனும், மிகப்பெரிய நிறுவன தலைவராகவும் பெரிய பொறுப்பில் இருக்கிறேன் என்பதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பது இவரது தனிச்சிறப்புகளில் ஒன்று. அத்தகைய குணங்கள்தான் அவரை எளிதாக உயர்வடையச் செய்கிறது என அந்நிறுவன ஊழியர்களும் பல தொழிலதிபர்களும் அடிக்கடி சொல்வார்கள். ஒரு முன்னணி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர் பொறுப்புகளுக்கு நீ, நான் என ஆண்களுக்குள்ளே நேரடியாகவும், மறைமுகமாகவும் மோதிக்கொள்ளும் காலச்சூழலில் ஒரு பெண்ணாக பெப்சி நிறுவனத்தை நிர்வகிக்கும் இவரது ஆளுமை வியக்கத்தக்கதே. இதுகுறித்து இவரிடம் கேட்டால், "ஒரு பெண்ணாக இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறீர்களே? இது எப்படி சாத்தியம் எனப் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான் ஓர் ஆணாக இருந்திருந்தால் தற்போதைய வளர்ச்சியை அடைய இதுவரை நான் செலவழித்த உழைப்பில் பாதியை மட்டும் செலவழித்திருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் நான் ஒரு பெண்மணியாக இருப்பதால் பல தடைகளைத் தாண்டி ஓர் ஆணை விட இருமடங்குக்கும் அதிகமாகவே உழைத்திருக்கிறேன். என் உழைப்பிற்காக நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். ஆனால் இது ஒரு வியக்கத்தக்க வளர்ச்சி அல்ல. இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது. இதைவிட பெரிய உயரத்தை அடைய வேண்டும். அதற்குள்ளாக இந்த வளர்ச்சியையே பெரிதாக பேசினால் எப்படி?" என்கிறார். 

இவரது சிகை அலங்காரமும், ஆடைத்தேர்வுகளும் பலரும் ரசிக்கும் வகையில் தனித்துவமாக இருக்கும். குறிப்பாக இவரது சிரிப்பு பலரையும் வெகுவாக ஈர்க்கும் வகையில் இருக்கும் எனப் பலரும் அவரிடமே தெரிவிப்பார்கள். அப்போது அவரது ரியாக்‌ஷன்.... மீண்டும் ஒருமுறை சிரிப்பது மட்டுமே. இவரது கணவர் ராஜ் கிஷான் நூயி. இவரது பிள்ளைகள், பிரீத்தா மற்றும் டாரா. வணிகத்தில் புகழ்பெற்றது போலவே குடும்பத் தலைவியாகவும், தாயாகவும் தன் பணியை சிறப்போடு செய்துவருகிறார். இந்திரா நூயி...பெண்களைப் புகழும் ஓட்டுமொத்த உலகிற்கான குரல்களில் தவிர்க்க முடியாதது. 'மீண்டும் ஒன்ஸ் அகைன் ஹேப்பி பர்த்டே... இந்திரா நூயி'.

* 2008-ம் ஆண்டில் அமெரிக்க இந்திய வணிகக் கவுன்சில் (USIBC) தலைவரானார்.
* 2007-ம் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதினைப் பெற்றார். 
* போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2016-ம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த டாப் 25 பெண்கள் பட்டியலில் 15-ம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயங்கள்.
                                                                                                                                                                                                       

- கு.ஆனந்தராஜ்

அடுத்த கட்டுரைக்கு