ஸ்பெஷல் -1
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

டலங்களின் மீது நின்று சுய லாபம் தேடுவது அரசியல்வாதிகளுக்குப் புதிதா என்ன?  

ஓட்டு அரசியலுக்கு மட்டுமல்ல; காட்டுத் தீயாகக் கிளம்பி வரும் பிரச்னைகளைத் திசை திருப்பித் தப்புவதற்காகவும்கூட சடலங்களை வைத்து எதிர்த் தீ மூட்டும் தந்திரம் அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை!  

சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட விவகாரங்களில் மூண்டெழுந்த போர்க் குரல்களை அமுக்கிப் போடும் விதமாக அற்பத்தனம் காட்டியிருக்கிறார் காங்கிரஸின் திக்விஜய் சிங். அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு இணையாக உலகத்தையே பதறவைத்த 26/11 மும்பைத் தாக்குதலின்போது, தீவிரவாதிகளை எதிர்கொண்டு, தோட்டாக்களால் உடல் துளைக்கப்பட்டு உயிர் நீத்த காவல் அதிகாரி ஹேமந்த் கார்கரேவின் தியாக மரணத்தை வைத்து, பகடை ஆட்டம் ஆடப் பார்க்கிறார் திக்விஜய் சிங்.  

'இந்து மதவாதத் தீவிரவாதிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஹேமந்த் கார்கரே தன்னிடம் சொன்னார்' என்று, இத்தனை காலம் கழித்து இதை இப்போது ஒரு மேடையில் திக்விஜய் சிங் பேசியதன் உள்நோக்கம் என்ன? ஒட்டுமொத்த தேசத்தையும் கொந்தளிக்கவைத்த பாகிஸ்தானின் பயங்கரவாதம் தொடர்பான வழக்கு விசாரணையின் வீரியத்தைக் குலைக்கும் வகையில் பேசுகிறோம் என்பதை அறியாதவரா இவர்?  

அரசியல்ரீதியாகத் தனக்கு எதிர்முகாமில் இருப்பவர்களைச் சீண்ட நினைத்தால், அதற்கு வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அதை எல்லாம் விடுத்து, ஏற்கெனவே அழிச்சாட்டியத்தின் உச்சத்தில் இருக்கிற அண்டை நாட்டுக்கு நாமே ஒரு ஆயுதத்தை எடுத்துக் கொடுப்பதை எப்படி ஜீரணிக்க முடியும்?

வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள், மறைந்தவர்கள், இனிமேல்தான் பிறக்கவே போகிறவர்கள் என்று யாரை வேண்டுமானாலும் கேவலமான தங்களின் அதிகாரப் பசிக்கு இரையாக்கிக்கொள்ளும் இந்த அவலம் எப்போது விலகும், அரசியலைவிட்டு!