Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
##~##

சிறைவாசம், உடல் சுகவீனம், அறுவைசிகிச்சை... இவற்றின் தொடர் தாக்குதல் தொடுத்த சிரமங்களைக் கடந்து, ஆறு மாத காலத்துக்குப் பிறகு மருத்துவர் ராமதாஸ் முதல்முறையாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். சிறையும் மருத்துவமனையும் ஒரு மனிதனுக்குள் இருக்கும் புனிதனை வெளியே கொண்டுவரும் வல்லமைகொண்டவை என்பார்கள். ஆனால், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ராமதாஸ் கலந்துகொண்ட அந்தக் கூட்டமும், அங்கு விவாதிக்கப்பட்ட கருத்துகளும்... ஏமாற்றப் பெருமூச்சையே வரவழைக்கின்றன!

ராமதாஸின் முயற்சியால் 'அனைத்து சமுதாயப் பேரியக்கம்’ சார்பாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், சாதித் தலைவர்கள் 45 பேர் கலந்துகொண்டு, தனி அணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

திவ்யா-இளவரசன் காதல், மரக்காணம் கலவரம், இளவரசன் மரணம் ஆகியவை உண்டாக்கிய பதற்றம், வட தமிழகத்தில் இன்னும் அனலாகத் தகிக்கிறது. இந்த நிலையில், தன் பெயரிலேயே 'பாட்டாளி’யைத் தாங்கியிருக்கும் பா.ம.க., ஒடுக்கப்பட்ட பாட்டாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த கொள்கைரீதியாக இணையும் இயக்கங்களோடு கைகோத்துப் போராடினால், அது ஏற்றக்கொள்ளக்கூடியது. ஆனால், சமூகரீதியாக, சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்ட பாட்டாளிகளை எதிரியாக்கி, பிற சாதிப் பாட்டாளிகளுடன் கைகோத்து வியூகம் அமைப்பது அதர்மம். இப்படியான ஓர் அணிதிரட்டல், தமிழகத்தின் அமைதிக்கே அச்சுறுத்தல்; ஆபத்து!

'பொதுநலன்’ என்ற கோணம் கொண்டு மட்டுமல்ல, 'சுயநலம்’ என்ற கோணத்தில் பார்த்தாலும் இது பா.ம.க-வுக்கு நிச்சயம் பலன் அளிக்காது.

2001-ம் ஆண்டு தனது தலைமையில் அமைந்த சாதிக் கூட்டணியை, 'சாதிக்கும் கூட்டணி’ என்று அப்போது மார் தட்டினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஆனால், வாக்காளர்களோ, அந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணியைக் குழி தோண்டிப் புதைத்தார்கள். அந்தப் புதைகுழிக்குள் கால் பதிப்பதுதான் இப்போது மருத்துவரின் எண்ணமா?