Published:Updated:

‘பிரதமர்’ ஜெயலலிதா!

பின்னணி ரகசியங்கள்ப.திருமாவேலன்

##~##

டெல்லி... ஜெயலலிதாவின் கனவு பூமி!

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை சாத்தியமானது போலவே, ஒருநாள் டெல்லி செங்கோட்டையும் தன்வசப்படும் என்று ஆசைப்படுகிறார். தமிழ்நாட்டு அரசியலின் அதிகார மையமாக மாறுவதற்கு முன், அவர் அதிகமாக வலம் வந்தது டெல்லியில்தான். மாநிலங்களவையில் அண்ணா அமர்ந்த இருக்கையில் அமர்ந்ததும், இந்திரா காந்தியின் நட்பு கிடைத்தது; ராஜீவ் காந்தியின் அன்பு வாய்த்தது; அதன் மூலமாகத்தான், 1991-ல் கருணாநிதியின் ஆட்சியையே கவிழ்க்க முடிந்தது. 234 தொகுதிகளில் கால் பதிக்காமல் இரண்டு சொட்டு மையில் தன் அரசியல் எதிரியை வீழ்த்த முடியுமானால், டெல்லிதான் அதிகாரபீடத்தின் லட்சிய இலக்கு என்பதை ஜெயலலிதா அப்போதே உணர்ந்துவிட்டார்!

அதே அதிகார மையம் எத்தனை தூரம் ஒருவரை இறுக்கும் என்பதை, 1998-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் கைதானபோது உணர்ந்தார். முதன்முதலாக சிறையைப் பார்த்தார். அதன்பிறகு பக்குவம் அடைந்தவராகக் காட்டிக்கொண்டார். 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அவருடைய முகத்தில் லேசான சிரிப்பை வரவழைத்தது. பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க., வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து லாவகமாக அமைத்த அரசியல் கூட்டணி, பெரும் வெற்றியைப் பெற்றது. அன்று தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், ஏறத்தாழ சட்டமன்ற, நாடாளுமன்றத்தின் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி வைத்திருந்த தி.மு.க. - த.மா.கா. கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளினார் ஜெயலலிதா. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 30 தொகுதிகளை ஜெ. கூட்டணி கைப்பற்றியது.

‘பிரதமர்’ ஜெயலலிதா!

தமிழக சட்டமன்றத்தில் தள்ளிவைக்கப்பட்ட ஜெயலலிதா, டெல்லியில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது அந்த வெற்றிக்குப் பிறகுதான். டெல்லியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு ஆதரவுக் கடிதம் தரத் தொடங்கிய ஒரு பகல் பொழுது முதல், ஆதரவை ஓர் ஆண்டு காலத்துக்குள் வாபஸ் வாங்கிய ஓர் இரவுப் பொழுது வரை போயஸ் கார்டனின் வாசலில் இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் தமிழகக் கிளை செயல்பட்டது. பிரதமர் வாஜ்பாய் தொலைபேசியில் பேசுவார். உள்துறை அமைச்சர் அத்வானி கடிதம் கொடுத்து விடுவார். அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போயஸ் கார்டனில் காத்திருப்பார். அதற்கு அடுத்த சந்திப்பை நடத்துவதற்கு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் சென்னை விமான நிலையத்தில் தயாராக இருப்பார். 'சென்னைக்கு அடுத்த ஃப்ளைட் எப்போ?’ என்பதை மனப்பாடமாகச் சொல்லும் டிராவல்ஸ் ஆளாக அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மாறி இருந்தார். அன்றைய மத்திய அமைச்சரவை கூட்டம் ஒன்றில், 'சென்னையில் இட்லி, சாம்பார் சூப்பரா இருக்கு!’ என்று அமைச்சர் ஒருவர் கமென்ட் அடிக்கும் அளவுக்கு கதிகலக்கினார் ஜெயலலிதா. 'பிரதமர் பதவியே போனாலும் பரவாயில்லை; தினமும் ராத்திரி நிம்மதியாகத் தூங்க வேண்டும்’ என்று வாஜ்பாய் சொல்ல ஆரம்பித்தார். அவரது ஆசை பலித்தது. ஜெயலலிதா, பி.ஜே.பி. ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்கினார். தன்னை மதிக்காத பி.ஜே.பி-க்குப் பாடம் கற்பித்துவிட்டதாக ஜெயலலிதா நினைத்துக்கொண்டிருக்கும்போது, 'நாற்பதாண்டு கால நண்பரே!’ என்று புது சால்வையோடு கருணாநிதி புதுக் கணக்குத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த ஆட்சியைக் காப்பாற்றிய கருணாநிதி, மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் கட்சியாக மாறினார். ஜெயலலிதா, இரண்டு அதிகார மையங்களையும் இழந்தார்!

பக்குவமாகக் கையாளாவிட்டால் டெல்லி உடனடியாகக் கைவிட்டுவிடும் என்ற பாடத்தை, 1999-ம் வருடம் ஜெயலலிதாவுக்குக் கற்பித்தது. தன்னை உதாசீனப்படுத்தியவர்களைப் பழிதீர்க்க என்னென்னவோ செய்துபார்த்தார். ம்ஹூம்... எதுவுமே வசப்படவில்லை. எதுவுமே பலிக்கவில்லை. எதுவுமே நடக்கவில்லை. 14 ஆண்டு காலமாக டெல்லிக்குள் அதிகாரம் செய்ய முடியாத வனவாசம்தான் வாய்த்தது ஜெயலலிதாவுக்கு!

'இனி டெல்லி சென்றால், பிரதமராகத்தான் செல்வேன்!’ என்ற பிடிவாதமான வைராக்கியம் அந்த வனவாசத்தின்போது பிறந்ததுதான். ஆனால், அது சாத்தியமா?

'அடுத்த பிரதமர் அம்மாதான்’ என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் சொல்ல ஆரம்பித்தபோது காமெடியாகத்தான் இருந்தது. ஆனால், இதுவரையிலான டெல்லிக் கணக்குகளை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும், டெல்லியில் எதுவும் சாத்தியம் என்று!

ந்திய நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க, 272 உறுப்பினர்களின் பெரும்பான்மை அவசியம். 1989-ம் ஆண்டில் இருந்து இதுவரை அமைந்த எட்டு அமைச்சரவைக்கும் அது அமையவில்லை. இந்திரா மரணத்துக்குப் பின் நடந்த தேர்தலில், அனுதாப அலை காங்கிரஸுக்கு 415 இடங்களை வாரிக் கொடுத்தது. அடுத்தடுத்த தேர்தல்களில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எந்தக் கவலையுமே இல்லாமல் ஆடாமல் அசையாமல் அசராமல் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்த நரசிம்ம ராவுக்கு, 232 காங்கிரஸ் உறுப்பினர்களின் பலம்தான் இருந்தது. 2004-ல் மன்மோகன் சிங் ஆட்சி அமைக்கும்போது காங்கிரஸுக்கு 145 உறுப்பினர்கள்தான் இருந்தார்கள். கடந்த தேர்தலிலும் 206 இடங்கள்தான் அந்தக் கட்சிக்குக் கிடைத்தன.

பி.ஜே.பி-யும் எப்போதும் அபரிமிதமான ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது இல்லை. 1998-ம் ஆண்டு தேர்தலில் பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றபோது, அந்தக் கட்சிக்கென 179 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருந்தது. 1999-ல் மீண்டும் வாஜ்பாய் பிரதமரானபோது, 182 உறுப்பினர்கள் அவர்களின் பட்டியலில் இருந்தார்கள்.

காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டு கட்சிகளும், மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு பெரும்பான்மை அடைய முயற்சித்தார்கள். 272 இடங்களை அப்போதும் அடைய முடியாவிட்டால், தேர்தலுக்குப் பிறகு கூடுதல் கட்சிகளைக் கெஞ்சிச் சேர்த்து தக்கவைத்தார்கள். எனவே, 272 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்தான் பிரதமர் ஆக முடியும் என்பது இல்லை என்று நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் நிரூபித்துவிட்டார்கள்.

‘பிரதமர்’ ஜெயலலிதா!

காங்கிரஸும் பி.ஜே.பி-யும் தேசியக் கட்சிகள். ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாவிட்டாலும், சுமார் 180 தொகுதிகளைக் கைப்பற்றிவிடுவதால் ஆட்சி அமைக்கத் தேவையான கூடுதல் இடங்களை எளிதில் திரட்டிவிட முடியும். ஆனால், ஜெயலலிதா போன்ற மாநிலக் கட்சித் தலைவருக்கு இது சாத்தியமா?

சாத்தியம்தான் என்பதை நிரூபிக்கவும் இந்திய அரசியலில் உதாரணங்கள் இருக்கின்றன. அறுதிப் பெரும்பான்மை அல்ல, அருகம்புல் பெரும்பான்மைகூட இல்லாமல் இந்தியாவில் பிரதமர் நாற்காலியில் வி.பி.சிங், சந்திரசேகர், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் போன்றவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வி.பி.சிங்கின் ஜனதா தளம் 143 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் வந்துவிடக் கூடாது என்ற நோக்கம்கொண்ட பி.ஜே.பி-யும் வி.பி.சிங் பிரதமராவதை ஆதரித்தது. இதே நோக்கம் கொண்ட இடதுசாரிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அதன் பிறகு சந்திரசேகர் பிரதமர் ஆவதற்கு காங்கிரஸ் கட்சி மனப்பூர்வமாக ஒத்துழைத்தது. ராஜீவ் நினைத்தபோது ஆதரித்தார். மனம் மாறியதும் சந்திரசேகரைக் கவிழ்த்தார்.

1996-ல் காங்கிரஸ் கட்சிக்கு 140 இடங்களும், பி.ஜே.பி-க்கு 161 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை எவருக்கும் இல்லை. பி.ஜே.பி. ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்று காங்கிரஸும், காங்கிரஸ் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்று பி.ஜே.பி-யும் நினைத்தபோது ஐக்கிய முன்னணி அவியல் தென்பட்டது. தேவகவுடாவை பிரதமர் ஆக்கி காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரித்தது. இடதுசாரிகளும் இதனை ஆதரித்தார்கள். ஏனோ தேவகவுடாவை காங்கிரஸுக்குக் பிடிக்காமல்போனது.

ஐ.கே.குஜ்ரால், பிரதமர் நாற்காலிக்கு வந்தார். அடுத்த ஓர் ஆண்டில் அவரது ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது.

நித்ய கண்டமாகவே இருந்தாலும் வி.பி.சிங், சந்திரசேகர், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோரும் இந்தியப் பிரதமர் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்கள். அந்த லாஜிக்படி ஜெயலலிதாவும் அந்த நாற்காலியைப் பிடிக்கலாமே? கடந்த தேர்தல்களைப் போலவே ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை காங்கிரஸுக்கும் பி.ஜே.பி-க்கும் கிடைக்காமல் போனால், அது தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று ஜெயலலிதா நினைக்கிறார். பி.ஜே.பி. ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதால், எவர் ஆட்சியையும் வெளியில் இருந்து ஆதரிக்க காங்கிரஸ் தயங்காது அல்லவா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சந்திரபாபு நாயுடு, நவீன் பட் நாயக் ஆகியோர் இடம்பெறும் மூன்றாவது அணியில் முக்கியப் புள்ளியாக ஜெயலலிதா மாறி, இந்த அணி 120 இடங்களுக்கு மேல் கைப்பற்றினால் அடுத்து அமையும் நாடாளுமன்றத்தில் விசேஷக் கவனிப்பைப் பெறுவார்கள். இந்த அணியில் அதிக அளவிலான எம்.பி-கள் யாரிடம் இருக்கிறது என்ற போட்டியில், தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று ஜெயலலிதா நினைக்கிறார். 'எதிர் அணியால் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க முடியாது’ என்பது அவரது கணிப்பு. எனவே, 35 இடங்களுக்கு மேல் எம்.பி-கள் வைத்திருந்தால், பிரதமர் நாற்காலியை நெருங்கிவிடலாம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா.

பி.ஜே.பி-யும் காங்கிரஸும் போடும் பெரும்பான்மைக் கணக்குத் தவறினால், ஜெயலலிதாவின் கனவு பலிப்பதற்கான வாய்ப்பு உருவாகலாம்!