Election bannerElection banner
Published:Updated:

சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங்கைவிட கோஹ்லி பெஸ்ட். இதோ ஆதாரம்..! #WhyKohliIsBest? #HBDKohli

சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங்கைவிட கோஹ்லி பெஸ்ட். இதோ ஆதாரம்..! #WhyKohliIsBest? #HBDKohli
சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங்கைவிட கோஹ்லி பெஸ்ட். இதோ ஆதாரம்..! #WhyKohliIsBest? #HBDKohli

சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங்கைவிட கோஹ்லி பெஸ்ட். இதோ ஆதாரம்..! #WhyKohliIsBest? #HBDKohli

கோஹ்லி இதுவரை 168 இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார். அவரோடு ஒப்பிடும் போது சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங் ஆகியோர் முதல் 168 இன்னிங்ஸ் வரை எந்தளவுக்கு சாதனைகள் படைத்திருக்கிறார்கள் என்பதை அலசும் கட்டுரை இது. தலைமுறைகள் கடந்த ஒரு வீரரை, இன்னொரு வீரரின் ஆட்டத்தோடு ஒப்பிடுவது சரியில்ல. பிட்ச், வீரர்கள், காலநிலை, எதிரணியின் நிலை, தான் சார்ந்தஅணியின் சூழ்நிலை, பயம், பதற்றம், மேட்சின் நிலை, விக்கெட் வீழ்ச்சி, எதிரே நிற்கும் வீரர், ஆகியவற்றை பொருத்து  ஒரு வீரரின் ஆட்டமுறை வேறுபடும்.தவிர, கிரிக்கெட்டில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஆட்டபாணியில் பெரியளவிலான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனால் இவரை விட இந்த கிரிக்கெட் வீரர் சிறந்தவர் என்பது போன்ற விவாதங்கள் தேவையற்றது. ஆனால் சாதனைகள் என்றோ ஒருநாள் இன்னொருவரால் உடைக்கப்படுவது சகஜமே. ஒரு கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்ற பிறகு அவரது பெயரைச் சொன்னால் பலருக்கும் டக்கென நினைவுக்கு வருவது சாதனை நம்பர்கள் தான். பிராட்மேனின் சராசரி, முரளிதரனின் விக்கெட்டுகள், சச்சினின் நூறு சதங்கள், ஷேவாக்கின் முச்சதங்கள், ரோஹித் ஷர்மாவின் 264 போன்றவை எப்போதும் நினைவில் நிற்கும். இந்த வரிசையில் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை விராட் கோஹ்லி வியக்கத்தக்க சாதனைகளை  தொடர்ந்து செய்து வருகிறார்.

90 களின் இறுதியில் சச்சின் பல முக்கிய சாதனைகளை உடைத்துத்தள்ளினார். அப்போது நாளிதழ்களின் முதல் பக்கத்தில் சச்சின் இன்று இந்த சாதனையை உடைத்தார் என அடிக்கடி செய்திகள் வந்துகொண்டே இருக்கும், உலகம் முழுவதும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாயினர். தொண்ணூறுகளின்  இறுதியில் விளையாடிய சச்சினை அப்படியே நினைவுபடுத்தும் வகையில், விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவதொரு சாதனையை உடைப்பதோ அல்லது புது சாதனையை படைப்பதையோ விராட் கோஹ்லி வழக்கமாக வைத்திருக்கிறார். சரி, வீராட் கோஹ்லியின் பெர்ஃபார்மென்ஸ் குறித்து நம்பர்கள் சொல்லும் விஷயம் என்ன? 

சாம்பியன்களின் சாம்பியன்:- 

சமீபத்தில் நடந்த நியூசிலாந்து எதிரான  ஒருதின போட்டியில் விராட் கோஹ்லி  சதம் அடித்தார். அப்போது டிவியில் காண்பிக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரம் பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. தொடர்ச்சியாக விராட்டின் ஆட்டத்தை கவனிக்காதவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆம். நாற்பத்து ஐந்து ஆண்டுகால  ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சின், பாண்டிங், ஜெயசூரியா போன்றோருக்கு அடுத்தபடியாக அதிக  சதங்கள் விளாசியிருப்பது விராட் கோஹ்லியே தான். குறுகிய கால இடைவெளியில் திடுதிடுவென உலகிலேயே அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்துக்கு வந்துவிட்டார். இந்த வரைபடத்தை உற்றுநோக்கினால் பல விஷயங்கள் உங்களுக்கு புரியும்.

தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களில் போட்டிப் போட்டுக்கொண்டு  சதங்களை விளாசி வருவது கோஹ்லி, டிவில்லியர்ஸ், அம்லா, டீ காக் ஆகிய நால்வரும் தான்.  மற்ற மூவரை விடவும் டீகாக் அதிவேகமாக சதம்/ இன்னிங்ஸ் வைத்திருக்கிறார். எனினும்  சதங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியலில் ஆறு  பேர் மட்டும் ஒப்பிடப்பட்டுள்ளனர். இந்த ஆறு பேரிலும் மெதுவாக  ஆரம்பித்தது சச்சின் தான், ஆனால் 175 ஒருநாள் போட்டிகளுக்கு பிறகு ஜெட் வேகத்தில் கன்னாபின்னாவென சதங்களை விளாசித்தள்ளியிருக்கிறார். ஜெயசூரியா ஆடிய போட்டிகளின் எண்ணிக்கை மிக அதிகம், அவர் அவ்வப்போது சதங்களை அடித்து வந்ததால் 425 போட்டிகளில் 28  சதங்களை அடிக்க முடிந்திருக்கிறது. பாண்டிங் ஆரம்பத்தில் இருந்தே சீராக விளையாடியிருக்கிறார் என்பதை படத்தை பார்த்தாலே புரியும். டிவில்லியர்ஸ் முதல் நூறு போட்டிகளில் ஏழு சதம் அடித்திருக்கிறார். ஆனால் அடுத்த நூறு போட்டியில் வேற லெவல். சுமார் 17  சதங்கள் அடித்து வாயடைக்க வைத்திருக்கிறார்.

வீராட் கோஹ்லி ஆரம்பத்தில் இருந்தே சீராக , மற்ற அனைத்து வீரர்களை விடவும் வேகமாக சதங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறார். அம்லா கோஹ்லியை விட ஜெட் வேகத்தில் பறந்தாலும், சமீப இரண்டு ஆண்டுகளில் சுமாராக ஆடி பிரேக் அடித்து நிற்பதை படம் சொல்லிவிடுகிறது.

சரி இந்தப் படத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்வது என்ன? மூன்று வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டார்கள், டிவில்லியர்ஸும், அம்லாவும் இன்னும் மூன்று ஆண்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடினால் பெரிய விஷயம் தான். ஆனால் 28 வயதாகும் கோஹ்லி இதே பார்மில் விளையாடினால் நிச்சயம் இன்னும் ஆறு  முதல் எட்டு ஆண்டுகள் வரையில் இந்தியாவுக்காக விளையாட முடியும். இதனால் சச்சின் சாதனையை உடைக்கும் வாய்ப்பு கோஹ்லிக்குத்தான் அதிகம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

சேஸிங் கில்லி :-

ஒருநாள்   கிரிக்கெட்டில் கடினமான காரியம் எதுவென்றால் சேஸிங்கில் 250க்கு மேற்பட்ட இலக்கை துரத்தி அணியை ஜெயிக்க வைப்பது  தான்.  சேஸிங் என்றாலே இந்தியாவுக்கு அலர்ஜி என்றிருந்த காலகட்டத்தில் தனியொருவனாக போராடி பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தவர் சச்சின். 17 சதங்களை சேஸிங்கில் விளாசியுள்ளார். சேஸிங்கில் மட்டுமல்ல அணி முதலில் பேட்டிங் செய்யும் போதும் டெண்டுல்கர் வேற லெவல் பேட்ஸ்மேன் தான். அதனால் தான்   ரசிகர்கள் அவரை கிரிக்கெட் கடவுள் என அன்போடு அழைக்கிறார்கள். பாண்டிங், ஜெயசூரியா இருவரும் சேஸிங்கில் சுமாராகவே ஆடியிருக்கிறார்கள்.ஆனால் இவர்கள் எல்லாரையும் விட விதிவிலக்காக சேஸிங்கில் மட்டுமே அதிக சதம் விளாசி 'நான் வேற மாதிரி' எனச்சொல்லியிருக்கிறது இந்த கில்லி கோஹ்லி. சச்சினை மிஞ்சி உலக சாதனை படைக்க வீராட் கோஹ்லிக்கு தேவைப்படுவது இன்னும் இரண்டே சதங்கள் தான். வீராட் கோஹ்லியின் கேரியர் முடிவில் சேஸிங்  சதங்களுக்காகவே  வரலாற்றில் கோஹ்லி நினைவு கூறப்படுவார் என அடித்துச் சொல்ல முடியும்.

டக் அவுட் :- 

168 இன்னிங்ஸ் வரையிலான ஆட்டத்தை கணக்கெடுத்து பார்க்கும்போது பாண்டிங், ஜெயசூரியாவை விட குறைவாக டக் அவுட் ஆகியிருக்கிறார் கோஹ்லி என்பது வெட்ட வெளிச்சம். எனினும் சச்சின் டெண்டுல்கர் கோஹ்லிக்கும் மேலே இருக்கிறார்.

அரைசத மன்னன் :-

அடித்தால் சதம், இல்லையெனில்  சொற்ப  ரன்களில் அவுட்டாவது போன்ற வேலைகளை கோஹ்லி செய்வது கிடையாது. 168 இன்னிங்ஸ் வரையிலான புள்ளிவிவரப்படி  சச்சினையும் நூலிழையில் மிஞ்சி நிற்கிறார் கோஹ்லி. 168  இன்னிங்ஸ்களில் 64 போட்டிகளில்  சதம் அல்லது அரைசதம் அடித்திருக்கிறார் கோஹ்லி என எழுதும்போதே சிலிர்ப்பாக இருக்கிறது.

அதிகபட்ச ரன்கள் :-

இதிலும்  கோஹ்லி தான் கில்லி என்பது படத்தை பார்த்தாலே புரிந்து விடும். 168 இன்னிங்ஸ் வரையிலான கணக்கெடுப்புப்படி  ஜெயசூரியா 151 ரன்களும், பாண்டிங் 145 ரன்களும், சச்சின் 137 ரன்களும் ஒரு போட்டியில் அதிகபட்ச  ரன்களாக குவித்திருக்கின்றனர். கோஹ்லி 183 ரன்களை விளாசி நம்பர் 1 ஆக இருக்கிறார். அது மட்டுமல்ல இரண்டு முறை 150 ரன்களை கடந்திருப்பது சிறப்பம்சம். 

நாட் அவுட் :-

தொடக்க வரிசை மற்றும் மூன்றாவது இடத்தில் விளையாடுபவர்கள் நாட் அவுட்டாக  களத்தில் நிற்பது மிகப்பெரிய விஷயம். எவ்வளவு  முறை நாட் அவுட்டாகி களத்தில் நிற்கிறீர்களோ அந்த அளவுக்கு சராசரி ரன்கள் அதிகமாகும். மைக்கேல் பெவன், தோனி  போன்றோர் உலகளவில் அதிக சராசரி வைத்திருப்பது இப்படித்தான். சச்சின், ஜெயசூரியா, பாண்டிங்கை விடவும் அதிக முறை நாட் அவுட்டாக களத்தில் நின்றிருப்பது கோஹ்லியே!.  சதம் அடிப்பதோடு முடிந்துவிடாமல், கடைசி வரை நின்று அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற பொறுப்போடு விளையாடும் ஒருவரால் தான் இத்தகைய மகத்தான சாதனைகளைச் செய்ய  முடியும்.

சிங்கிள் டிஜிட் :-

168 இன்னிங்ஸ் வரையிலான கணக்கெடுப்புப்படி எத்தனை போட்டிகளில் யார் யார் சிங்கிள் டிஜிட் ஸ்கோர்களில் அவுட்டாகியிருக்கிறார்கள் என்பதும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. ஜெயசூரியா 55 முறையும், சச்சின் 41 முறையும், பாண்டிங் 22 முறையும், கோஹ்லி 33 முறையும் சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாகியிருக்கிறார்கள். சச்சின், ஜெயசூரியாவை விட இங்கேயும்  முன்னணியில் இருக்கிறார் கோஹ்லி.

சராசரியிலும் சிங்கம்:-

கிட்ட நெருங்கவே முடியாத அளவுக்கு தெறித்தன சராசரி வைத்திருக்கிறார் கோஹ்லி. 168 இன்னிங்ஸ் வரையிலான கணக்கெடுப்புப்படி  சச்சின், பாண்டிங், கோஹ்லியை விட பல மடங்கு உயரத்தில் இருக்கிறார் கோஹ்லி. வெறும் சதம், அரைசதம் என நம்பர்களுக்காக மட்டுமே விளையாடாமல் ஒவ்வொரு போட்டியிலும் தன்னால் முடிந்த அளவு ரன்களைச் சேர்க்க வேண்டும் என்ற வெறி கோஹ்லியிடம் இருப்பதால் தான்  ஒன் டவுனாக களமிறங்கி இப்படியொரு  மலைக்க வைக்கும் சராசரியை வைத்திருக்க முடிந்திருக்கிறது கோஹ்லியால்.அம்லா மட்டுமே கோஹ்லி அளவுக்கு தொடக்க வீரராக களமிறங்கி அற்புதமான சராசரி வைத்திருக்கிறார். 

ஸ்ட்ரைக்  ரேட் :-

எழுதுவதே கொஞ்சம் போரடித்துவிடும்  போல இருக்கிறது. இதிலும் வழக்கம் போல கோஹ்லி தான் டாப். "செல்போன் நாள் முழுசும் பேசணும், ஃபிரியாவும் பேசணும்" என பாஸ்கரன் படத்தில் ஆர்யா சொல்ல, "அதுக்கு நீ நேர்ல தான்  போய் பேசணும்" என கவுண்டர் கொடுப்பார் சந்தானம். ஆவெரேஜ்ஜும் நல்லா இருக்கணும், செஞ்சுரியும் அதிகமா அடிச்சிருக்கணும், ஸ்ட்ரைக்ரேட்டும் அதிகமா வச்சுருக்கணும் என கண்டிஷன்கள் போட்டால் அத்தனையிலும் தேறி வருவது இந்த  தெறிப் புலி தான். 

வெற்றி நாயகன் :-

1993 -2003 உலகக்கோப்பை வரையிலான பத்தாண்டு காலத்தில் இந்திய தேசத்தை கிரிக்கெட் உலக அரங்கில் தாங்கிப் பிடித்தது சச்சின் மட்டும்  தான். எதிரணி பவுலர்கள் அத்தனை பேரும் சச்சினை அவுட்டாக்குவதில்  மட்டுமே குறியாக இருப்பார்கள். சச்சின் அவுட்டானால் இந்தியா காலி. சச்சின் அவுட்டானால் டிவியை ஆஃப் செய்யும் மக்கள் எக்கச்சக்கம். சச்சின் அவுட்டான அதிர்ச்சியில் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தபோதே உயிரை விட்டவர்கள் கூட இருக்கிறார்கள். பாகுபலி கணக்காக இந்தியாவை பாதுகாப்பாக கூட்டிச் சென்ற சமயத்தில் விளையாடிய போதும் கூட சச்சின் சதமடித்த போட்டிகளில் இந்தியா 67% அளவுக்கு வெற்றியைச் சுவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் காலத்தில் இந்தியா எழுந்து நின்றது, தோனி காலத்தில் சேஸிங்கில் எங்களாலும் வெற்றி பெற முடியும் எனச் சொன்னது, கோஹ்லி காலத்தில் சேஸிங்கில் இந்தியா அதுக்கும் மேல !

ஜெயசூரியா, பாண்டிங் ஆகியோர் சதமடித்த சமயங்களில் பெரும்பாலும் அந்த அணி வெற்றி பெற்றுவிடும். கோஹ்லி சதம் அடித்து இந்தியா இதுவரை நான்கே போட்டிகளில் மட்டுமே  தோற்றுள்ளது. 25  சதங்களுக்கு மேல் அடித்தவர்கள் என கணக்கெடுத்தால் அதில் அதிக வெற்றி சதவிகிதம் வைத்திருப்பது கோஹ்லி தான்.

இப்படி எல்லா வகையிலும் கோஹ்லி நம்பர் 1 ஆக இருக்கிறார் என்பதை புள்ளி விவரங்கள் ஒப்பிக்கின்றன. கோஹ்லி இந்தியாவுக்காக மட்டுமல்ல உலக அரங்கிலேயே ஒருதின போட்டிகளில் தலைசிறந்த வீரர் என்பதை வரலாறு நிச்சயம் பேசும். பொதுவாக 27 -28 வயதுகளில் தான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் உச்சபட்ச ஃபார்மில் ஆடுவார். ஆனால் 27 வயதுக்கு முன்னதகாவே ஜாம்பவானாக உருவெடுத்துவிட்டார், இப்போதும் அடித்து நொறுக்குகிறார். இனி கோஹ்லி ராஜ்ஜயம் தான்.

அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோஹ்லி.

- பு.விவேக் ஆனந்த் 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு