Published:Updated:

பிரேமலதா பிரசாரத்தில் எங்கும் 100 பேரைத் தாண்டாத கூட்டம்..! அதிர்ச்சியில் தே.மு.தி.க.

Vikatan Correspondent
பிரேமலதா பிரசாரத்தில் எங்கும் 100 பேரைத் தாண்டாத கூட்டம்..! அதிர்ச்சியில் தே.மு.தி.க.
பிரேமலதா பிரசாரத்தில் எங்கும் 100 பேரைத் தாண்டாத கூட்டம்..! அதிர்ச்சியில் தே.மு.தி.க.

கரூர் : அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி, அரவக்குறிச்சி தொகுதியில் இரு தினங்கள் பிரசாரம் மேற்கொண்டார். 12 இடங்களில் பேசிய பிரேமலதாவின் கூட்டத்துக்கு பல இடங்களில் கூட்டம் மிக குறைவாக இருந்தாதால் தே.மு.தி.க.வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் என மூன்று தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருக்க, தே.மு.தி.க.வும் தேர்தல் பிரசாரத்தில் முட்டி மோதி வருகிறது. தே.மு.தி.க. கடைசி நேரத்தில் வேட்பாளர்களை அறிவித்த போதிலும், வேட்பாளர்கள், தொண்டர்கள் என அனைவரும் சுணக்கமாக இருப்பதை உணர முடிகிறது.

மற்ற கட்சிகளுக்கு இணையாக வேகம் கொடுக்கும் வகையில், தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து தனது பிரசாரப் பயணத்தை அறிவித்து, வாக்கு சேகரிப்பையும் துவங்கி விட்டார் பிரேமலதா. ஆனால் அதன் பிறகும் எந்த எழுச்சியும் நடக்கவில்லை.

இடைத்தேர்தல் பிரசாரத்தின் முதல்கட்டமாக அரவக்குறிச்சி தொகுதியில் இரு நாட்கள் பிரசாரம் செய்தார் பிரேமலதா. இரண்டு நாட்களும் 12 பாயின்ட்களில் அவர் பிரசாரம் செய்தார்.  ஆனால் ஒரு பாயின்ட்டில்கூட நூறு பேரை தாண்டவில்லை கூட்டம். இது பிரேமலதா உள்ளிட்ட தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பெரிய அளவில் இல்லாவிட்டாலும், இரு கட்சிகளுக்கு மாற்று என்ற வகையில் ஓரளவு கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டம் மிகக்குறைவாக இருந்தது கட்சி மேல்மட்ட நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இருந்தாலும் பிரேமலதா வழக்கம் போல், தனது பேச்சால் ஆர்ப்பரித்துவிட்டு போயிருக்கிறார். பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், "சினிமாவில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்துகொண்டிருந்த காசைக் கொண்டு கட்சி நடத்தும்,நேர்மையான கேப்டனை அரியணை ஏத்தும் மாற்றத்தை தர யோசிக்கிறீங்க. கலைஞரும்,ஜெயலலிதாவும் மாறி மாறி ஆண்டதில், இன்னைக்கு தமிழகம் தொழில் வளர்ச்சியில் பதினெட்டாவது இடத்துக்கு போயிருக்கு. விவசாய வளர்ச்சியில் பதினேழாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கு. இதுதான் அவங்க இரண்டு பேரும் தமிழகத்தை ஆண்ட லட்சணம்.

'எங்கும் கொள்ளை.எதிலும் லஞ்சம்' இதுதான் அவங்க ஆண்ட முறை. இன்னைக்கு, காவிரியில தண்ணி வராம டெல்டாவுல 3 விவசாயி செத்து போயிருக்காங்க. ஆனால்,ஊருக்கு ரெண்டு டாஸ்மாக்கை திறந்துவிட்டு, எல்லோரையும் குடிகாரர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறது இந்த அரசு. கடந்த தீபாவளி ஒருநாள் விற்பனை மட்டும் 350 கோடி ரூபாய்.  தமிழகத்திலேயே அதிகமா மணல் கொள்ளை நடப்பது இங்குதான். 114 வருஷமா காவிரி பிரச்னை இழுத்துகிட்டு இருக்கிறதுக்கு காரணம், காவிரியில் புல்லா தண்ணி வந்தா, மணல் அள்ள முடியாதுங்கிற பயம்தான். ஆனால்,கேப்டன் நினைத்தால்,மக்கள் சக்தியோடு, அரசாங்கம் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். நதிகளை இணைத்து,டெல்டா விவசாயம் காப்பார்.

இன்னைக்கு முதல்வர் ஐ.சி.யு 45 நாளா இருக்கார். அவர் மட்டுமா இருக்கார். ஒட்டுமொத்த தமிழகமுமேதான் ஐ.சி.யுவுல இருக்கு. இன்னைக்கு உத்தரவு போட, பைல்களில் கையெழுத்து போட ஆள் இல்லைன்னு சொல்லி, ஒட்டுமொத்த தமிழகமுமே முடங்கி இருக்கு. அதேபோல்தான், கலைஞருக்கு 93 வயசாயிருச்சு. அவருக்கும் உடம்புக்கு முடியலை. ரெண்டு பேருக்கும் ஓய்வு கொடுத்துடுவோம்.

இவ்வளவு பேசுறீங்களே, மக்கள் நலக்கூட்டணியோடு சேர்ந்து நீங்க ஏன் ஜெயிக்கலை'ன்னு நீங்க கேட்கலாம். அதுக்கு காரணம் நீங்கதான். 'மாற்றம் வரணும். நீங்க அதை செய்வீங்க'ன்னு நம்பி கேப்டன் மக்கள் நலக்கூடணியோடு கூட்டு வைத்தார். ஆனால், மாற்றம் கொடுக்கலையே. மாற்றம் கொடுத்தால்தானே, தமிழகத்தில் மாற்றம் தர முடியும்.. இந்தமுறையாச்சும் மாற்றம் கொடுங்கள். தி.மு.க, அ.தி.மு.கன்னு மாத்தி மாத்தி ஓட்டை போட்டு, என்ன லாபத்தை அடைஞ்சீங்க.

அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னாடி இங்க அமைச்சரா இருந்தார். அவர் என்ன சாதிச்சார்?. சாதாரண தெருக்கோடியில் இருந்த அவர், இப்போ பல நூறு கோடியை கொள்ளை அடித்து சாதனை பண்ணி இருக்கார். அப்புறம், ஆயிரம் பேரை உட்கார வச்சு மொட்டை போட வைத்தது, லட்சக்கணக்கான விளக்குகளில் அம்மா அம்மான்னு எழுதியதை தவிர என்ன செஞ்சுட்டார் உங்களுக்கு?.

இதே மாவட்டத்துல எம்.பியா இருந்த கே.சி.பி என்ன செஞ்சார். ஜே.சி.பிக்களை நிறைய வச்சு,காவிரியில பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள மணலை அள்ளினார். அதனால், அவர் கே.சி.பி இல்லை,ஜே.சி.பி. மறுபடியும் ஓட்டுக் கேட்டு வரும். அவங்க ஜெயிச்சா, என்ன புதுசா சாதிக்க போறாங்க?. செந்தில்பாலாஜி இன்னும் ஆயிரம் பேரை குந்தவச்சு மொட்டையடிக்க போறார். கே.சி.பி இன்னும் பல ஜே.சி.பிக்களை வச்சு காவிரியில மணலை சுரண்டப் போறார். ஆனால், எங்க வேட்பாளர் அரவை ம.முத்து அப்படிப்பட்டவர் இல்லை. அவரை ஆதரித்து, வெற்றி பெற வைக்க வேண்டும்," என பேசினார்.
கட்சிக்கும், கட்சி தொண்டர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் தேர்தலாக இது இருக்குமா என்பது சந்தேகம்தான்.

- துரை.வேம்பையன்