Published:Updated:

மோடியின் 500, 1000 ரூபாய் அதிர்ச்சி வைத்தியம்! அரசியல்வாதிகள் திண்டாட்டம்... கார்ப்பரேட்டுகள் கொண்டாட்டம்..!

மோடியின் 500, 1000 ரூபாய் அதிர்ச்சி வைத்தியம்! அரசியல்வாதிகள் திண்டாட்டம்... கார்ப்பரேட்டுகள் கொண்டாட்டம்..!
News
மோடியின் 500, 1000 ரூபாய் அதிர்ச்சி வைத்தியம்! அரசியல்வாதிகள் திண்டாட்டம்... கார்ப்பரேட்டுகள் கொண்டாட்டம்..!

மோடியின் 500, 1000 ரூபாய் அதிர்ச்சி வைத்தியம்! அரசியல்வாதிகள் திண்டாட்டம்... கார்ப்பரேட்டுகள் கொண்டாட்டம்..!

‘கறுப்புப் பணத்தை ஒழிப்போம்’ என்ற வாக்குறுதியை வழங்காத ஒரு கட்சி நிச்சயம் இந்தியாவில் இருக்காது. ஒரு மேடையிலாவது இந்த கோஷத்தை முழங்காத ஒரு இந்திய அரசியல்வாதி இருக்கமாட்டார். ஆனால், நாடு விடுதலை அடைந்த 1947-ல் இருந்து, ஒவ்வொரு நாளும், இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பிரசங்கி, கறுப்புப் பணம் மீட்பு பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார். ஏழை இந்தியக் குடியானவன் தன் வாழ்நாள் முழுவதும் இந்தக் கோஷத்தை ஏதோ ஒரு இடத்தில் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், அதற்கான ஆக்கபூர்வ முயற்சிகள் இந்திய மசாலா சினிமாக்களைத் தவிர வேறு எங்கும் எதிலும் எப்போதும் நடந்ததே இல்லை.

காலம்காலமாக இப்படி ஒலித்துக் கொண்டிருந்த கோஷத்தை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. கொஞ்சம் சத்தம்போட்டுச் சொன்னது. அதற்கு தனியாக ஒரு கூட்டம் கூடியது. அந்தக்கூட்டம் பி.ஜே.பி-க்கு ஓட்டும்போட்டது. அதில் வென்று ஆட்சிக்கு வந்த பி.ஜே.பியும், பிரதமர் மோடியும் இரண்டரை ஆண்டுகளாக கள்ள மௌனம் சாதித்தனர். உச்சக்கட்டமாக இந்திய உச்ச நீதிமன்றம் பலமுறை சாட்டையைச் சுழற்றி, “கறுப்புப் பணத்தை ஒழிக்க உருப்படியாக என்ன திட்டம்தான் வைத்துள்ளீர்கள்” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியது. அதற்கு அங்கும் வேறு எங்கும், உருப்படியாக எந்தப் பதிலும் சொல்லாத மோடி அரசாங்கம், சத்தமில்லாமல் சில ஆலோசனைகளை நடத்தித்தான் வந்துள்ளது. திடீரென ஒரு சுபமுகூர்த்த சுபவேளையாகப் பார்த்து அந்த ஆகப்பெரிய அறிவிப்பை வெளியிடவும் செய்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நவம்பர் 8-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நேரலையில் தோன்றிய பிரதமர் மோடி, இன்று இரவு 12 மணியில் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். மொழி, பண்பாடு, கலாசாரம், வழிபாடு என்று எல்லாவற்றிலும் பிரிந்து கிடக்கும் இந்தியா, இந்த அறிவிப்பில் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது. ஆச்சரிய-அதிர்ச்சியில் உறைந்துபோன இந்திய மக்கள், ஏ.டி.எம் வாசல்களில் கூட்டம் கூட்டமாய்த் திரண்டனர். நவம்பர் 8-ம் தேதி இரவு 8.42 மணிவரை, எங்கேயாவது ஒரு 500 ரூபாய்... 1000 ரூபாய் தேறாதா என்று ஆலாய்ப் பறந்தவர்கள், 8.44 மணிக்கு சுயரூபம் மாறினார்கள். இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை பெட்ரோல் பங்கில் தள்ளிவிடலாமா... பெட்டிக்கடையில் தள்ளிவிடலாமா என்று யோசித்தே மண்டை காய்ந்தனர். கறுப்புப் பணத்தை ஒழிக்கிறோம் என்று பிரதமர் மோடி முன்மொழிந்த இந்தத் திட்டம் உண்மையில் கறுப்புப் பணத்தை ஒழிக்குமா?

கணக்கில் காட்டாதவை மட்டுமே கறுப்புப் பணமா?

கறுப்புப்பணம் என்றால், கணக்கில் காட்டாமல் கண்ட கண்ட இடங்களில் பதுக்கி வைக்கப்படும் பணம் மட்டுமல்ல. சட்டபூர்வமாக கணக்குக் காட்டியும் கறுப்புப் பணத்தை பதுக்கலாம். இதற்கு உதாரணம் சொல்லவேண்டுமென்றால், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரவு-செலவுகளைச் சொல்லலாம். தங்கள் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை அதிக விலைக்கு வாங்கியதாக பில்லைக் காட்டுவது, உற்பத்திக்கு அதிகம் செலவு செய்ததாக ஆதரங்களை நீட்டுவது, நிறுவனத்தின் உரிமையாளரையே, கம்பெனியின் சி.இ.ஓ-வாக காட்டி, அவருக்கு சம்பளமாக பல லட்சங்கள்... சில கோடிகள் கொடுப்பதாக நாடகம் ஆடுவது, வெளிநாட்டு ஒப்பந்தங்களைக் காட்டி மிரட்டுவது, சரியாகக் கணக்கை எழுதப் படிக்கும் ஆடிட்டர்களை வைத்து, தப்பான கணக்குகளை மட்டுமே எழுதி, அரசாங்கத்தை ஆதாரங்களால் குழப்புவது... இந்த வழிகளில் எது ஒன்றையாவது பயன்படுத்திச் சேர்க்கும் பணமும் கறுப்புப் பணம்தான். தற்போது பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பு இந்த சட்டபூர்வக் கறுப்புப் பணத்தில் கடுகளவும் கை வைக்காது. ஆனால், முரட்டு முட்டாள்கள் சிலர் காட்டிலும் மேட்டிலும் கட்டுக்கட்டாகப் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை, பிரதமர் மோடியின் அறிவிப்பு நிச்சயம் கபளீகரம் செய்துவிடும்.

யாருக்கு எல்லாம் பாதிப்பு?

காண்டிராக்டர்களிடம் கமிஷன் வாங்கும் அரசியல்வாதிகள், டெண்டர் ஒதுக்க லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், அநியாயத்துக்கு டொனேஷன் வாங்கும் கல்லூரிகள், நல்ல நோட்டுகளுடன் கள்ள நோட்டை புழக்கத்தில் விடும் திருட்டுக் கும்பல், ஆளைப்போட்டுத்தள்ள ரேட் பேசும் கூலிப்படைகள், கோடிகளில் கொழிக்கும் போதைப்பொருள் மாபியாக்கள், தேசத்தின் எல்லைகளில் குழப்பம் செய்ய கரன்சிகளை கைமாற்றும் தீவிரவாதக்கும்பல்கள் என இந்தியாவின் நிழல் பொருளாதாரம் நடத்திவருபவர்கள் இந்த அறிவிப்பால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

ஏனென்றால், இந்த சட்டவிரோதச் செயல்களுக்கானப் பணப்பரிமாற்றங்கள் எல்லாம் ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக கொடுப்பதுதான் வழக்கம். அதுதான் கொடுப்பவருக்கும் சிரமம் இல்லாத காரியம். வாங்குபவருக்கும் இம்சை இல்லாத விவகாரம். அப்படி வாங்கி கோடிகோடியாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் வைத்திருக்கும் இந்தக் கும்பல்களால் தற்போது இதை மாற்ற முடியாது. ஒரு அளவுக்கு மேல் மாற்ற முயன்றால், அதற்குக் கணக்குக் காட்ட வேண்டும்; வரி கட்ட வேண்டும்; அதையாவது கட்டித் தொலைத்துவிடலாம். ஆனால், அந்த வருமானம் எந்த வழியில் வந்தது என்று அமலாக்கத்துறை குடைச்சல் கொடுக்கும். அதற்கு பதில் சொல்ல முயன்றால், அதைவிட வேறு வினையே வேண்டாம். நேராக கம்பி எண்ணப்போக வேண்டியதுதான். ஆக, இவர்களுக்கு மோடியின் அறிவிப்பு நிச்சயம் அசைக்க முடியாத ஆப்புதான் என்பதில் சந்தேகமில்லை.

அரசியல்வாதிகள் அலறல்... கார்ப்பரேட்டுகள் கொண்டாட்டம்..

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு வெளியானதும், இந்தியாவின் மான்செஸ்டரான மும்பையில் கார்ப்பரேட்டுகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், இந்தியா முழுவதும் அரசியலில்-அரசாங்கத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் ஹார்ட் அட்டாக் வராத குறையாக முழிபிதுங்கி நிற்கின்றனர். காரணம், கார்ப்பரேட்டுகள் தங்கள் தொழிலில் ஒவ்வொரு அடி முன்னோக்கி வைக்க நினைக்கும்போதும், ஒவ்வொரு புது டெண்டரை எடுக்கும்போதும், ஒவ்வொரு புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்போதும், அவர்கள் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அழுது... அழுது கொடுத்த பெர்சன்ட்டேஜ்களுக்கு பின்னால் உள்ள வேதனை அவர்களுக்குத்தான் தெரியும். அத்தனையும் கொடுத்து அவர்கள் சுரண்டுவது தனிக்கதை. ஆனாலும்கூட, நம்மிடம் அடித்துப் பிடிங்கியவர்களுக்கு, நாம் அழுது கொண்டே கொடுத்தது, கால் காசுக்கு பிரயோஜனமில்லாமல் போகிறதே என்கிற ஒரு அல்ப சந்தோஷம். அதனால், அவர்களின் கொண்டாட்டம் மும்பையில் தூள் பறந்தது. அதே நேரத்தில் வாங்கிச் சேர்த்த கருணாநிதி, ஜெயலலிதா, லல்லு, அமர்சிங், ஜெகன்மோகன்ரெட்டி, லல்லுபிரசாத் யாதவ் தொடங்கி  பி.ஜே.பி-யிலேயே உள்ள டெல்லிவாலாக்களுக்கும்  திருடன் காலில் தேள் கொட்டியதைப் போன்ற அவஸ்தை.

சுவிஸ் வங்கிகளில் இருக்கும் பணத்தின் கதி?

இன்றைய இந்தியப் பிரதமர் மோடி, அன்றைக்கு பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளர் மோடியாக இருந்தபோது, “வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவேன்” என்று அறிவித்தார். தற்போது 500/1000 ரூபாய்கள் செல்லாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பால், வெளிநாடுகளில் உள்ள அந்தக் கறுப்புப் பணத்துக்கு எந்த பங்கமும் நேராது. இங்கே புழக்கத்தில் உள்ள 500,1000 ரூபாய்கள் செல்லாது என்று அறிவிப்பதால், அங்கு பதுக்கப்பட்டுள்ள பணங்கள் செல்லாமல் போகாது. அதைப் பதுக்கியவர்கள் தங்கள் விரும்பும்போது, அந்த வங்கிகளிடம் இருந்து, இந்தியாவில் எந்த ரூபாய் நோட்டு செல்லும் நோட்டாக இருக்கிறதோ, அதே ரூபாய் நோட்டுக்களாகவே பெற்று மாற்றி வாங்கிக் கொள்ளலாம். அந்த சேவையை அந்த வங்கிகள் இலவசமாகவே அளிக்கிறது. அதனால் வெளிநாட்டு வங்கிகளில் உறங்கிக் கொண்டிருக்கும் கறுப்புப் பணம், அதைப் பதுக்கியவர்களின் தூக்கத்தைத் கெடுக்கப் போவதில்லை.

கார்ப்பரேட்டுகளை ஏன் ஒன்றும் செய்யாது!

கார்ப்பரேட்டுகள் ரொக்கமாக இப்படி பணத்தைக் கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருக்கமாட்டார்கள். அவர்கள் எல்லாம் சட்டப்படியான அங்கீகாரங்களுடன், ஆடிட்டர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு பேலன்ஸ்ஷீட்டில், நாம் மேலே சொல்லியிருக்கும் வழிகளில், ஆடுபுலி ஆட்டம் ஆடுவார்கள். அதில் அவர்களின் ஆடுகள் ஒருபோதும் வெட்டப்படாது. அவற்றை வெட்டுவதற்கு மோடியும், ஜெட்லியும் ஒருநாளும் துணியவும்மாட்டார்கள்.

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தையும் பிரதமர் மோடியின் 500,1000 ரூபாய் அறிவிப்பு அசைத்துக்கூட பார்க்காது. இதுவும் மோடிக்கும் ஜெட்லிக்கும் தெரியும். அதையும் மீறி, கார்ப்பரேட்டுகளின் கறுப்புப் பணத்தில் கைவைத்தால், என்ன நடக்கும் என்பதும் மோடி-ஜெட்லி அன் கோ-வுக்குப் புரியும். அதுகூட புரியாமலா அவர் ஜியோ சிம் கார்டுக்கு மாடலாக போஸ் கொடுப்பார். அதானிக்கு நிலக்கரி சுரங்கம் வாங்க ஆஸ்திரேலியாவுக்குப் போவார். ஆனால், இதையெல்லாம் தாண்டிப் பார்த்தால்கூட, இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கைதான். இதை துணிச்சலாக செய்த மோடி, கார்ப்பரேட்டுகளின் கறுப்புப் பணத்தில் கை வைப்பதற்கும் ஒரு திட்டம் வைத்திருப்பார் என்று நம்புவோம். ஏனென்றால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறது அல்லவா!

- ஜோ.ஸ்டாலின்