Published:Updated:

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

Published:Updated:
அணு ஆட்டம்!

 எதிர்மறை எதிர்காலம்!

சிவப்பு தேசத்துக் 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதிர்வீச்சு!

##~##

சைபீரியக் காட்டின் ஓலம்
கதிர்வீச்சால் கருகியது
ஆயிரம் ஆயிரம் மைல்கள் தாண்டி
என் உயிரைக் குடிக்காது.
அனுதாபப்பட்டு
அமைதியானேன் 

அரைநாள் தூரத்தில்
அபாயம்
கடற்கரையில் காலன்
எந்நேரமும் வெடிக்கலாம்

ஆனாலும் பயமில்லை
பாதுகாப்பான தொலைவுதான்
ஏதும் நடந்தால்
முகமறியா மனிதர்களுக்கு
ஒரு சொட்டுக் கண்ணீர்
சிவப்பு தேசத்திலிருந்து வந்தது
எங்கள் தெற்குத்திசை நோக்கி
எங்களுக்கு அணுவும் தெரியாது
ஒரு மண்ணும் தெரியாது

எந்நேரமும் நாங்கள் சாகலாம்
உயிர் இருப்பதால்தானே
மின்சாரம் தேவைப்படுகிறது
முதலில் உயிர்களைக் கொல்வோம்!

- பவுத்த அய்யனார்

பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்​​பில் அப்துல் காதிர் கான் பெரும் பங்கு ஆற்றியதுபோல, வேகமாக... அதிகமாக... பரவலாக மனிதர்களைக் கொன்று குவிக்கும் ஓர் அழிவு ஆயுதத்தை உருவாக்கு​வதில் முக்கியப் பங்கு வகித்தவர் என்ற முறையில் அப்துல் கலாம் இந்திய மக்களால் போற்றிப் புகழப்​பட்டார். 'சாந்தி, சாந்தி, சாந்தி’என்று சமாதானம் பாடிய நாட்டில், அணு ஆயுதம் தயாரிக்க உதவியவர் முதல் குடிமகனாக ஆக்கப்பட்டார். குடியரசுத் தலைவரான அப்துல் கலாம், 'இந்தியா 2020’ எனும் நூலை வெளியிட்டு, அதில், தான் கனவு காணும் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று விவரித்து இருந்தார். 'குருடர்கள் ராஜ்ஜியத்தில் ஒற்றைக் கண்ணன் ராஜா’ என்பதுபோல நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள், செயல்திட்டங்கள், ஆசைகள், கனவுகள் எதுவும் அற்ற அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், வர்த்தகர் களையும், விஞ்ஞானி​களையும்​கொண்ட நமது நாட்டில், அப்துல் கலாமின் புத்தகம் பெரும் பொக்கி​ஷமாகப் போற்றப்பட்டது.

அணு ஆட்டம்!

அப்துல் கலாம் தனது புத்தகத்தை 10 வயது சிறுமி ஒருத்திக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். கலாமின் கூட்டம்ஒன்றில்அவரை சந்தித்த அந்தச் சிறுமி, 'வளர்ச்சி​யடைந்த இந்தியா​வில் தான் வாழ விரும்புவதாக’த் தெரிவித்து இருந்தாளாம். அவள் கனவு கண்ட வளர்ச்சி எத்தகையது, எதை அவள் வளர்ச்சி என்று குறிப்பிடுகிறாள் என்பதுபற்றி அந்தச் சிறுமியிடம் எதுவும் கேட்காமல், தான் விரும்பும் ராணுவரீதியான இயந்திரமயமாக்கல், தொழில்​மயமாக்கல் சார்ந்த வளர்ச்சியே சிறந்தது எனக்கொண்டு அந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் அப்துல் கலாம். அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடாவதும், பலமான ராணுவம், கடுமையான தேசியப் பாதுகாப்பு, சக்திமிக்க பொருளாதாரம்கொண்ட ஒரு வல்லரசு ஆவதும்தான் வளர்ச்சி என எழுதப்பட்டது, 'இந்தியா 2020’

அணு ஆட்டம்!

புத்தகம். ஏவுகணை, அணுகுண்டுகள்போன்ற தொழில்நுட்பங்களை விருத்திசெய்து, அவற்றைத் தொடர்ந்து துலக்குகின்ற திறனும்​கொண்டு இருப்பதுதான் வளர்ச்சியின் அடிப்படை என்பது கலாமின் பொதுவான வாதம். இந்தப் புத்தகத்தில்  'நீடித்த நிலைத்த வளர்ச்சி’ மற்றும் 'பொருத்தமான தொழில்நுட்பம்’ எனும் வார்த்தை​களோ... தத்துவங்களோ குறிப்பிடப்படவே இல்லை!

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த​போது, ஆற்றல் பாதுகாப்பு, ஆற்றல் சுதந்திரம் பற்றி அடிக்கடி பேசி வந்தார். இந்திய அணு சக்தித் துறை 2020-ம் ஆண்டுக்குள் 20,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க இருப்பதாக சொல்லித் திரிந்தது. இப்பெரும் திட்டத்துக்கான முதலீடு எங்கே இருந்து வரப்போகிறது, இதற்குத் தேவையான பெரும் அளவு யுரேனியத்துக்கு என்ன செய்வது, இத்தனை அணு மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் ஆபத்தான கழிவுப் பொருளை எப்படிப் பாதுகாப்பது, 40 ஆண்டு காலம் மின்சாரம் உற்பத்தி செய்த பிறகு அணு மின் நிலையங்களை எப்படி செயல் இழக்கச் செய்து கட்டிக் காப்பது போன்ற பல விஞ்ஞான ரீதியான கேள்விகளை எந்த அணு சக்தி விஞ்ஞானியும் கேட்கவும் இல்லை; கேட்டவர்களுக்குப் பதில் சொல்லவும் இல்லை!

அப்துல் கலாம் ஒரு பள்ளிக்குப் பேசச் சென்ற​போது, ஒரு மாணவன் 'ஏழை நாடான நமக்கு இவ்வளவு பொருட் செலவில் ஏவுகணைத் திட்டம் எதற்கு?’ எனக் கேட்டான். அதற்குப் பதில் அளித்த கலாம், 'நமக்கு வளர்ச்சி வேண்டும் என்றால், நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அமைதி வேண்டும் என்றால், பலம் இருக்க வேண்டும். நாடு பலமாக இருப்பதற்குத்தான் ஏவுகணைகள் உதவுகின்றன!’ என்றார். 'பெரும் பொருட் செலவில் சந்திரனுக்குப் போய் நாம் என்ன சாதிக்கப்போகிறோம்?’ என்று இன்னொரு மாணவன் கேட்டதற்கு, 'சந்திர மண்டலத்தில் சில அரிய வகைத் தாதுக்கள் உள்ளன. அவற்றை நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும்’ எனப் பதில் சொன்னார் அப்துல் கலாம்.

இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. ஏவுகணைத் திட்டங்​கள், அணு ஆயுதத் திட்டம் எதிலுமே ஜனநாயக முறையில் முடிவுகள் எடுக்கப்பட்டது இல்லை. கணக்கு வழக்கு விவாதிக்கப்பட்டது இல்லை. வெளிப்படைத்தன்மை இருந்ததே இல்லை. இவை அனைத்துக்கும் மேலாக ஒரு விதத் தான்தோன்றித்தனமும், சுயநலமும் தலைவிரித்து ஆடுகின்றன. மொத்த உலகுக்கும் மனிதன்தான் உரிமையாளன் என்றும், இயற்கை அவனது சுயநலத்துக்காக மட்டுமே படைக்கப்பட்டது என்றும், அதை எப்படி வேண்டும் என்றாலும் மிதித்து அழிக்கலாம் என்றும், இதுபோன்ற மனப்பாங்கே வளர்ச்சியின் அடிப்படை என்றும் கருதுகின்றனர் பெரும்பாலான விஞ்ஞானிகளும், பொறியாளர்களும். இந்த நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள் பிற்போக்குவாதிகள், பழைமைவாதிகள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்றெல்லாம் தூற்றப்​படுகின்றனர்.

1971-ம் ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் காபோர் எனும் பிரிட்டிஷ் விஞ்ஞானி, மனித சமூகத்தை இரண்டு கூறுகளாகப் பிரிக்கிறார். ஒன்று தர்க்க ரீதியாக, ஆழமான வாதங்களை சீர்தூக்கி சிந்திக்கும் திறனற்ற சாதாரண மனிதர்கள். இன்னொன்று, தங்கள் மன ஆற்றலை திறமையாகப் பயன்படுத்தும் தனித் திறமையுள்ள விஞ்ஞானிகள். இவர்களால்தான் உலகம் மேம்பட்டு இருக்கிறது. மனித சமூகத்தைக் காக்கும் இவர்கள் மனிதருக்கு விருப்பமான, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள் என்று வாதிடுகிறார் காபோர். இந்த மாதிரியான காபோரியச் சிந்தனை விஞ்ஞானிகளை தேவர்களாகவும், நம் போன்றோரை அசுரர்களாகவும் பார்க்கிறது. அமெரிக்கர்கள் வேண்டாம் என்று தூக்கி எறிந்த பல விஷங்களை நம் தலையில் கொட்டி பசுமைப் புரட்சி நடத்தியோரும், 'சூப்பர் பவர்’ ஆக்குகிறோம் என்று ஆசை காட்டி பண விரயத்தால் நம்மை 'சூப்பர் புவர்’(super poor) ஆக்கும் ஆற்றல் அரசர்களும், சாப்பாடு இல்லாமல் இருப்போரை சந்திரனுக்கு அழைத்துப் போகிறோம் என்று ஜாலம் காட்டும் சந்தர்ப்பவாதிகளும் நம்மை ஏய்க்கின்றனர். இவர்கள் கனவு காணும் எதிர்காலம் எதிர் மறையானது, இருண்டது, இயற்கைக்கு விரோதமானது! 

அபாயம் (நாவல்)

அணு ஆட்டம்!

ஜோஷ் வண்டேலூ என்பவர் ஃபிளமிஷ் எனும் ஐரோப்பிய மொழியில் எழுதிய இந்த நாவல், 1986-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. என்.சிவராமன் தமிழாக்கம் செய்ய, க்ரியா 1992-ல் வெளியிட்டது. இரண்டாம் பதிப்பு அண்மையில் வெளியானது.

ஆல்ஃபிரட் பென்ட்டிங், மார்ட்டின் மோலினுர், பூபோன் மூவரும் அணு உலை மையத்தில் ஆபத்தான வேலை செய்பவர்கள். கடுமையான கதிர்வீச்சுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். பேராசிரியர் வென்ஸ் சிகிச்சை அளிக்கிறார். அவர்கள் மரணப் போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது, இந்த நாவல். மருத்துவமனையில் இருந்து தப்பிச் செல்வதன் மூலமே நிவாரணமடைய முடியும் என்று நினைக்கிறார்கள் மூவரும். ஆனால், வெளி உலகமும் அப்படி ஒன்றும் அற்புதமாக இல்லை. அன்பு, இரக்கம், பாதுகாப்பு, நேர்மை என்பவற்றைவிட விஞ்ஞான முன்னேற்றமும், பொருளாதார மேம்பாடும் முக்கியமானவை என்று கருதும் ஒரு சமூகத்தில் அபாயம் என்பது தனித்த நிகழ்வல்ல. இது போன்ற சமூக அமைப்பை உருவாக்கும் கோட்பாடுகளிலிருந்து பிறப்பதுதான் இந்த அபாயம் என உணர்த்துகிறது இந்த நாவல். இந்த நாவலின் கதாபாத்திரங்கள் தனித்தன்மையுடன் உருவாக்கப்படவில்லை. காரணம், அனை​வருமே பலிகடாக்கள், கருவிகள். முடிவு முதலிலேயே தெரிந்திருக்கும் இந்த அபாயமான போட்டியில் சூதாடிகள் நாவலுக்கு வெளியே இருக்கிறார்கள்! 

அணு ஆட்டம்!

கே.பத்மதாஸ்

சட்டத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற முழு நேர சமூகப் பணியாளர். விவசாயத்தையும், விளைபொருட்களையும் பாதுகாக்கும் குமரி மாவட்ட பூமி பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டபோது, கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் எனக் களமாடியவர். அணு உலை எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுபவர். கௌரவ டாக்டர் பட்டம் பெற்று இருக்கிறார்! 

- அதிரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism