Published:Updated:

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே -19: 5.10.88

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே -19: 5.10.88

Published:Updated:
பழசு இன்றும் புதுசு
##~##

ண்மைக் காலமாகதி.மு.க. சார்பில் நடக்கும் நிகழ்ச்சி​களில் உற்சாகமாக முதல் வரிசையில் அமர்ந்துபங்கு பெறுகிறார் கலைஞரின் மகள் கனிமொழி. வெறும் பார்வையாளராக மட்டும் அவர் இருப்பதாகத் தோன்ற​வில்லை! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனிமொழி, கழக அரசியலில் படிப்​படியாக இறங்க முடிவு செய்திருப்​பதாகவே தெரிகிறது. காலம் ரொம்பவும் மாறிவிட்டது. பல பெண்கள் நாடெங்கும் இன்று அரசியலில் முன்னணியில் நிற்கும்போது, அரசியலில் இரண்டறக் கலந்துவிட்ட குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழி ஏன் சும்மா இருக்க வேண்டும்?

கனிமொழியை ஆலிவர் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.

பத்திரிகையாளர் ஒருவரை சந்திப்பது அவருக்கு இதுதான் முதல் அனுபவம். ஆனால், அது பேச்சில் தெரியவில்லை. பல விஷயங்களில், அவருக்கென்று சொந்தக் கருத்துகள் இருந்தன. 'ஆஃப் தி ரெக்கார்ட்’ என்று  அனுபவம் வாய்ந்தவர்போலவும் சில சமயம் சொன்​னார்!

கனிமொழி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரம் படிக்கும் மாணவி. கதை, கவிதை, நாடகம் என்று நிறைய எழுதுவார். பிரசுரத்துக்கு அனுப்பியது இல்லை. பள்ளி நாட்களில் எழுதிய சில நாடகங்​களை மேடையில் அரங்கேற்றி நடித்தது உண்டு. இலங்கைத் தமிழர்கள் மற்றும் பகுத்தறிவுத் தந்தை பெரியார்பற்றி இவர் எழுதிய கவிதைகள், பாடல் காஸெட்டுகளாக வெளிவந்து இருக்​கின்றன. இவர் எழுதிய பெரியார் பற்றிய பாடல்கள், தி.க. பிரசாரங்களில் அவ்வப்போது ஒலிக்கின்றன.

அவர் எழுத்து ஆர்வம் பற்றி முதலில் விசாரித்தோம்...

''கிடைத்த புத்தகங்களை எல்லாம் படிப்பேன். நிறைய எழுதுவேன். எழுதிய பிறகு எனக்கே திருப்தி இருக்காது. பிரசுரிக்கிற அளவுக்கு என் எழுத்து

முதிர்ச்சி பெறவில்லை என்று நினைப்பது உண்டு. எழுதுவதற்குப் பலருக்குப் பல வித இன்ஸ்பிரேஷன், மூட்... தேவைப்படும். அப்பா (கலைஞர்) விஷயம் வேறு. நேரம் கிடைத்தால் போதும், உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிடுவார். ஆனால், நான் எழுதுவதற்கு மூட் ஏற்படுத்துகிற கிரியா ஊக்கிகளே வேறு. என்னைக் கோபப்படுத்தினால், நான் உடன்படாத கருத்துக்களைக் கேட்டால், மனதுக்குள் ஒரு வேகம், கோபம் வரும். உடனே எழுது​வேன். எழுதியதை ஃபைலில் வைத்து மூடிவிடுவேன். எழுத்தின் மூலம் ஒரு

பழசு இன்றும் புதுசு

Recognition கிடைக்கும் என்பதைவிட, மனதில் தோன்றுகிற சிந்தனைகளுக்கு எழுத்தை ஒரு வடிகாலாகப் பயன்படுத்துகிறேன். கலைஞரின் மகள் என்பதால், எழுத்து ஆர்வம் ரத்தத்தோடு கலந்து வந்திருக்க வேண்டும்...'' கடகடவென்று பேசினார் கனிமொழி. அவ்வப்போது சரளமாக ஆங்கிலம்!

''உண்மையாகவே உங்களுக்கு பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள் மீது பற்று உண்டா அல்லது அந்தக் கருத்துகள் உங்கள் மீது சூழ்நிலை காரணமாகத் திணிக்கப்பட்டு இருக்​கிறதா?''

விருட்டென்று பதில் வந்தது...

''என் மீது எந்தக் கருத்தையும் யாரும் திணித்துவிட முடியாது. கலைஞரின் மகளாக இருப்பதில் உண்மையில் எனக்கு மிகுந்த பெருமை உண்டு. அதே சமயம், கலைஞரின் மகளாக மட்டுமே பார்க்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனக்கென்று ஒரு தனித்தன்மை, சுய சிந்தனை, தனி கௌரவம் இருக்க வேண்டாமா? அதற்காக உழைப்பேன். அஃப்கோர்ஸ்... இந்த உழைப்பும் தன்னம்பிக்கையும் அப்பாவிடம் பெற்றதுதான். எந்த விஷயமானாலும், 'அது ஏன் அப்படி?’ என்று கேட்காமல், அதற்கான பதில் பெறாமல் விடுவது இல்லை. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை நான் கோயில்களுக்குப் போனவள்தான். எதற்கும் கேள்வி எழுப்பும் என் உள்ளம், இது விஷயத்திலும் ஒரு நாள் கேள்வி எழுப்பிற்று.

கோயிலில் உள்ள அம்மன், தாய் போன்றவள் என்று நம்புகிறோம். ஒரு தாய்க்கு - தன் குழந்தைக்கு எது தேவை என்று தெரியாதா? தினமும் கோயிலுக்குப் போய், 'தாயே... இது கொடு’ என்று கேட்டால்தான் கொடுப்பாளா? இப்படிக் கேள்வி எழுந்தது. கொடுக்கிற தாய் கோயிலுக்குள்ளே இருக்கும்போது, கோயிலுக்கு வெளியே 'தாயே... பசிக்குதே’ என்று குரல் எழுப்பும் பிச்சைக்காரர்கள் காட்சியும் என்னை உலுக்கியது. தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு தாய், கோயிலில் மட்டும்தான் இருக்கிறாள் என்பதை சீக்கிரத்திலேயே என் மனம் நிராகரித்தது.

பெரியாரின் பகுத்தறிவுப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். மூடத்தனமான நம்பிக்கைகள் தகர்ந்தன. ஆசிரியர் பல புத்தகங்களைத் தருவார்... அவருடன் நான் நிறைய விவாதங்கள் செய்திருக்கிறேன். இப்போது கோயிலுக்குப் போவது இல்லை. நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்பதைவிட, நமக்குள்ளேதான் ஒரு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது!'' என்றார் கனிமொழி.

கலைஞருக்கும் - தி.க. தலைவர் வீரமணிக்கும் இன்று மோதல்கள் இருக்கலாம். ஆனால், கனிமொழிக்கு வீரமணி ஒரு இன்ஸ்பிரேஷன்! பேச்சின் நடுவில் வீரமணியைத்தான் 'ஆசிரியர்’ என்று குறிப்பிடுகிறார்!

அப்பாவுடன்  கனிமொழி நிறைய விவாதங்கள் நடத்துவது உண்டு. அதுவும் சங்கத் தமிழில் வரும் கருத்துகள் பற்றி!

சங்கத் தமிழ்ப் பாட்டில் ஒன்று, காதலித்​​​தவனைக் கைப்பிடிக்க முடியாமல் போனதால் காதலி இறந்துபோவதாக வரு​கிறது. கனிமொழி இதுபற்றி - ''இது சரியா? ஓர் ஆண் தன்னை மணக்க மறுப்பதால், பெண் இறக்கத்தான் வேண்டுமா? ஆண் துணை இன்றி பெண்ணால் ஒருவெற்றிகரமான, சீரிய வாழ்க்கை வாழ முடியாதா?'' என்று அப்பாவிடம் பெண் உரிமைக்குக் கேள்வி எழுப்புவார். கலைஞர் புன்முறுவலுடன் அந்த வினாக்களை வரவேற்பார். இம்மாதிரி அப்பாவுடன் நடக்கும் சூடான விவாதங்களில் கனிமொழி வெற்றி பெற்றதும் உண்டு!

''பாசத்தால் அப்பா விட்டுக்கொடுத்து விடுவாரோ?'' என்று கேட்டவுடன், கோபம் வந்துவிட்டது. ஓர் உதாரணம் காட்டியே விளக்கினார். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவை பெண்ணுக்கு உரியது என்று கலைஞர் சொல்ல, மகள் ''அம்மாதிரி ஆண்களுக்கும் சில வரையறைகள் உண்டு என்பதை நான் படித்திருக்கிறேன்'' என்றாராம். இரண்டு நாட்கள் கழித்து, 'மகள் சொன்னது சரி’ என்று பழம் பாடல்களைப் பார்த்து அறிந்தாராம் கலைஞர். மகளிடமே ''நீ சொன்னது சரி'' என்று சொன்னபோது, தான் மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போனதாகக் குறிப்பிட்டார்.

''எல்லாம் சரி... நீங்கள் எப்போது தி.மு.க. மேடையில் ஏறப்போகிறீர்கள்?'' திடீரென்று கேள்வியை வீசினோம்.

''அரசியலா? அந்த எண்ணம் இப்போது இல்லை...'' என்று சட்டென்று பதில் வந்தது.

''உங்கள் சூழ்நிலையில் அரசியலை உங்களால் ஒதுக்கிவிட முடியுமா?''

''அரசியலை ஒதுக்கவில்லை. அரசியலில் எனக்கு நிரம்பவே ஆர்வம் உண்டு. அந்த ஆர்வத்தின் அடிப்படையில்தான், கழகக் கூட்டங்களில் முன் வரிசையில் அமர்ந்து மேடையில் நடப்பதை உற்சாகத்துடன் கவனிக்கிறேன். என்னைச் சுற்றி நடக்கிற அரசியல் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பேன். இப்போது நான் ஒரு பொலிடிகல் அப்சர்வர்!

கோயிலுக்குப் போவதுபற்றி நான் எனக்குள் கேள்விகள் எழுப்பி முடிவு எடுத்ததைப்போல, அரசியலைப் பற்றி நான் பல கேள்விகளை எனக்குள் எழுப்பி வருகிறேன். இப்போதைக்கு அரசியலில் ஈடுபட வாய்ப்பு இல்லை. நாளை பற்றி என்னால் சொல்ல முடியாது. ஆனால், அதற்கு முன் சொந்தக் காலில் நான் நிற்கும் அளவு வளர்ச்சி பெற வேண்டும்...''

கனிமொழி சற்று நிறுத்தினார். கண்களை மூடித் திறந்தார்.

''அதோடு... அரசியலில் இறங்கிவிட்டால் கல் மனசு தேவைப்படும். அது இன்று எனக்கு இல்லை. நான் சில தி.மு.க. தலைவர்களின் மகள்களுடன் ஒரு தோழிபோல் பழகுவேன். கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்தால், அவர் வீட்டுப் பெண்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவார்கள். தோழமை க்ளோஸ். அரசியல் வேறு, நட்பு வேறு என்று சில தோழிகளால் பிரித்துப் பார்க்க முடியவில்லை!''

வருத்தப்பட்டார் கொஞ்ச நேரம்.

''ஆனால், அரசியலைப் பொறுத்த வரையில், நான் தி.மு.க-தான்! இது ஒன்றுதான் தமிழ்நாட்டுக்கு ஏற்ற கட்சி என்று முடிவுக்கு வந்திருக்கிறேன். நான் தமிழ் வெறி உடையவள். என் சிந்தனைகளுக்கு தி.மு.க. ஏற்புடையதாக இருக்கிறது.''

- அதோடு அரசியல் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அம்மாவும் அப்பாவும் 'கனி’ என்று அன்போடு அழைக்கும் கனிமொழிக்குப் புத்தகங்கள் படிப்பதில் தனி விருப்பம் உண்டு. யாராவது ஒரு புத்தகம்பற்றிச் சொன்னால், அதைத் தேடிப் பிடித்து எத்தனை நேரமானாலும் படித்து முடித்துவிடுவார்.

முன்கோபம் இருந்தது. இப்போது திட்டமிட்டு முன்கோபத்தைப் போராடி விரட்டிவிட்டதாகத் தெரிவித்தார்!

- சுதாங்கன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism