Published:Updated:

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

தமிழருவி மணியன்

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

தமிழருவி மணியன்

Published:Updated:

காந்தியும் அம்பேத்கரும்!

##~##

பாபா ராம்தேவ் உடல்நிலை நலிவுற்றதும், தன் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டார். எந்தக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ராம்தேவ் அறிவித்தாரோ... அந்தக் கோரிக்கையில் ஓர் அட்சரம்கூட நிறைவேறாத நிலையில், அவர் பின்வாங்கிவிட்டார். ஆனாலும், கறுப்புப் பணத்துக்கு எதிராகத் தனது போராட்டம் தொடரும் என்று ராம்தேவ் சபதம் செய்திருக்கிறார். மகாத்மா காந்தியாக மாறுவது எல்லாருக்கும் எளிது அல்ல என்ற உண்மை ராம்தேவ்களுக்கு இப்போது மிக நன்றாகப் புரிந்திருக்கும்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'உள்ளத்தில் போதிய வலிமை இல்லாதவர்கள், உண்ணாவிரதம் இருக்கக் கனவிலும் கருதக் கூடாது. ஏளனத்துக்கு இலக்காகக்கூடிய உண்ணாவிரதங்களால் தீங்கு மட்டுமே விளையும்!’ என்றவர் காந்தி.

தான் முன்வைத்த கோரிக்கைகள் தன் கண் முன்னே நிறைவேறும் வரை, உண்ணாநோன்பை காந்தி ஒரு போதும் நிறுத்தியது இல்லை. மரணம் குறித்த அச்சமற்ற மனிதர்களே, மகாத்மா வழியில் உண்ணா நோன்பை மேற்கொள்ள முடியும். ஆயிரம் விமர்சனங்களுக்கு ஆளா னாலும், முன் வைத்த காலை மகாத்மா பின்வைத்தது இல்லை.

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டதற்காக, பூனாவில் உள்ள எரவாடா சிறைக்குள் பூட்டப்பட்டார் மகாத்மா. அப்போது, தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதிகள் வழங்கும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ அறிவிப்பை, 1932-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட்டார் பிரிட் டிஷ் பிரதமர்

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

ராம்ஷே மெக் டொனால்ட். பிரிட்டிஷ் பேரரசின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த, இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து ஆள்வதில் வெற்றிபெற்ற வெள்ளையர்கள், இந்துக்களுக்கு உள்ளேயே பிளவையும் பகைமையையும் வளர்த்தெடுக்க வகுப்புவாரி விஷ வலையை விரித்து இருப்பதாக மகாத்மா உணர்ந்தார். 'தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி வழங்குவதை என் உயிர் உள்ள அளவும் எதிர்ப்பேன்!’ என்று ஆங்கிலேய அரசுக்கு அறிவித்துவிட்டு, எரவாடா சிறை யில் காந்தி உண்ணாவிரதம் இருந்தார்.

'தாழ்த்தப்பட்டவர்கள் விரும்பும் கோரிக்கைகள் என் உயிரைவிடவும் எனக்கு முக்கியமானவை. உலகையே எனக்கு வழங்கினாலும், அவர்களுடைய உரிமைகளை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஆனால், இந்துக்களில் இருந்து அவர்களைப் பிரிக்கும் முயற்சியை நான் தனியாக நின்றாலும், என் உயிரைப் பணயம் வைத்து இறுதி வரை எதிர்ப்பேன்!’ என்றார் காந்தி. 'அரசியல் காரணங்களுக்காக நாங்கள் 'இந்துக்கள்’ என்று அழைக்கப்படுகிறோமே அன்றி, சமூகத்தில் இந்துக்கள் எங்களை சகோதரர்களாகக் கருதுவது இல்லை. எங்களது எண்ணிக்கையிலும், ஓட்டு உரிமை பலத்திலும் கிடைத்த அரசியல் ஆதாயங்களை, அவரவர் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால், அதற்குக் கைம்மாறாக நாங்கள் பெற்றது ஒன்றும் இல்லை... ஒன்றுமே இல்லை’ என்று அம்பேத்கர் பொங்கினார்.

காந்தியின் உண்ணாவிரதம், உயிர் இழப்பில் முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சினர். 'நீதியின் தராசில் என் உண்ணா நோன்பை வைக்கிறேன். அளிப் பதற்கு என்னிடம் இன்னும் ஏதாவது இருந்தால், இந்தச் சமூக சாபத்தை ஒழிக்க, அதையும் அந்தத் தராசில் வைக்கத் தயார். ஆனால், தருவதற்கு என் வாழ்வைத் தவிர, வேறு எதுவும் என்னிடம் இல்லை’ என்று முழங்கிய காந்திக்கு, உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாளே உடல்நிலை அபாயக் கட்டத்தை அடைந்தது. ரத்தக் கொதிப்பு எல்லை மீறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் சோகம் கவ்வியது.

மகாத்மாவை மரணத்தின் பாதையில் இருந்து மீட்க, மக்கள் பிரார்த்தனை செய்தனர் 'காந்தியின் உயிரைக் காக்க அனைத்துத் தரப்பினரும் உணர்வுபூர்வமாக முயலவேண்டும்!’ என்று தாழ்த்தப்பட்டோர் தலைவர் எம்.சி.ராஜா வேண்டுகோள் விடுத்தார். அண்ணல் அம்பேத்கருடன் உடன்பாடு காண தேஜ்

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

பகதூர் சாப்ரு, மதன் மோகன் மாளவியா, எம்.ஆர்.ஜெயகர், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் போன்றோர், பிர்லா மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒடுக்கப்பட்டவர் களுக்கு அரும் பாடுபட்டு வாங்கிக் கொடுத்த உரிமைகளை இழக்க விரும்பாத அம்பேத்கர், எள்ளளவும் இறங்கி வரவில்லை. சூழ்நிலை கடுமை யானது. காந்தியின் உயிர் ஊசலாடியது.

காந்தியின் விருப்பத்தின்படி எரவாடா சிறைக்கு அம்பேத்கர் சென்று பேசினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கூட்டுத் தொகுதி தேர்தல் முறையைக் கொடுத்து, தனித் தொகுதி முறையை நிறுத்துவது என்ற முடிவுக்கு வடிவம் கிடைத்தது. 'காந்தி அவர்களே! நீங்கள் எங்களிடம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை’ என்று உரையாடலைத் தொடங்கினார் அம்பேத்கர். 'நீங்கள் எங்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும்’ என்று வற்புறுத்தினார். 'என் உயிரைப்பற்றி நீங்கள் அக்கறை கொள்ளவில்லையா?’ என்று மெல்லிய குரலில், நலிவுற்ற காந்தி கேட்டார். 'உங்கள் உயிரைப்பற்றி எனக்கு அக்கறை உண்டு. உங்கள் முழு ஆற்றலையும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக நீங்கள் பயன்படுத்தினால், உங்களை என் வழிகாட்டியாகவும், வீரத் திருமகனாகவும் நான் ஏற்றுக்கொள்வேன்!’ என்றார் அம்பேத்கர். காந்தியின் உயிர் போனால் நாடு முழுவதும் நரகமாகிவிடும் என்பதை அம்பேத்கர் அறிவார். அவருடைய உயிரைக் காப்பதன் மூலம் நாட்டின் அமைதியைக் காக்கவே அம்பேத்கர் அரை மனதுடன் கூட்டுத் தேர்தல் முறையை ஏற்றுக்கொண்டார். அது, காந்திக்கு அம்பேத்கர் காட்டிய சலுகை.

பிரிட்டிஷ் அரசு, தாழ்த்தப்பட்டவர் களுக்கு 71 தொகுதிகளையே ஒதுக்கி இருந்தது. ஆனால், காந்தியின் முயற்சி யால் உருவான பூனா ஒப்பந்தத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 147 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அது, அம்பேத்கருக்கு காந்தி செலுத்திய கைம்மாறு.

சாதி இந்துத் தலைவர்களும், தாழ்த்தப் பட்ட மக்களின் தலைவர்களும் 1932-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பூனா ஒப்பந்தத் தில் கையப்பம் இட்டனர். சாதி இந்துக்கள் சார்பில் சாப்ரு, மாளவியா, ஜெயகர் ஆகியோரும், தாழ்த்தப்பட்டோர் சார்பில் அண்ணல் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், சிவராஜ் ஆகியோரும் கையப்பம் இட்டு, அந்த ஒப்பந்தம் பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பப்பட்டது. உயிர் ஊசலாடிய நிலையிலும், ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே, காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவில்லை. பிரிட்டிஷ் அரசின் ஒப்புதல் கையில் கிடைத்த பிறகுதான், உண்ணாவிரதத்தை நிறுத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் தற்கொலை சாசனம்’ (Political Death Warrant) என்று அம்பேத்கரின் எதிர்ப்பாளர்கள் சிலர் பூனா ஒப்பந்தம் குறித்து விமர்சித்தனர்.

'உலகில் எந்தத் தலைவனும் இப்படி இருதலைக்கொள்ளி எறும்பு நிலையில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. கத்தி முனையில் முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் நான் இருந்தேன். ஒடுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான உரிமைகளைக் காப்பதா? இல்லை... கோடானுகோடி மக்கள் மூடத்தனத்தில் மூழ்கித் தங்கள் கடவுள் என்று கொண்டாடும் காந்தியின் உயிரைக் காப்பதா என்ற இரண்டு பிரச்னைகள் என் முன் நிறுத்தப்பட்டன. மனித நேயத்துக்கு முன்னுரிமை வழங்கி, நான் காந்தியின் உயிரைக் காப்பாற்றினேன். அதற்காக, எங்கள் உரிமைகளை நான் விட்டுவிடவில்லை. தனித் தொகுதியில் இருந்து கூட்டுத் தொகுதிக்கு நாங்கள் ஒப்புதல் அளித்தபோதிலும், பிரிட்டிஷ் பிரதமர் அளித்த அரசியல் சலுகையில் இருந்து அதிகமாக இழந்து விடவில்லை...’ என்றார் அம்பேத்கர்.

காந்தி - அம்பேத்கர் சந்திப்பு நிகழ்ந்தபோது, 'நீங்கள் பிறப்பால் தீண்டத்தகாதவர். நான் என் விருப்பத்தின் விளைவாக உங்களைவிடப் பெரிய தீண்டத்தகாதவன்!’ என்றுரைத்த அண்ணல், தாழ்த்தப்பட்டோர் இந்துக்களில் இருந்து நிரந்தரமாக விலகி நின்றுவிடுதல் தகாது என்று சிந்தித்தவர். காலம் முழுவதும் சட்டபூர்வமாக நிரந்தரமாக 'தாழ்த்தப்பட்டவர்கள்’ என்ற அடைமொழியோடு, இந்து சமுதாயத்தின் ஓர் அங்கம் இருந்துவிடலாகாது என்று வேதனைப்பட்ட மகாத்மா, தன் வாழ்நாள் முழுவதும் தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். 'தீண்டாமை என்பது இந்து சமயத்தின் அருவருப்பான அழுகல் சதை’ என்றார். ஆனால், அம்பேத்கரின் அச்சம் நியாயமானது என்றே இன்று வரை நடைமுறையில் இருக்கும் 'இரட்டைக் குவளை’ முறை நிரூபித்து வருகிறது. அம்பேத்கர் எதிர்பார்த்தபடி, தீண்டாமையை முற்றாகச் சாய்த்துவிடவில்லை நமது சட்டம்.

எரவாடா சிறையில் காந்தியின் உண்ணா விரதம் வெற்றி பெற்றதற்கு அம்பேத்கரின் விவேகமும் முக்கியமான காரணம். இரு தரப்பிலும் விட்டுக்கொடுக்கும் மனோபாவம் இருந்ததால்தான், 'பூனா ஒப்பந்தம்’ சாத்திய மானது. இந்த ஒப்பந்தத்தால் காந்தியின் உயிர் காப்பாற்றப்பட்டது. சாதி இந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையில் ஒற்றுமைக்கான பாலம் அமைக்கப்பட்டது. 'நெருப்புப் படுக்கையில் இருந்தபடி உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்...’ என்று நெகிழ்ந்த நிலையில் காந்தி விண்ணப்பித்தபோது, அம்பேத்கர் வேறு வழியின்றிக் கூட்டுத் தொகுதிக்கு இசைந்தார். ஆனால், இன்றும் கூடி வாழ மறுக்கும் சில சாதி இந்துக்களின் மனோபாவம் மாறுவ தற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஓர் உண்ணாவிரதப் போர் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு அண்ணா ஹஜாரேக்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் பல்கிப் பெருக வேண்டும்.

தான், தவறாகச் சித்திரிக்கப்படுவதாக ஹஜாரே கவலைப்படுகிறார். அவதூறு பேசுவதிலும், பழி சுமத்தி எழுதுவதிலும் பேரின்பம் காணும் மனநோயாளிகள் எங்கும் என்றும் இருப்பர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு துரோகம் இழைத்த கொடிய வில்லனாக காந்தியை சித்திரிப்பவர்கள், பூனா ஒப்பந்தத்தை வன்மையாக விமர்சிப்பவர்கள் இன்றும் உள்ளனர். 'உலகம் உன்னைப் பழித்தாலும், கடவுள் உன்னை அங்கீகரிப்பார்’ என்று ஜான் மில்டன் பாடினார். தேசப் பிரிவினைக்குப் பின்னால் சமய நல்லிணக்கம் வேண்டி உண்ணாவிரதம் இருந்த மகாத்மாவின் காதுபட, 'காந்தியே! செத்துத் தொலை!’ என்று ஒரு கூட்டம் கூவியது. அடுத்த இதழில் அந்த சோகத்தைப் பகிர்ந்துகொள்வோம்!

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism