Published:Updated:

மின்கட்டண உயர்வு.. மக்களுக்கு முதல் பெரிய பரிசு: கருணாநிதி

மின்கட்டண உயர்வு.. மக்களுக்கு முதல் பெரிய பரிசு: கருணாநிதி
மின்கட்டண உயர்வு.. மக்களுக்கு முதல் பெரிய பரிசு: கருணாநிதி

மின்கட்டண உயர்வு.. மக்களுக்கு முதல் பெரிய பரிசு: கருணாநிதி

மின்கட்டண உயர்வு.. மக்களுக்கு முதல் பெரிய பரிசு: கருணாநிதி

சென்னை: சங்கரன்கோவில் தொகுதியில்  ஆளுங்கட்சிக்கு 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தந்ததாகச் சொல்லப்படுகிற மக்களுக்கு அதிமுக அரசு அளித்த முதல் பெரிய பரிசே, மின் கட்டண உயர்வு என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "திமுக ஆட்சியில் 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

அப்போது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், 'விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கச் சொன்னால், விலைவாசியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர் கருணாநிதி. மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் மேலும் உயரக்கூடும்.

சாமானிய மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் சுமையை உடனடியாக நீக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று ஜெயலலிதா கூறினார்.

இப்போது அவருடைய இந்தப் பழைய அறிக்கையினை நினைவுபடுத்திக் கொண்டு சாமானிய மக்களையாவது தாங்க முடியாத இந்தச் சுமையிலிருந்து காப்பாற்றிட ஆவன செய்ய வேண்டும்.

கழக ஆட்சியில் 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தவர்களுக்குக் கூட யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போது 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகிப்போருக்கு யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாய் 75 காசு என்ற 5 அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் வாங்கும் சக்தி ஓரளவுக்கே பெற்றுள்ள சாதாரண நுகர்வோருக்கு எவ்விதக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் சகட்டு மேனிக்கு ஏழையெளியோர், நடுத்தர வர்க்கத்தினர், வசதி படைத்தோர் என்ற எவ்வித வேறுபாடும் இன்றி அனைவருக்கும் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.

ஏழையெளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குறைந்த மின்னழுத்த இணைப்புகள் மூலம் 5,300 கோடி ரூபாயும், வசதி படைத்தோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தும் உயர் மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ. 2,574 கோடியும் கூடுதலாக அரசுக்குக் கிடைக்கத்தக்க வகையில் கட்டண உயர்வைச் செய்திருக்கிறார்கள். என்ன சமதர்மமோ இது?

மேலும் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணம், 120 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 1.50 என்பதிலிருந்து ரூ. 2.50க்கும், 120 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாய் என்பதை 5 ரூபாயாகவும் - 100 யூனிட் வரை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு 4 ரூபாய் 30 காசும், 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் யூனிட்டுக்கு 7 ரூபாயாகவும் - உயர் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு தற்போது ரூபாய் நான்கு என்பது, இனி யூனிட்டுக்கு 5 ரூபாய் 50 காசாகவும், வசூலிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய அரசு முன்வருமா?

அதிமுக ஆட்சிக்கு வந்த பத்து மாத காலத்தில் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, ஆகியவற்றைத் தொடர்ந்து மின் கட்டண உயர்வினை 5 சதவிகித உயர்வு, 10 சதவிகித உயர்வு அல்ல, ஒரேயடியாக ஒரே நேரத்தில் 37 சதவிகித அளவுக்கு உயர்த்தி அறிவித்து விட்டார்கள்.

எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கூடக் கிடைக்கக் கூடாது என்று எண்ணி 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சங்கரன் கோவில் தொகுதி இடைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்ததாகச் சொல்லப்படுகிற மக்களுக்கு அதிமுக அரசு அளித்த முதல் பெரிய பரிசு இது," என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு