Published:Updated:

ஏன் இவர்கள் மரணித்துக் கொண்டே இருக்கிறார்கள்... நமக்கு தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏன் இவர்கள் மரணித்துக் கொண்டே இருக்கிறார்கள்... நமக்கு தெரியுமா?
ஏன் இவர்கள் மரணித்துக் கொண்டே இருக்கிறார்கள்... நமக்கு தெரியுமா?

ஏன் இவர்கள் மரணித்துக் கொண்டே இருக்கிறார்கள்... நமக்கு தெரியுமா?

திர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்து கிடக்கின்றன, காவிரி டெல்டா பகுதியிலுள்ள கிராமங்கள். ஏற்கெனவே, வாட்டியெடுக்கும்  வறட்சியால் துக்கப்பட்டுக் கிடக்கும் விவசாயிகள், தற்போது அடுத்தடுத்து, வரும் விவசாயிகளின் மரணச்செய்திகளால் மேலும் நொந்து போய்க் கிடக்கிறார்கள்.

டெல்டா பகுதியில் முதலில் பலியானவர், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள  ரெகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ்.  இரண்டாவது பலியானவர், ஆதிச்சபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகேசன். தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்டம், கீழத்திருப்பந்துருத்தி ராஜேஷ்கண்ணா, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த ரத்னவேல், காவலாக்குடி நவநீதம்,

எரவாஞ்சேரி ஜெயபால், தேமங்கலம் தெற்குவேனி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி, தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த முருகையன், பாலசுப்ரமணியன், தஞ்சாவூர் மாவட்டம், பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த மாசிலாமணி, தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என இருபத்தி மூன்று நாட்களில் 11 விவசாயிகள் மரணத்தைத் தழுவியுள்ளனர்.

இவர்களில் கோவிந்தராஜ், மாசிலாமணி ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். மற்றவர்கள் அனைவரும் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர். இவர்கள் அனைவருமே வறுமைக்கோட்டின் எல்லையிலுள்ள ஏழை விவசாயிகள். கோவிந்தராஜ், பாலசுப்ரமணியன், நவநீதம் ஆகியோர் தவிர மீதி அனைவரும் குத்தகை நிலத்தில்தான் விவசாயம் செய்து வந்துள்ளனர். குத்தகைத் தொகையாக, விளைந்தாலும் விளையா விட்டாலும்… இவர்கள், நிலத்தின் உரிமையாளருக்கு ஏக்கருக்கு 12 மூட்டை நெல் அல்லது அதற்கு சமமான பணம்  கொடுத்தாக வேண்டும்.

இவர்களுக்கு, ஒரு ஏக்கர் நிலத்தில், நெல் விதைத்து 5 மாதங்கள் உழைத்தால் 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரையே லாபமாகக் கிடைக்கும். அதற்கு முதலீடாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தாக வேண்டும். இது போன்ற சிறு, குறு ஏழை விவசாயிகளுக்கும் நிலமற்ற குத்தகை விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் கடன் கிடைப்பது குதிரை கொம்பு. தேசிய வங்கிகளை வங்கிகள் குறித்துச் சொல்லவே தேவையில்லை. அதனால்,, இந்த விவசாயிகள் பெரும்பாலும் வட்டிக்குக் கடன் வாங்கிதான் விவசாயம் செய்கிறார்கள்.

டெல்டா பகுதி விவசாயிகள், கடந்த 16 ஆண்டுகளில் வறட்சி மற்றும் மழை வெள்ளத்தால் 11 முறை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஏற்பட்ட கடன் சுமை மற்றும் அன்றாட வாழ்க்கைக்கான நடைமுறை செலவுகள் ஆகியவற்றினால், மேலும் மேலும் கடனாளியாகியுள்ளனர். இதற்கிடையே காவிரி தண்ணீர் கிடைக்காததால் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை நெல் சாகுபடியும் கைவிட்டுப் போயுள்ளது. இந்த ஆண்டும் சம்பா பருவம் பொய்த்து விட்டது. அதோடு, வடகிழக்குப் பருவ மழையும் ஏமாற்றி விட்டது.

மேட்டூர் அணையில் இருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால்தான் கடைமடை வரை விவசாயிகளின் வயலுக்கு தண்ணீர் வந்து சேரும். ஆனால், ஆரம்பத்தில் 1000 கன அடிக்கும் குறைவாகதான் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 500 கன அடி தண்ணீர் மட்டுமேஆறுகளில் கசிந்து கொண்டிருக்கிறது.  அதனால், வயல்கள் காய்ந்து போய்க்கிடக்கின்றன. அதனால்தான், விவசாயிகள் மனம் உடைந்து விட்டனர்.

கருகும் பயிர்களைக் காப்பாற்ற முடியாத பரிதவிப்பில் இருப்பவர்களை பயமும் தன்மானமும் நிலைகுலைக்க வைத்ததால்தான், மரணமடைந்திருக்கிறார்கள். வாழ்வாதார இழப்பு என்பது அத்தனை எளிதாகக் கடந்து போகக் கூடியதல்ல. மனிதனின் சப்த நாடியையும் அல்லவா முடக்கி விடுகிறது. இதனால்தான் காவிரி படுகை விவசாயிகள் மரணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்த வேண்டியது… மத்திய, மாநில அரசுகளின் கடமை.

 -கு. ராமகிருஷ்ணன். படங்கள்: கே.குணசீலன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு