Published:Updated:

சிம்பிள் ஜெயலலிதா!

ஆர்.லோகநாதன்படங்கள் : 'ப்ரீத்தி' கார்த்திக்

சிம்பிள் ஜெயலலிதா!

ஆர்.லோகநாதன்படங்கள் : 'ப்ரீத்தி' கார்த்திக்

Published:Updated:
##~##

மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்ற பின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்தார் ஜெயலலிதா. அவரிடம் ஏற்பட்டு இருக்கும் சின்னச் சின்ன மாற்றங்கள் குறித்துதான் ஆச்சர்யத்துடன் பேசுகின்றன திருச்சி, ஸ்ரீரங்கம் வட்டாரங்கள்.

 பொதுவாக, கட்சித் தலைவர்களின் வெளி மாவட்டப் பயணங்களின்போது, அந்தந்த ஏரியா தொண்டர்களின் வரவேற்பு தடபுடலாக இருக்கும். முதல்வர் ஜெயலலிதா முதன்முறையாகத் தனது சொந்தத் தொகுதிக்கு வருகிறார் என்றால் கட்- அவுட்கள், ஃப்ளெக்ஸ் பேனர்கள் என்று வரவேற்பு தூள் பறக்கும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, ஆடம்பரம் தவிர்த்து அமைதி காத்தது திருச்சி. கட்சிக் கொடிகளைத் தவிர, எந்த ஆடம்பர வரவேற்புகளும் இல்லை. ஏர்போர்ட்டில் இருந்து ஜெயலலிதா, ரங்கநாதர் கோயிலுக்கு வந்தபோதும் சரி, மீண்டும் சங்கம் ஹோட்டலுக்குச் சென்ற போதும் சரி, அவருக்காகப் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. அரசு நலத் திட்டத் துவக்க விழாவுக்கு மாலை வந்து சென்றபோதும் அப்படியே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிம்பிள் ஜெயலலிதா!

இந்த ஆச்சர்யம் ரங்கநாதர் கோயிலிலும் தொடர்ந்தது. காலையில் ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய கையோடு, நேராக ரங்கநாதரைச் சேவிக்க ஸ்ரீரங்கத்துக்கு வருகை தந்தார் ஜெயலலிதா. சசிகலா சகிதம் ஜெயலலிதா கோயிலுக்குள் நுழைந்தபோது, மணி 11. செண்டை மேளம் முழங்க ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஆஸ்தான பட்டரான சுந்தர் பட்டர், மாலை மரியாதையுடன் கோயில் வாசலில் வரவேற்றார். ஜெயலலிதாவுக்காகச் சிவப்பு நிறக் கம்பளம் கோயில் பிராகாரத்தில் தயாராக இருந்தது. ஆனால், 'இதெல்லாம் எதுக்கு... வேண்டாமே’ என்று மறுத்த ஜெயலலிதா, வெயிலில் கருங்கல் தரையில் நடந்தே கோயிலுக்குள் நுழைந்தார். இருந்தாலும் விடுவார்களா அதிகாரிகள்? ஜெயலலிதா நடந்து வரும் பாதையில் மினரல் வாட்டரை போலீஸ் அதிகாரிகள் தெளிக்க, அதனைக் கோயில் ஊழியர்கள் துணியால் துடைத்து, வெப்பத்தைத் தணித்தனர்.

முதலில் கருடாழ்வார் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்தவர், அடுத்து ரங்கநாதரைச் சேவிக்கச் சென்றார். ரங்கனைச் சேவிப்பதற்கு முன்பாகப் பிராகாரத்தை ஒரு முறை சுற்றி வந்தார். இடையிடையில் உதவியாளர் கொண்டுவந்திருந்த நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்தார். ரங்கனை ஆற அமரத் தரிசனம் செய்த பின்னர், சசிகலா கையோடு கொண்டுவந்திருந்த பையில் இருந்து நோட்டுக் கட்டுகளை எடுத்துக் கொடுக்க, உண்டியலில் செலுத்தினார் ஜெயலலிதா. ரங்கநாதர் தரிசனம் முடிந்து வெளியே வந்தபோது காராம் பசு, கோயில் யானை, குதிரை மூன்றும் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தன. மூன்றையும் தரிசனம் செய்தவர், தனது சொந்தச் செலவில் வாங்கிய பேட்டரி கார் ஒன்றைக் கோயிலுக்குத் தானமாக அளித்தார். அந்த காரில் சசிகலா சகிதம் அமர்ந்து பிராகாரத்தை ஒரு ரவுண்ட் அடிக்கவும் தவறவில்லை. இதை எல்லாம் பக்தர்கள் அருகில் இருந்தபடியே பார்க்க முடிந்தது. எந்தக் கெடுபிடிகளும் இல்லை. மற்ற சந்நிதிகளில் பக்தர்களோடு பக்தராகத்தான் ஜெயலலிதா தரிசனம் செய்தார். மூலஸ்தானத்துக்கு ஜெயலலிதா சென்றபோது மட்டும் கலெக்டர் ஜெயஸ்ரீ, டி.ஆர்.ஓ. பேச்சியம்மாள் உட்பட யாரை யும் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

மாலையில் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு

சிம்பிள் ஜெயலலிதா!

190 கோடி  மதிப்பீட்டில் புதிய பணிகளைத் துவக்கி வைத்தார். விழா மேடையும் ரொம்பவே சிம்பிள். மேடையை ஒட்டி இருபுறமும் வீடுகள். அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு படையினரைப்பற்றி கொஞ்ச மும் கவலைப்படாமல், மேடையின் முன்னால் அமர்ந்திருந்த அமைச்சர்களுக்கும் கட்சிப் பிரமுகர்களுக்கும் காபி கொடுத்து உபசரித்தனர். ஜெயலலிதா பேசும்போது தங்கள் வீட்டு மாடியில் அமர்ந்து செல்போன் கேமரா மற்றும் டிஜிட்டல் கேமராவினால் புகைப்படம் எடுத்தனர். 'இதே பழைய ஜெயலலிதாவாக இருந்திருந்தால், மீட்டிங் முடியும் வரையில் அவர்கள் அனைவரையும் அலேக்காக வேறு ஏரியாக்களுக்குக் கடத்தியிருக்க மாட்டார்களா?’ என்ற கமென்ட்டைப் பத்திரிகையாளர்கள் மத்தியில் கேட்க முடிந்தது.

தோடு விவகாரத்தைப்போல ஜெயலலிதாவிடம் இன்னொரு மாற்றம். எப்போதும் சிம்பிளான லெதர் வாட்ச் அணிவது ஜெயலலிதாவின் வழக்கம். இப்போதோ அவரது இடது கையில் தங்கமும் பிளாட்டினமும் கலந்த வாட்ச் பளபளத்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism