Published:Updated:

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

Published:Updated:
அணு ஆட்டம்!
##~##

அணு சக்தித் துறை பிறந்த கதை!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உங்கள் தேசத்தை எப்போதும் நேசியுங்கள். ஆனால், உங்கள் அரசை... அது தகுதி உள்ளதாக இருக்கும்போது மட்டும் மதியுங்கள்!''

- அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன்  

சுதந்திர இந்தியாவில் 'அறிவியல் ஆய்வுத் துறை’யின் கீழ் 1948 ஆகஸ்ட் மாதம் இந்திய அணு சக்தி ஆணையம் துவங்கப்பட்டது. ஆறு வருடங்கள் கழித்து ஆகஸ்ட் 3, 1954 அன்று பிரதமரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் அணு சக்தித் துறை (Department of Atomic Energy)உருவாக்கப்பட்டது. இந்தத் துறை உருவாக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆனபோது, 'சமாதானகரமான விவகாரங்களுக்காக அணு சக்தியை உருவாக்குவது’ எனும் மாநாடு ஒன்றில் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பேசினார். 'நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் இன்றியமையாததாக இருப்பதால், நாம் அணு சக்தியை உபயோகித்து மின்சாரம் தயாரிக்க வேண்டும்’ என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

அணு ஆட்டம்!

அணு சக்தித் துறையின் முதல் செயலராகப் பணியாற்றிய ஹோமி ஜஹாங்கீர் பாபா 1962-ம் ஆண்டு, ''இன்னும் 25 ஆண்டுகளுக்குள் 18 முதல் 22 கிகா வாட் வரை, (அதாவது, 18,000 முதல் 22,000 மெகா வாட்) மின்சாரத்தை தமது துறை உற்பத்தி செய்யும்'' என்று சொன்னார். ஆனால், உற்பத்தி செய்தது வெறுமனே ஒரே ஒரு கிகா வாட்தான்.

1966-ம் வருடம், விமான விபத்து ஒன்றில் பாபா மரணமடைந்ததும், விக்ரம் அம்பாலால் சாராபாய் பொறுப்பு ஏற்றார். 1970-ம் ஆண்டு சாராபாய், '1972-73 முதல் ஆண்டுக்கு 500 மெகா வாட் வீதம் அணு சக்தித் துறை மின்சாரம் உற்பத்தி செய்யும் என்று சொன்னார். 1971-ம் ஆண்டின் கடைசி நாளன்று திருவனந்​தபுரம் வந்து தங்கியிருந்த சாராபாய் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு புத்தாண்டு புலர்வதற்கு முன்னரே இறந்துபோனார்.

பின்னர் அணு சக்தித் துறைக்குத் தலைமையேற்ற ஹோமி நுசர்வாஞ்சி சேத்னா, ராஜா ராமண்ணா உதவியோடு 1974-ம் ஆண்டு அணுகுண்டுப் பரிசோதனையை நடத்தினார்.

1957-ம் ஆண்டு ஜூலை 24 அன்று நேரு, நாடாளுமன்றத்துக்குக் கொடுத்த கீழ்க்கண்ட வாக்குறுதி அவரது மகளாலேயே புதைக்கப்பட்டது. 'அணுகுண்டுகள் தயாரிப்பதில் எங்களுக்கு ஈடுபாடு இல்லை

அணு ஆட்டம்!

என்பதை நாங்கள் தெள்ளத்தெளிவாக அறிவித்து இருக்கிறோம். அப்படியே குண்டுகள் தயாரிக்கும் திறன் பெற்றாலும், அணு சக்தியை ஒரு போதும் அழிவு நோக்கங்களுக்காகப் பயன்படுத்த மாட்டோம். இதுவே அனைத்து எதிர்கால அரசுகளின் கொள்கையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று கூறி இருந்தார். 'இந்தியாவில் அணு ஆயுதப் பரிசோதனை நடத்தப்பட்டதும், வெளிநாட்டு உதவிகள் தடைபட்டுவிட்டன. எனவேதான், எங்களால் திட்டமிட்டதுபோல மின்சாரம் தயாரிக்க முடியவில்லை’ என்று நொண்டிச் சாக்கு சொன்னார்கள் அணு சக்தித் துறையினர்.

1989-ம் ஆண்டு துறைத் தலைவராக இருந்த எம்.ஆர்.ஸ்ரீனிவாசன், 2,000 ஆண்டுக்குள் 10,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உறுதிபூண்டார். வழக்கம்போல அதுவும் வெற்றுப்பேச்சாகவே போயிற்று.

2003-ம் ஆண்டு அனில் கசோட்கர், 'இன்னும் நான்கு வருடங்களுக்குள் 6,800 மெகா வாட் மின்சாரம் தயாரிப்போம்’ என்றார். எட்டு வருடங்கள் ஆன பிறகும் 4,000 மெகா வாட் மின்சாரம் மட்டுமே தயாரித்து தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. அணு சக்தித் துறையின் தற்போதைய வாக்குறுதி என்ன தெரியுமா? 2032-ம் வருடத்துக்குள் 60,000 மெகா வாட் மின்சாரம் தயாரிப்பார்களாம்!

அணு சக்தித் துறையின் அனைத்து வாக்குறுதிகளுக்கும் முத்தாய்ப்பாக ஓர் உலக மெகா வாக்குறுதியை அணு சக்தி அமைச்சர் நமது அருமை பிரதமர் மன்மோகன்சிங் அருளினார். 2009-ம் ஆண்டு அக்டோபர் 1, 2 தேதிகளில் அணு சக்திக்கு எதிராக நாங்கள் 'டெல்லி பேரணி’ நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டபோது, செப்டம்பர் 29-ம் தேதி அணு சக்தித் துறை, டெல்லியில் மூன்று நாள் மாநாடு நடத்தியது. துவக்கிவைத்துப் பேசிய பிரதமர் 2050-ம் ஆண்டுக்குள் 4,70,000 மெகா வாட் மின்சாரத்தை அணு சக்தித் துறை தயாரிக்கும் என்று ஓர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டார்.

ஆஸ்திரேலியா முதல் ஐரோப்பா வரையுள்ள ஊடகங்கள் பல என்னையும், பிற எதிர்ப்பாளர்களையும் தொடர்புகொண்டு, 'இது சாத்தியமா?’ எனக் கேட்டனர். 'சத்தியமாக சாத்தியம் இல்லை!’ என்றோம். 'குங்குமம் என்பதை நான் அறிவேன், அது மஞ்சள்போல வெண்மையாய் இருக்கும்’ என்ற கதைபோலத்தான் மன்மோகன் சிங்கின் மெகா வாட், கிகா வாட் கதையும்!

இந்திய அரசின் 1958-ம் ஆண்டு தீர்மானம் மூலமாக அணு சக்தி ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம்தான் அணு சக்தித் துறைக்கும் அணு சக்தி ஒழுங்காற்று வாரியத்துக்கும் (AERB- Atomic Energy  Regulatory Board) தலைவராகச் செயல்படுகிறது. ஆணையத்தின் தலைவரே பெரும்பாலும் அணு சக்தித் துறையின் செயலாளராகவும் இயங்குகிறார். ஒழுங்காற்று வாரியம் இவரது கட்டுப்பாட்டுக்கு உள்ளேயே இருக்கிறது. இரட்டை வேடப் படத்தில், எம்.ஜி.ஆரே திருடனாகவும் போலீஸாகவும் நடிப்பதுபோல, அணு சக்தித் துறையே ஆபத்துகளை உருவாக்கும்... அந்தத் துறையே தவறுகளையும் கண்டுபிடிக்கும். இல்லை, கண்டுபிடிப்பதுபோல நடிக்கும். கள்வனும் நானே, காவலனும் நானே!

அணு சக்தித் துறையின் நடவடிக்கைகளைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், 'வேலியே பயிரை மேயும் கதை!’ 

அணு சக்தி அம்மன்

- ஓரங்க நாடகம்

அணு ஆட்டம்!

காலன்குளம் அணு மின் மற்றும் அணுகுண்டுத் திட்டம் 2007-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காலன்குளத்தைச் சுற்றிலும் இருந்த விவசாயக் கிராமங்கள், மீனவக் கிராமங்கள், தலித் கிராமங்கள் எல்லாம் காலி செய்யப்பட்டு, மக்கள் அனைவரும் மேம்பாட்டுக் குடியிருப்பு என்று அழைக்கப்படும் நவீனக் குடியிருப்புக்கு மாற்றப்பட்டுவிட்டனர். ஆனால், தமது நிலம், கடல், பாரம்பரிய வாழிடத்தைப் பறிகொடுத்த மக்கள் கொடும் வறுமையிலும், பெரும் துயரத்​திலும் தள்ளப்பட்டனர்.

ஓர் ஏழைப் பெண்ணின் மகனுக்குப் புற்றுநோய் வந்து என்ன​வென்று தெரியாது உரிய சிகிச்சையின்றி, உள்ளூர் சாமியாரிடம் உதவி கேட்கிறார். சாதாரண மக்கள் இப்படித் துயரப்​படும்போது, விஞ்ஞானி​களும், அரசியலாளர்களும், பத்திரிகையாளர்களும், சமயக் குருமார்களும் தத்தம் சுய லாபங்​களை நிறைவேற்றிக்​கொண்டு உயர் வாழ்க்கை வாழ்வதைக் கோடிட்டுக் காட்டி, காலன்குளம் அணு உலையின் பின்புலத்தில், இந்த இரு உலகங்​களும் உரசு​வதைப் படம்பிடித்துக் காட்டு​கிறது இந்த நாடகம்.

ஆங்கிலத்தில் நான் எழுதியதை, காலஞ் சென்ற என் எழுத்தாள நண்பரும், சுற்றுச்சூழல் போராளியுமான அசுரன் தமிழில் மொழிபெயர்த்தார். அணு சக்தி இயற்பியல், அரசியல், பொருளாதாரம், சட்டம், சர்வதேச நிகழ்வுகள் எல்லாம் மெத்தப் படித்தவர்களுக்கே முழுக்கப் புரியாதிருக்கும் நிலையில், சாதாரண மக்களுக்கு உண்மைகளைச் சொல்ல நாடகம் வழி முயற்சித்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது. ஓரிரு இடங்களில் நடிக்கப்பட்டும், உலகெங்கும் படிக்கப்​பட்டும் வருகிறது. 

அணு ஆட்டம்!

ஜ.ஸ்ரீராமன்

இந்தியா 1998-ம் ஆண்டு அணுகுண்டு பரிசோதனை செய்தபோது, ஸ்ரீராமன், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணிபுரிந்தார். நண்பர்களோடு சேர்ந்து 'அணு ஆயுதங்களுக்கு எதிரான பத்திரிகையாளர்கள்’ அமைப்​பி​னைத் துவக்கினார். பின்னர் 30-க்கும் அதிகமான இயக்கங்களுடன் சேர்ந்து, 'அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கம்’ ஒன்றைத் துவங்கி, அதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப் போட்டிக்கு எதிரான 'ஃபிளாஷ்பாயின்ட்’ எனும் புத்தகத்​தை எழுதியிருக்கும் இவர், முன்​னணிப் பத்திரிகைகளில் கட்டு​ரைகள் எழுதுகிறார். அணு ஆயுதக் குறைப்பு மற்றும் சமாதானக் கூட்டிணைவின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்!

- அதிரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism