இந்தியா முழுவதும் இன்று நாட்டின் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. முன்னதாக, `சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பொதுமக்கள் யாரும் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள வேண்டாம்’ என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. மேலும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குடியரசு தின விழா தொடங்கியது.

இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய மூவர்ணக் கொடியேற்றி, மரியாதை செலுத்தி விழாவைத் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றுவதென்பது இதுவே முதன்முறை. தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர், முதல்வர் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வீரதீரச் செயலுக்காக வழங்கப்படும் அண்ணா மற்றும் காந்தியடிகள் காவலர் பதக்கங்களை, தமிழக அரசால் தேர்வுசெய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கினார். மேலும் சிறந்த காவல் நிலையத்துக்கான கோப்பை வழங்கப்பட்டது, இதை திருப்பூர் மாநகர காவல் நிலையத்துக்கு ஸ்டாலின் வழங்கினார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, அலங்கார ஊர்தி உட்பட தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் முதலாவதாகத் தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்களின் நாகஸ்வர இசையுடன், முதல்வர் ஸ்டாலின் படத்துடன் `காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அலங்கார ஊர்தி சென்றது.

பின்னர் அணிவகுத்துச் சென்ற அலங்கார ஊர்திகளில், வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள், பாரதியார், வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பெரியார், காயிதே மில்லத், ராஜாஜி, காமராஜர், ரெட்டைமலை சீனிவாசன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் சிலைகள் இடம்பெற்றன. இறுதியாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பின் நிறைவாக 30 நிமிடங்களில் குடியரசு தின விழா நடைபெற்று முடிந்தது.