Published:Updated:

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 20: 15.3.89, 22.3.89

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 20: 15.3.89, 22.3.89

Published:Updated:
பழசு இன்றும் புதுசு

சென்ற வருடம் நவம்பர் மாதம் 28-ம் தேதி அன்று பிரதமர் ராஜீவ் காந்தியால் அடிக்கல் நாட்டித் துவக்கப்பட இருந்தது, கூடங்குளம் அணு மின் நிலையங்கள் திட்டம். அது தமிழகம் முழுவதும் கிளர்ந்த பெரும் எதிர்ப்பால், கால வரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே! 

மக்கள் சக்தி முன், அணு சக்தித் துறை தன்னுடைய 30 வருட வரலாற்றில் தோற்றுப்போனது இங்குதான் முதல் முறை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூடங்குளத்தில் அணு மின் நிலையங்கள் அமைவதால், மின்சாரப் பற்றாக்குறை ஒன்றும் குறையாது. மாறாக, நாம் பல புதிய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். அவற்றைப்பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

1974 டிசம்பர் மாதம் வெளிவந்த சர்வதேச அணு சக்திக் கழகத்தின் அறிக்கை ஒன்றிலேயே, இரண்டு இந்திய விஞ்ஞானிகள் கூடங்குளத்தை அணு மின் நிலையங்கள் அமைக்க ஏற்ற இடமாகக் குறிப்பிட்டு இருந்தனர். அணு மின் நிலையங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்யும்போது, அங்கு அவை அமைக்கப்பட்டால், சுற்றுச்சூழல் மீது ஏற்படக்கூடிய தாக்கம்பற்றிய ஆய்வு அறிக்கை எதையும் அணு சக்தித் துறை இதுவரை தயாரித்து வெளியிடவில்லை. அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் ஒரு சான்றிதழும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுமே போதுமானது என்று அணு சக்தித் துறைத் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சீனிவாசனே ஒப்புக்கொண்டுள்ளார்.

இரண்டு 1,000 மெகா வாட் வி.வி.இ.ஆர். வகை அணு மின் நிலையங்களை சோவியத் யூனியனிடம் இருந்து வாங்கிக் கூடங்குளத்தில் நிறுவ, சென்ற நவம்பர் மாதம் சோவியத் தலைவர் கோர்ப்பசேவ் புது டெல்லி வந்தபோது, ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்தியாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் உள்ள வர்த்தக உறவில் உபரித் தொகை (டிரேட் பேலன்ஸ்) இந்தியாவின் பக்கமே அதிகமாக இருப்பதால், இந்த அணு மின் நிலையங்களின் இறக்குமதி சோவியத் யூனியனுக்கே அதிக ஆதாயத்தை அளிக்கும் என்று 'நியூக்ளியர் இன்ஜினீயரிங் இன்டர்நேஷனல்’ என்ற பத்திரிகை கூறுகிறது.

கூடங்குளம் பகுதியில் இரண்டு 1,000 மெகா வாட் அணுமின் நிலையங்களை அமைப்பதன் மூலம் உடனடியாக 15,000 பேர்தான் வெளியேற்றப்படுவார்கள் என்று ஆளுநர் அலெக்சாண்டர் அறிவித்திருந்தார். உண்மையில், கூடங்குளம் பஞ்சளம், பெருமணல், இடிந்தகரை கிராம மக்களும் அப்பகுதியில் இருந்து சில ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு வெளியேற்றப்பட உள்ளோரின் எண்ணிக்கை 25,000-க்கும் அதிகமாகும்!

அணு மின் நிலையங்கள் அமைக்கப்​பட்டால், அவை சாதாரணமாக இயங்கும்போது கடல் பிரதேசம் முழுவதும் கதிரியக்கம் பரவும். சிதம்பரனார் மாவட்டத்தில் உள்ள உவரியில் இருந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம் வரையில் உள்ள 75 கி.மீ தூரம் உள்ள சுற்றுவட்டாரக் கடற்கரைப் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக மீன் பிடித் தொழில் நசிவுறும். இதனால் சுமார் மூன்று லட்சம் மீனவ மக்களின் வாழ்க்கையின் அடித்தளம் தகர்த்து எறியப்படும்.

இது தவிர, அணு மின் நிலையங்களைச் சுற்றி, 10 கி.மீ. தூரத்துக்கு உட்பட்ட பகுதியில் விவசாயத் தொழிலும் நசிவுறும். இதனால் அருகில் உள்ள ராதாபுரம், விஜயாபதி, விஞ்ஞானிகள் குடியிருப்புகள் அமையப்போகும் செட்டிக்குளம் போன்ற பல கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களைத் துறந்துவிட்டு வெளியேற வேண்டியிருக்கும். மொத்தத்தில், அணு மின் நிலையங்கள் கட்டி இயங்கத் துவங்கியவுடன், சுமார் ஒரு லட்சம் மக்கள் வெளியேற நேரிடலாம்.

பழசு இன்றும் புதுசு

அணு மின் நிலையங்களில் வேலை செய்ய ஐ.ஐ.டி. போன்ற உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் படித்த​வர்கள்​தான் தேர்வு செய்யப்படுவர். இப்பகுதியில் வசிக்கும் சராசரி மனிதனுக்கு அணு உலையில் கடைநிலை ஊழியர் வேலையைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆகையால்தான், இப்போது கூடங்குளம் பகுதியில் வாழும் (விழித்துக்கொண்டுவிட்ட) மக்கள் அணு சக்தித் துறையின் 'வேலை வாய்ப்பு பெருகும்’ என்ற பொய்ப் பிரசாரத்தை நம்பத் தயாராக இல்லை. வேலை இல்லையே தவிர, நிச்சயமாகக் கதிரியக்கமும், கதிர் காய்ச்சல் மற்றும் கதிரியக்கப் பாதிப்பும் உண்டு. அந்த பாதிப்பு இப்போது உள்ள மக்களுக்கு மட்டும் அல்லாமல் இனி வரப்போகும் மனித சந்ததியினருக்கு ஆயிரக்​கணக்கான ஆண்டு​களுக்குத் தொடரும்.

மேற்கூறிய காரணங்களுக்காக, கடந்த சில மாதங்களாகவே இப்பகுதி மக்கள் அணு மின் நிலையங்கள் அமைக்கப்​படுவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இப்போது இந்தப் போராட்டம் மாநிலம் தழுவிய ஒன்றாக மாறி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளைப் பொறுத்த வரை, அணு மின் நிலையத்தினால் ஏற்படக்கூடிய கதிரியக்கக் கவலையுடன், மற்றொரு வேதனையும் அவர்களுக்கு உள்ளது. இந்த மாவட்டத்தில் நீர்ப் பாசன வசதிக்காக இருக்கும் பேச்சிப் பாறை அணைக்கட்டில் இருந்துதான் கூடங்குளம் அணு மின் நிலையங்களுக்கு நீர் எடுத்துச் செல்லப்பட வேண்டும். வி.வி.இ.ஆர். வகை அணு உலைகள் லிவீரீலீt கீணீtமீக்ஷீ என்று அழைக்கப்படும் சாதாரணத் தண்ணீரைத்தான் பெரும் அளவுக்குப் பயன்படுத்தும். அணு உலைகளுக்கும் அங்கு தோன்றப்போகும் குடியிருப்புக்கும் தண்ணீர் எப்போதும் தேவை என்பதால், ஆண்டு முழுவதும் பேச்சிப்பாறை தண்ணீர் கூடங்குளத்துக்குப் போக வேண்டியிருக்கும். கிணற்றுப் பாசன முறையே இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமான பேச்சிப்பாறை அணையின் நீர் கூடங்குளம் அணு உலைக்குச் சென்றுவிட்டால், நாஞ்சில் நாட்டு விவசாயத்தின் கதி என்ன? இதைப்பற்றி அணு சக்தித் துறை கவலைப்படவில்லை!

தற்கொலை செய்துகொண்ட தலைசிறந்த சோவியத் அணு சக்தி விஞ்ஞானி வேலரி லெகசோவ்வின் ஒரு குறிப்பைப் பார்ப்போம்: ''விபத்து நடந்த செர்னோபிலுக்கு நாங்கள் விரைந்துகொண்டு இருந்தோம். அப்போது எங்களுக்கு இந்த விபத்தின் தீவிரம் தெரியவில்லை. ஏன் இப்போதும்கூட தெரியவில்லை என்றுதான் சொல்வேன். மனித வரலாற்றிலேயே மிகப் பயங்கரமான குறியீடாக இது நம் சந்ததியினரால் நிச்சயமாகப் பதிவுசெய்யப்படும். எரிமலைகளின் கொந்தளிப்பில் ரோமானியக் கலாசாரம் அழிந்துபோய் பாம்பே நகர இடிபாடுகளை, சிதைவுகளை இன்று நாம் காண்பதைப்போல்...''

நிலைமை இப்படி இருக்க, அணு சக்தித் துறை மட்டும் ஒரே ஒரு பதிலைத்தான் திரும்பத் திரும்பக் கூறுகிறது. அது, ''கூடங்குளத்தில் அமைய இருக்கும் வி.வி.இ.ஆர். வகை அணு உலைகள், செர்னோபிலில் விபத்துக்கு உள்ளான ஆர்.எம்.பி.கே. வகையைச் சார்ந்தது அல்ல. எனவே, கவலைப்பட ஒன்றும் இல்லை!''

ஆனால், நமக்கோ கேள்விகள் பல தோன்றுகின்றன:

1. கட்டப்பட்டு வந்த மூன்று அணு மின் நிலையங்களை சோவியத் அரசாங்கமே மூடும்போது, இந்திய அரசாங்கம் அங்கே இருந்து அணு உலைகளை இறக்குமதி செய்வது ஏன்?

2. சோவியத் யூனியனுக்குத் தேவையான புளூட்டோனியம், கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படுவது எதற்காக?

3. இந்த புளூட்டோனியத்தைக் கொண்டு சோவியத் யூனியன் அணு ஆயுதங்களைத் தயாரிக்கப்போகிறதா?

4. இல்லை எனில், புளூட்டோனியத்தை சோவியத் யூனியன் 25,000 வருடங்களுக்கும், அதற்கு மேலும் 'பாதுகாப்பாக’ வைத்துக்கொள்ளப்போகிறதா? எங்கு? எப்படி?

5. இதனால், உலக மக்களின் சமாதானத்துக்கும் நல்வாழ்வுக்கும் ஏற்படப்போகும் அபாயம் என்ன?

6. பண்டைத் தமிழக வரலாற்றில் வரும் குமரியாறும், பஃறுளியாறும், கபாடபுரமும், தென் மதுரையும் மறைந்ததுபோல, இப்போது இருக்கும் தமிழகமும் சுவடு அற்று மறைந்துபோக வேண்டுமா?

கூடங்குளத்தை நிறுவ அனுமதித்தால், கபாடபுரத்துக்கு நேர்ந்த கதிதான் நமக்கும்!

- ஏ.எஸ்.பன்னீர்செல்வன், நாகார்ஜுனன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism