Published:Updated:

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

இறுதிப் போர்...

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

இறுதிப் போர்...

Published:Updated:
அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..
##~##

'மதத்தின் காரணமாக மனிதனிடம் இருந்து மனிதனைப் பிரித்துவைப்பது முற்றிலும் தவறு என்பதில், நான் உறுதியாக இருக்கிறேன். எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால்... வகுப்புவாதத்தையும், மத வெறியையும், வெறுப்பு உணர்வையும், பகையையும் வளர்த்தெடுக்கும் எல்லா எழுத்துகளையும் தீண்டத்தகாதவையாக அறிவிப்பேன்!’ என்று பிரகடனம் செய்தார் மகாத்மா. மதம்தான் இந்தியாவை இரண்டாகப் பிளந்தது. 'இந்தியாவை இரண்டாகக் கூறு போடும் முன்னர் எனது உடலை முதலில் நீங்கள் கூறு போட வேண்டியிருக்கும்’ என்று வேதனையுடன் தன் அடிமனதின் ஆற்றாமையை வெளிப்படுத்திய காந்தியின் குரலுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவசரம் அவசரமாக நாட்டைக் கூறு போட்டு, அதிகாரத்தை அனுபவிக்க ஒரு பக்கம் காந்தியின் சீடர்களும், மறு பக்கம் ஜின்னாவின் தளபதிகளும் தயாராகிவிட்டனர். மனித குல வரலாறு அது வரை கண்டிராத பேரழிவுப் பிரளயம் இந்திய - பாகிஸ்தான் எல்லைகளில் பெருக்கெடுக்கப்போவதை முன்கூட்டி​யே உணர்ந்து, அதைத் தடுத்து நிறுத்த முனைந்த ஒரே மனிதர் மகாத்மா மட்டுமே!

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

ஆனால், 78 வயதான அந்தக் கிழவரின் துடிப்பையும் தவிப்பையும் யாரும் கண்டு​​ கொள்​ள​வில்லை. இரண்​டாம் உலகப் போரில் பலியான​வர்களின் ரத்தம் பல நாடு​களில் ஓடியது. ஆனால், பிரி​வினைக்குப் பின்னால் இந்தியத் துணைக் கண்டத்தில் ஓடிய ரத்த வெள்ளத்துக்கு ஈடாக எந்த நாட்டி​லும் மனித ரத்தம் மண்ணை நனைத்தது இல்லை. மதங்களின் பேரால் நடந்த அந்த

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

வெறியாட்டத்தில் மனிதர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. பஞ்சாப் நிலப்பரப்பு இரு நாடுகளுக்கும் இடையில் பங்கு பிரிக்கப்பட்டதில், 50 லட்சம் சீக்கியர்களும் இந்துக்களும் பாகிஸ்தானிலும், 50 லட்சம் முஸ்லிம்கள் இந்தியப் பகுதியிலும் சிக்கிக்கொண்டனர். இரண்டு பக்கமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கால்வாய்களில், வீதிகளில், பிரார்த்தனைக் கூடங்களில், வாழும் வீடுகளில் எங்கு நோக்கினும் பிணங்களின் குவியல், குருதியின் வாடை. மேற்கில் லாகூர் எரிந்தது, கிழக்கில் கொல்கத்தா கரிந்தது. மத வெறியின் வேகம் தணிக்க, மகாத்மா கொல்கத்தாவில் உண்ணாவிரதத்தை அறிவித்தார். அதுவரை வெள்ளையருக்கு எதிராக ஏந்திய உண்ணாவிரத ஆயுதத்தை, முதன் முதலாகத் தம் மக்களுக்கு எதிராக ஏந்த அண்ணல் முடிவு செய்தார்.

வங்கத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ராஜாஜி, 'வெறி பிடித்த கும்பலால் உங்களுக்கு மரணம் நேரக்கூடும்’ என்று தன் அந்தரங்க அச்சத்தை வெளிப்படுத்தியபோது, 'குறைந்தபட்சம் இந்த அநாகரிகப் பேரழிவுக்கு நான் வாழும் சாட்சியாக இருக்க மாட்டேன் அல்லவா?’ என்று விரக்தியுடன் பதில் அளித்தார் பாபுஜி. காந்தி மேற்கொண்ட 72 மணி நேர உண்ணாவிரதம், கொல்கத்தாவில் இரண்டு மதத்தவரிடமும் இணக்கமான சூழலை உருவாக்கியது. அரக்க இருள் கலைந்து அமைதி வெளிச்சம் பிறந்த பின்பு, மகாத்மா புது டெல்லிக்குப் புறப்பட்டார். வழக்கமாக அவர் தாழ்த்தப்பட்டோரிடையே தங்கும் பங்கி துப்புரவுத் தொழிலாளர் காலனியில் இந்த முறை தங்குவதற்கு வல்லபபாய் படேல் விடவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக பிர்லா மாளிகையில் ஓர் அறையில் அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிப்புக்கு உள்ளான இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் அனைவரும் நிவாரணம் தேடி அண்ணலை நோக்கிப் படையெடுத்தனர். மத வெறித் தீயில் பற்றி எரிந்த டெல்லியில், காந்தியின் இருப்பிடம்தான் பாதுகாப்புச் சரணாலயமாகத் திகழ்ந்தது.

பாகிஸ்தானில் பலியான இந்துக்களுக்காக, டெல்லியில் முஸ்லிம்களைப் பழிவாங்கும் படலம் அரங்கேறியது. துன்பத்துக்கும் துயரத்துக்கும் ஆளா​னவர்களை அமைதிப்படுத்த அண்ணல் அன்றாடம் பிர்லா மாளிகைத் தோட்டத்தில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தினார். கீதையில் இருந்தும், பைபிளில் இருந்தும், குர்-ஆனில் இருந்தும் வாசகங்கள் படிக்கப்பட்டன. குர்-ஆனில் இருந்து வாசகங்கள் படிக்கப்பட்டபோது, வெறி பிடித்த ஒரு கும்பல், 'காந்தி முர்தாபாத் - காந்தி ஒழிக’ என்று கூக்குரலிட்டது. அவரது வாழ்வில் முதன் முதலாகப் பிரார்த்தனைக் கூட்டம் பாதியில் முடிந்தது. மகாத்மா மனம் நொந்தார். இந்த மண்ணில் 125 ஆண்டுகள் வாழ்ந்து அகிம்சையை வளர்க்க ஆசைப்பட்டவர், 'மதங்களை மையமாக்கி மனிதர்கள் மரிப்பது முடிவுக்கு வர வேண்டும். இல்லையெனில், என் வாழ்வு இப்போதே முடிந்துவிடவேண்டும்!’ என்று வாய்விட்டுப் புலம்பினார்.

பிரிவினையின்போது உருவாக்கப்பட்ட உடன்படிக்கையின்படி பாகிஸ்தானுக்குத் தரவேண்டிய 55 கோடியைத் தருவதற்கு இந்திய அரசு தயங்கியது. காஷ்மீரில் படையெடுத்த பாகிஸ்தான், இந்தப் பணத்தை ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்தும் என்று படேலும் நேருவும் அஞ்சினர். காந்தி இதை சர்வதேச மோசடிச் செயல் என்று கருதினார். 'வாய்மை தவறக் கூடாது!’ என்று வலியுறுத்தினார். ஆனால், காந்தியின் ஆட்சேபத்தை, காங்கிரஸ் அரசு புறக்கணித்தது. மகாத்மா மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்தார். தனது முடிவை மவுன்ட்பேட்டனிடம் அவர் அறிவித்தபோது, 'உங்கள் அறிவுரையை நேருவும் படேலும் புறக்கணித்துவிட்டார்களே!’ என்றார், அந்த வெள்ளையரின் கடைசி கவர்னர் ஜெனரல். 'நான் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டால், என்னை அவர்களால் புறக்கணிக்க முடியாது!’ என்று சொல்லிப் புன்னகைத்தார் தேசப்பிதா.

காந்தியின் கடைசி உண்ணாவிரதம், 1948 ஜனவரி 13 அன்று தொடங்கியது. 'பாகிஸ்தானுக்குத் தர வேண்டிய பணம் உடனே தரப்பட வேண்டும். கலவரத்தின்போது கோயில்களாக மாற்றப்பட்ட மசூதிகள், முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான பொருளாதாரத் தடை நீக்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் வாழும் கரோல்பாக், சப்ஸி மண்டி போன்ற பகுதிகளில் அமைதி திரும்ப வேண்டும். பாகிஸ்தான் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட முஸ்லிம்கள் திரும்ப அழைக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் அனுமதித்தால் மட்டுமே, இந்துக்கள் குடியேற வேண்டும். ரயில்களில் முஸ்லிம் மக்கள் பாதுகாப்புடன் பயணம் செய்யும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். க்வாஜா பக்தியார் சாகேப் விழாவை முஸ்லிம்கள் சிறிதும் அச்சமின்றிக் கொண்டாட அனுமதிக்க வேண்டும்’ என்று மகாத்மா விதித்த நிபந்தனைகள் இந்துக்களின் கோபத்தைத் தூண்டின. 'பாகிஸ்தானில் உள்ள இந்துக்களும் சீக்கியர்களும் கொல்லப்பட்டாலும், இந்திய மண்ணில் ஒரு முஸ்லிம் குழந்தையின் உயிருக்குக்கூட ஊறு நேர்ந்துவிடக் கூடாது’ என்ற காந்தியின் வேண்டுகோள், இந்துக்களின் வெறுப்பு நெருப்பை மேலும் வளர்த்துவிட்டது. மகாத்மா இந்துக்களின் பகைவன் ஆனார்!

கொல்கத்தா உண்ணாவிரதத்தில் பாதிக்கப்பட்ட அண்ணலின் சிறுநீரகங்கள், மேலும் சிதைந்தன. அவருடைய மெலிந்த உடலின் கொழுப்புச் சத்து குறைந்து, புரதச் சத்து அரிக்கப்பட்டது. உண்ணாவிரதத்தின் நான்காம் நாள் மரண வாசலில் நுழைந்தார் மகாத்மா. காந்தி இருந்த அறைக்குள், வெறியேறிய இந்துக்களின் கூக்குரல் கேட்டது. பலவீனத்துடன் படுத்திருந்த காந்தி, தன் செயலாளர் பியாரே  லாலிடம், 'என்ன நடக்கிறது?’ என்று சன்னமான குரலில் கேட்டார். 'காந்தி செத்துத் தொலையட்டும்’ என்று குரல் எழுப்பப்படுவதைக் கண்ணீருடன் பகர்ந்தார் பியாரே லால். நாடு காட்டிய 'நன்றி’ அது!

அகில இந்திய வானொலி, மணிக்கு ஒரு முறை காந்தியின் உடல்நிலை குறித்து அறிக்கை வாசித்தது. உலகம் முழுவதும் உள்ள செய்தியாளர்கள், மகாத்மாவின் மரணச் செய்திக்காக பிர்லா மாளிகை வாசலில் தவம் கிடந்தனர். 'காந்தியை இழந்துவிடுவோம்’ என்று அஞ்சிய இந்திய அரசு, உடனடியாக பாகிஸ்தானிடம் பணம் கொடுத்தது. ஜின்னாவின் திவாலாகிவிட்ட பாகிஸ்தானை, காந்தி காப்பாற்றினார். நன்றிப்பெருக்கில் பாகிஸ்தான் முஸ்லிம்கள், காந்தியின் உயிருக்காகப் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தினர். கோட்சே கும்பல் மும்பையில் இருந்து டெல்லி புறப்பட்டது.

மரணத்தை நெருங்கிக்கொண்டு இருந்த மகாத்மா, 'மற்ற நிபந்தனைகளும் நிறைவேறிய பின்பே உண்ணாவிரதம் நிற்கும்’ என்றார். ஜனவரி 18 அன்று காந்தியின் படுக்கை அருகில் கண்ணீருடன் இந்து, சீக்கிய, முஸ்லிம் தலைவர்கள் காத்திருந்தனர். அவருடைய அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதாக உறுதிமொழியைத் தயாரித்தனர். அந்த உறுதிமொழிக் கடிதத்தில் இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதிகளும் கையப்பம் இட்டிருந்ததைக் கண்டு, காந்தியின் இதழ்களில் புன்முறுவல் பூத்தது. நேருவும், மௌலானா ஆசாத்தும் கண்ணீருடன் கொடுத்த ஆரஞ்சு சாறு பருகி அண்ணல் தன் கடைசி உண்ணாவிரதத்தை முடித்தார். இன்னும் 12 நாட்களில் படுகொலைக்கு ஆளாக இருந்த காந்தியின் இறுதிப் போர் அது என்பதை, அப்போது அங்கே இருந்த யாரும் அறிந்திருக்க நியாயம் இல்லை.

இந்துக்கள், மகாத்மாவை 'முஸ்லிம்​களின் ஆதரவாளர்’ என்று நினைத்தனர். கோட்சேவும் தன் மரண வாக்குமூலத்தில், 'ஒரு முறைகூட காந்தி, முஸ்லிம்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தது இல்லை’ என்று வன்மத்துடன் குறிப்பிட்டார். முஸ்லிம்களோ காந்தியை, 'இந்துக்களின் நலனுக்காக இயங்குபவர்’ என்று பழித்தனர். மகாத்மாவுக்கு மரண அஞ்சலி செலுத்திய இரங்கல் செய்தியிலும் ஜின்னா, 'ஒரு நல்ல இந்து கண் மூடிவிட்டார்’ என்றுதான் குறிப்பிட்டார். அம்பேத்கர், அண்ணலை இறுதி வரை சாதி இந்துக்களின் தலைவராகவே விமர்சனம் செய்தார். மகாத்மாவின் வாழ்க்கையை மனிதர்களால் சரியாக மதிப்பீடு செய்ய இயலாது. இன்று வரை காந்தி தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறார். அவர் மீது வெறுப்புடன் வீசப்படும் விமர்சனக் கணைகள், காலத்தின் நீட்சியில் கூர்மை இழந்துவிடவில்லை. ஆனாலும், காந்தியின் அகிம்சை ஆயுதம் சில நேரங்களில் காந்திய எதிர்ப்பாளர்களாலும் கையாளப்பட்டது. ஒரு வன்முறைத் துப்பாக்கியில் இருந்து அகிம்சைமலர் வீசப்பட்ட அந்த அதிசயத்தை அடுத்த இதழில் காண்போம்!

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism