Published:Updated:

சோனியாவுடன் நகை வியாபாரிகள் சந்திப்பு: தங்கம் மீதான வரி குறையும்?

Vikatan Correspondent
சோனியாவுடன் நகை வியாபாரிகள் சந்திப்பு: தங்கம் மீதான வரி குறையும்?
சோனியாவுடன் நகை வியாபாரிகள் சந்திப்பு: தங்கம் மீதான வரி குறையும்?
சோனியாவுடன் நகை வியாபாரிகள் சந்திப்பு: தங்கம் மீதான வரி குறையும்?

புதுடெல்லி; காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை நகை வியாபாரிகள் இன்று சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து தங்கத்தின்  மீதான வரியை மத்திய அரசு குறைக்கும் என்று தெரிகிறது. 

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 2 சதவீதத்தில் இருந்து 4  சதவீதமாக உயர்த்தப்பட்டது.

தங்கத்துக்கான சுங்க வரியும் 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. 5 சதவீதம் வரி விதிப்பால் தங்கள் தொழில் மிக கடுமையாக  பாதிக்கப்படும் என்று நகைக்கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம்  நடத்தி வருகிறார்கள்.இந்த போராட்டம் காரணமாக அகில இந்திய அளவில் இதுவரை ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய்  இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நகைக்கடை உரிமையாளர்கள் மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து நடத்திய  பேச்சுவார்த்தையை தொடர்ந்து,  இன்று காலை 10.30 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை  சந்தித்துப்  பேசினார்கள்.

அப்போது அவர்கள், த்ங்கத்தின் மீதான 5 சதவீத வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சோனியாவிடம் விளக்கமாக  எடுத்துரைத்ததோடு, தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை முழுமையாக விலக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.  அப்போது, நகைக்கடை உரிமையாளர்களின் கோரிக்கைகள் பரிசீலக்க்படும் என சோனியா உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அவர்கள் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசினார்கள். அவரிடமும் இதே  கோரிக்கையை வலியுறுத்தினர்.

நகை வியாபாரிகள் கேட்டுக் கொண்டால் வரி குறைப்பு பற்றி பரிசீலிக்க தயார் என்று பிரணாப் ஏற்கனவே அறிவித்திருந்த  நிலையில், தற்போதைய சந்திப்பை தொடர்ந்து,  தங்கம் மீதான சுங்கவரி குறைக்கப்படும் அல்லது திரும்பப் பெறப்படும்  என்று மத்திய வரிவிதிப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சோனியா காந்தி மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் நடத்திய சந்திப்பு மற்றும் அவர்களிடமிருந்து கிடைத்த சாதகமான பதிலைத் தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர்கள் த்ங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.