Published:Updated:

எம்.ஜி.ஆர். இறந்த அன்று.... ஜெயலலிதா இறந்த அன்று... சென்னையில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது? 

எம்.ஜி.ஆர். இறந்த அன்று.... ஜெயலலிதா இறந்த அன்று...  சென்னையில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது? 
எம்.ஜி.ஆர். இறந்த அன்று.... ஜெயலலிதா இறந்த அன்று... சென்னையில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது? 


 

அன்று...

24.12.87...வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் தான் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மரணம் என்கிற செய்தி ஊர்ஜிதமாக நகரினுள் பரவியது.தொண்டர்கள் செயலிழந்து கதறித்துடிக்க, பல சமூக விரோதிகள்...இந்த சோகமான நேரத்தை வசதியாகப் பயன்படுத்திக்கொண்டனர். திறந்திருந்த ஒட்டல்களில் டீ குடித்துவிட்டு, காசு கொடுக்காமல் கடைக்காரர்களைத் தாக்கினார்கள். கோடம்பாக்கம் பகுதியில் நான்கு டீக்கடைக்காரர்கள் காயம் அடைந்தார்கள். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்போக, ’உங்களை யாருய்யா கடையை திறக்கச் சொன்னது? உயிரோட வந்திருக்கீங்களே...இதுவே பெரிசு!’ என்று சொல்லி விரட்டினார்கள். வாகனங்களில் செல்பவர்களின் மீது கல்லெறியும் கலாட்டா துவங்கியபோது, காலை மணி எட்டு. நுங்கம்பாக்கம் வள்ளுவர் சிலையருகே ஒரு மாருதி காரை துவம்சம் செய்தார்கள். அண்ணா சாலையின் இருபுறமும் சவுக்குக் கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அந்த சவுக்குக் கம்புகளை ஆளுக்கொன்றாய் உருவிக்கொண்டு சைக்கிளில் செல்பவர்கள் மீது கூட அடித்து சந்தோஷப்பட்டார்கள். ஆயிரம் விளக்குப் பகுதியில் ஒரு ஜவுளிக்கடை, மாடியில் தையல்கடை போன்றவற்றைச்  சூறையாடினார்கள். அண்ணா மேம்பாலம் முதல் அண்ணா சிலை வரையிலான பகுதிகளில் இருந்த கடைகள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளானது. அண்ணா சாலையில் இருந்த முக்கிய பிரமுகரின் சிலையை சேதப்படுத்தினார்கள். 

எம்.ஜி.ஆர். இறந்த அன்று.... ஜெயலலிதா இறந்த அன்று...  சென்னையில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது? 

அன்று இரவு நிலைமை இதைவிட மோசமானது. திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர், பைக் போன்ற எல்லா வாகனங்களின் பெட்ரோல் டாங்கிலும் மணலை போட்டுவிட்டுப் போனது ஒரு கும்பல். மைலாப்பூர் பகுதியில் ஒரே நாளில் 47 சைக்கிள்கள் காணாமல் போயின. தேனாம்பேட்டை பகுதியில் 12 வயது சிறுவனின் உடல் மீது மண்ணெண்ணை ஊற்றிவிட்டு, தீ வைத்துவிடுவோம் என்று மிரட்டி பணம் வசூல் செய்து கொண்டு நகர்ந்தது.

அமைந்தகரை பகுதியில் வீடு வீடாகப் போய், கதவைத் தட்டி டிபன் கேட்டார்கள். இல்லை என்று சொன்ன வீடுகளில் கல் எறிந்து கலாட்டா செய்தார்கள்.

சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயில்களெல்லாம் சில சமூக விரோதிகளால் கற்களால் அடித்து நொறுக்கப்பட்டு, எண்ணூர் அருகேயே நிறுத்தப்பட்டுவிட்டன. பாவம்... பயணிகள் கம்பார்ட்மென்ட் கதவுகளை இறுக்கமாக மூடியபடி, நடுங்கியபடி காத்திருந்த காட்சிகள் அரங்கேறின.

எம்.ஜி.ஆர். இறந்த அன்று.... ஜெயலலிதா இறந்த அன்று...  சென்னையில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது? 

ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உடல், டிரக்கில் ஏற்றி மெரீனா பீச்சில் இறுதி அடக்கம் செய்ய இறக்கினார்கள். ஆங்காங்கே நின்ற கும்பல் சமாதி அருகே வரத் துடிக்க, ஏக கலாட்டா. போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப்படை அவர்களை அடக்க படாத பாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டது. பதிலுக்கு கும்பல் தரப்பில் மண்ணையும் கற்களையும் எறிந்தனர். நிலைமை கட்டுக்கு அடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. கும்பலில் இரண்டு, மூன்று பேர் சுருண்டு விழுந்தனர். 

சஃபையர் தியேட்டர்

’ஒரு பெரிய கூட்டம் கம்பெல்லாம் வைத்துக்கொண்டு தியேட்டர் உள்ளே இருக்கும் ஷோரூமை உடைத்து ஃபர்னிச்சர்களை எடுத்துட்டுப் போயிட்டாங்க. இவற்றுடைய மொத்த மதிப்பு சுமார் 30 ஆயிரம்!’’ என்றார் தியேட்டர் மேனேஜர் அப்புண்ணி.

ஸ்பென்ஸர்

இதன் துணைத் தலைவர் ராமானுஜம், ‘’கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக விதவிதமான கேக் செய்து வைத்திருந்தோம். பேக்கரி செக்ஷனை உடைத்து, கேக்குகளையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார்கள். பக்கத்தில் அழகழகான சர விளக்குகள் விற்பனை செய்யும் செக்ஷன். பல பொருட்கள் சேதம். எல்லாம் சேர்த்து சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு நஷ்டம்!’’

அந்தக் காலகட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் வால்டேர் தேவாரம். உளவுப்பிரிவில் 12 வருட அனுபவம் உள்ள அதிகாரியான இருதயதாஸ், கூடுதல் டெபுடி கமிஷனராக இருந்தார். எம்.ஜி.ஆர். இறந்த அன்று பாதுகாப்புக்காக சுமார் 7 ஆயிரம் போலீஸாரை நியமித்திருந்தனர். இருந்தும், பயங்கர கலவரம் நடந்தன. எம்.ஜி.ஆர் உடலைப் பார்க்க கிராமங்களில் இருந்தும், நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் திரண்டு சென்னைக்கு வந்துவிட்டனர். நேரம் ஆக, ஆக பசியெடுத்து. இரண்டு நாட்கள் பயணம் செய்து வந்ததால், மாற்று உடை இல்லை. கைச் செலவுக்கு பணமில்லை. முக்கிய சாலைகளில் கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. அவற்றைப் பார்த்ததும், கும்பலுக்கு ஏக குஷி. சூறையாட ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களை விரட்டியடிக்க.. ஆங்காங்கே கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடி, சில இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தவேண்டிய அளவுக்கு நிலைமை சீரியஸானது.

எம்.ஜி.ஆர். இறந்த அன்று.... ஜெயலலிதா இறந்த அன்று...  சென்னையில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது? 

ஜெயலலிதா காலமான அன்று..!

கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் இறந்த காலகட்டத்தில் நடந்த கலவரங்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது சென்னையில் நடந்த கலவரங்கள். இந்த இரண்டையும் நேரில் பார்த்த சென்னைவாசிகளில் பலர் டிசம்பர் 4-ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு செய்தி வெளியானதும், மிரண்டு போனார்கள். சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டு விடுவார்களோ? என்று பதட்டமானார்கள். வர்த்தக நிறுவனம் நடத்துகிறவர்கள் கடைகள் சூறையாடப்படுமோ என்று டென்ஷனில் தவித்தார்கள். ஆனால்... எல்லோரின் பயத்தைப் போக்கும் வகையில் எந்தப் பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் சென்னை போலீஸ் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உளவுப்பிரிவு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் போன்றவர்கள் அவசரமாக கூடி விவாதித்தனர். அவர்கள் திட்டமிட்டதை கனகச்சிதமாய் செயல்படுத்தினார்கள். அதன் எதிரொலியாக... ஜெயலலிதா இறந்த நாளன்று சென்னையில் வழக்கம்போல் டூ வீலர்கள், கார்கள் ரோடுகளில் ஓடின. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே சில கடைகள் திறந்திருந்தன. நடமாடும் டீக்கடைகள் ஆங்காங்கே முளைத்தன.

எம்.ஜி.ஆர். இறந்த அன்று.... ஜெயலலிதா இறந்த அன்று...  சென்னையில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது? 

கடந்த டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி பரவியது. உடனடியாக அப்போலோ மருத்துவமனை முன்பு மக்கள் கூட்டம் அலைமோதின. நேரம் கடந்து செல்லச் செல்ல... ஜெயலலிதா உடல்நிலை பற்றிய வதந்திகள் தமிழகம் முழுவதும் பரவத் தொடங்கின. இதனால் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். அதோடு ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த சமயத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்தததோடு, அவரது உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டது. இது அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், அன்றிரவு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. சென்னை முழுக்க ’விசிபிள் போலீஸ்’என்கிற பேனரில் ஆயிரக்கணக்கான போலீஸார் வலம் வந்துகொண்டிருந்தனர். மறுநாள் விடிந்தது. 05.12.16...திங்கட்கிழமை. பகல் முழுக்க அமைதியாகக் கழிந்தது. மாலையில், முக்கால்வாசி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நேரம் முடிவதற்கு முன்பே, வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டன.

மாலை நேரத்தில் திடீரென்று ஒரு தனியார் தொலைக்காட்சி, ஜெயலலிதா காலமானார் என்று தவறுதலாக செய்தியை ஒலிபரப்பியது. அதையடுத்து, சென்னையில் ஒருவித பதட்டம் தொற்றிக்கொண்டது. அப்போலோ வாசலில் போலீஸாருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு அது மோதலானது. ஆஸ்பத்திரிக்குள் தொண்டர்கள் நுழைய முயல்கிறார்கள் என்கிற செய்தி ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு எட்டியதும், ‘ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்கிறது” என்று அறிவித்தது. அப்போதைக்கு பரபரப்பு அடங்கியது.

எம்.ஜி.ஆர். இறந்த அன்று.... ஜெயலலிதா இறந்த அன்று...  சென்னையில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது? 

 ஆனால், அன்று இரவு 11.45 மணிக்கு அப்போலோ தரப்பில் ஜெயலலிதா காலமானார் என்று அறிக்கை வெளியானது. ஜெயலலிதாவின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட சில அ.தி.மு.க தொண்டர்கள் அப்போலோ மருத்துவமனைக்குள் நுழைய முயன்றனர். அப்போது காவலர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் லேசான தடியடி நடத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பெரியமேடு பகுதியில் அ.தி.மு.கழக வட்டச் செயலாளர் ஒருவர் கடைகளை மூடச் சொல்லி ரகளை செய்ய...போலீஸுக்கு தகவல் போனது. அவரை ரவுண்டு கட்டி அலேக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிச் சென்றனர்.  இந்தத் தகவல் சென்னை முழுக்க உள்ள அ.தி.மு.கழக பிரமுகர்களுக்குப் பரவியது. அவ்வளவுதான்... அ.தி.மு.க-வினர் அமைதியானார்கள்! 

போலீஸார் தரப்பில், ’பொதுமக்கள் போர்வையில் கலவரம் தூண்டும் சமூக விரோதிகள் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தினோம். சில ரகசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பலர் கண்காணிக்கப்பட்டதோடு, எதிர்கட்சியினரின் வீடுகளுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தினோம். மத்திய அரசும், தமிழகத்துக்கு பாதுகாப்பு பணிகளுக்கு துணை ராணுவம் அனுப்பத் தயாரானது. சென்னையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இறக்கிவிடப்பட்டனர். 7 கூடுதல் கமிஷனர்கள், 4 இணை கமிஷனர்கள், 18 துணை கமிஷனர்கள், 60 உதவி கமிஷனர்கள், 300க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் என 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். பக்கத்து மாவட்டங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ராஜாஜி அரங்கம், எம்.ஜி.ஆர் சமாதி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்ப்பட்டனர்!’’ என்றனர்.

எம்.ஜி.ஆர். இறந்த அன்று.... ஜெயலலிதா இறந்த அன்று...  சென்னையில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது? 

இதற்கிடையில்,  சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் இருந்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் 'விடுமுறையில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். காவல் நிலையங்களுக்குத் தேவையான காவலர்களை வைத்துக் கொண்டு மீதமுள்ள 75 சதவிகிதம் காவலர்களை ரோந்து, பாதுகாப்பு பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து இணை கமிஷனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேவைக்கு ஏற்ப தனியார் வாகனங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று ஜார்ஜ் உத்தரவிட்டு இருந்தார்.

மேலும், சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதலாக சாரங்கன், ஜெயராமன் என்ற இரண்டு ஐ.ஜிக்கள் நியமிக்கப்பட்டனர். இதில் ஐ.ஜி சாரங்கனுக்கு சென்னையில் உள்ள மூலைமுடுக்கெல்லாம் அத்துப்படி. இதனால் காவல்துறை ரோந்துப் பணி தொய்வில்லாமல் நடந்தது. உடனுக்குடன் வாக்கி டாக்கி மூலம் உத்தரவுகள் பிறக்கப்பிட்டன. இரவு முழுவதும் காவல்துறை வாகனங்கள் நகர் முழுவதும் உலாவந்தன.

  அப்போலோவிலிருந்து  ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த அ.தி.மு.கவினருக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்காக போடப்பட்டு இருந்த தடுப்புகள் தகர்த்தெறியப்பட்டன. டிசம்பர் 6-ந் தேதி காலை ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த சிலர் இரும்புத்தடுப்புகளை உடைத்துக்கொண்டு குறுக்குவழியில் உள்ளே நுழைந்தனர். அதைப் பார்த்த போலீஸார் அவர்களை துரத்திச் சென்று தடியடி நடத்தினர். இந்த களேபேரத்தில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு போலீஸாரே தண்ணீர் குடிக்க கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். முன்எச்சரிக்கையுடனும், பாதுகாப்புட ஏற்பாடுகளுடன் செயல்பட்ட காவல்துறையால் கலவரமில்லாமல் அமைதியாக ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் முடிந்தது! 

- எஸ்.மகேஷ்