Published:Updated:

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்

பல படங்களில் ஜெயலலிதாவுடன் தோழியாக இணைந்து நடித்தவர் சச்சு. ஜெயலலிதாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடன் இருந்திருக்கிறார். ஜெயலலிதா தனது நட்பு வட்டாரத்தில் கடைசிவரை எப்போதும் நன்மதிப்பில் வைத்திருந்ததில் ஒருவர் சச்சு. 

அவருடைய நினைவலைகளை இங்கு பகிர்கிறார் சச்சு,

''எனக்குத் தெரிந்து இவரைப் போன்ற ஒரு நடிகை, அரசில் தலைவரை இனியும் பார்க்க முடியுமா என்பது தெரியாது. 1965 வெளியாகி அவருக்கு மிகப்பெரும் பேரைப் பெற்றுத் தந்த ' வெண்ணிற ஆடை' படமே அவங்களுக்கு சோதனையில் தான் ஆரம்பித்தது. அந்த படத்தில், விபத்தில் கணவனை இழந்து  விதவையாகி, மனநிலை சரியில்லாதவராக வாழ்ந்து என அந்த படத்தில் 'ஷோபா' கதாபாத்திரத்தில் அத்தனை சோதனைகள் இருக்கும். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பல சோதனைகள் கடந்து சாதனைகளாக மாற்றியவர் ஜெயலலிதா. 1968 ல் வெளியான, 'கலாட்டா கல்யாணம்' படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து வித்தியாசமான நடிப்பை காட்டியிருப்பார். 

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்

'குமரி கோட்டம்' படத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சோ ராமசாமி ஆகியோருடன் நானும் இணைந்து நடித்தேன். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' (1966) படத்தில் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்திருந்தேன். பெரும்பாலான படங்களில் அவருடைய தோழி கதாபாத்திரத்தில்தான் நடிச்சிருப்பேன். அவர் தான் என்னைக் கூப்பிட்டு, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளராக ஆக்கினார். அவர் என்னை கூப்பிட்டு இந்தப் பொறுப்பை ஒப்படைக்கும்போது, 'எனக்கு இந்த அளவுக்குத் திறமை இருக்கானு கேட்டேன். 'உங்களைப் பத்தி இன்னும் உங்களுக்கே தெரியல. உங்களால கண்டிப்பா பண்ண முடியும்' என ஊக்கம் கொடுத்து, அந்த பொறுப்பைக் கொடுத்தாங்க. அப்போல இருந்து இப்போ வரைக்கும் நிறைய விழாக்களை  என்னை தான் ஏற்பாடு செய்யச் சொல்லுவாங்க. அதே போல அவரோட நடிச்ச நாயகிகள் எல்லோரையும் ஒன்றாக இணைக்கும் பொறுப்பும் அடிக்கடி எனக்கு வரும். நானும் சில நாட்கள் அவரை சந்திக்கும் நடிகைகளோட லிஸ்டை கொடுப்பேன். இப்படி அடிக்கடி நானும், அம்மாவும் சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. கொஞ்ச காலத்துக்கு முன்னாடிதான் நடிப்பில் பிசியாகிட்டேன். இயல், இசை, நாடக மன்றச் செயலாளர் பதவியையும் விட்டுட்டேன். 

கிட்டத்தட்ட என்னுடைய குழந்தைப் பருவமும், அவருடைய குழந்தைப்பருவரும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கு. அவரும் குடும்பத்துக்காக நிறைய தியாகங்களைச் செய்திருக்கிறார். நானும் அதேபோலத்தான். அம்மாவுடைய அன்பிற்காக இரண்டு பேருமே ஏங்கியிருக்கோம். அதனாலோ என்னவோ அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவருடைய ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருடன் இருந்திருக்கேன். 

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்

அவருக்கு காபி ரொம்ப பிடிக்கும். இதுக்காக பிரத்யேகமா பிரேசிலில் இருந்து காபி தூள் வரவழைப்பாங்க. அவ்வளவு வாசனையா, ருசியா அந்த காபி இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே காபி வந்துவிடும். சுத்தமான மாட்டுப் பாலைத்தான் குடிப்பாங்க. இதுக்காக போயஸ் கார்டன் வீட்டின் பின் புறத்தில் மாட்டுக் கொட்டகை அமைச்சு, மூன்று ஜெர்சி மாடுகளை வாங்கி வளர்த்தாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எந்த பொருள் வந்தாலும், எங்களுக்கும் தருவாங்க. நாங்க ஷூட்டிங் ஸ்பாட்லயே லஞ்ச் முடிச்சிடுவோம். ஆனா அவங்க வீட்டுக்குப் போவாங்க. மதியம் 1 மணிக்குப் போயிட்டு, 2.30 க்கு ஷார்ப்பா வந்திடுவாங்க. ஒவ்வொரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும், அவங்க அம்மா சந்தியா இவங்க கூட வருவாங்க. அந்த இடம் சரியா இருக்கா, அவங்களோட தேவையா என்ன என்ன எனப் பார்த்து செய்து கொடுத்துவிட்டுதான் போவாங்க. இந்த உலகத்திலேயே ஜெயலலிதா அதிகமா நேசித்தது அவங்க அம்மா சந்தியாவை தான். அந்த அன்பு அவங்களுக்கு கடைசி வரை கிடைக்கவில்லை. அம்மா சந்தியாவின் உடல்நிலை சீரியஸாகி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருந்தபோது, அவரும் உடன் இருக்க வேண்டும் என மருத்துவர்களிடம் வாதிட்டார். மருத்துவர்கள் உள்ளே அனுப்ப மறுத்தாங்க. அப்போ எம்.ஜி.ஆர் தான் 'அவங்க தைரியசாலி, கத்தி கலாட்டாப் பண்ண மாட்டாங்க. உள்ளே விடுங்க' என அனுமதி வாங்கி உள்ளே அனுப்பினார். அப்போது அவங்கக் கூட தான் இருந்தேன்.

நான் ஜெயலலிதாவை, 'அம்மு' வாங்க போங்கனு தான் கூப்பிடுவேன். அவங்களும் என்னை சச்சு வாங்க போங்கனுதான் கூப்பிடுவாங்க. பிறகுதான், அம்மா என அழைக்க ஆரம்பித்தேன். 

அவங்க நடிகையா இருந்தப்போ, பழைய மகாபலிபுரம் ரோடுல அமைந்திருக்கிற துரைப்பாக்கத்துல ஒரு பண்ணை இருந்தது. அதே மாதிரி, ஹைதராபாத்ல திராட்சை தோட்டம் இருந்தது. அங்கிருக்கிற திராட்சைகளை சென்னைக்கு வரவழைப்பாங்க. எங்க வீட்டுக்கு ஒரு முறை, ஒரு பெட்டி திராட்சை பழங்களை அனுப்பி வச்சாங்க. அவ்வளவு ருசியா இருந்தது. 

சொத்து குவிப்பு வழக்குக்குப் பிறகு அவங்க ஒரு நகைக்கூட போடாம வைராக்கியமா இருந்தாங்க. யார் சொல்லியும் பொட்டு தங்கம் கூட போட்டுக்கல. 2011 தேர்தல் அப்போ எங்க செட் நடிகைகள் எல்லாம் அழுது புலம்பினோம். அவங்களை சந்திச்சப்போ, தயவு செய்து ஒரு வைர தோடாவது போட்டுக்கோங்கனு வற்புறுத்தி சொன்னோம். 'கண்டிப்பா போட்டுக்கிறேன் என சொல்லி, அதுக்குப் பிறகுதான் வைர தோடு போட்டுக்கிட்டாங்க. இயல்பாகவே அவங்க ரொம்ப வைராக்கியமாக இருப்பவர். யார் என்ன சொன்னாலும் கேட்டுப்பாங்க. ஆனா, அதைச் செய்ய மாட்டாங்க. நாங்க எல்லாரும் சேர்ந்து சொன்ன காரணத்துக்காக இந்த விஷயத்தை செய்தது எங்களுக்கு சந்தோஷம். 2011-ம் ஆண்டு ஜெயித்து வந்தப்போ ஒரு விழாவின்போது எங்களுக்கென தனியே இருக்கையை அமைத்து, எங்களுக்காக ஆட்களை நியமிச்சு எங்கள பார்த்துக்க சொன்னாங்க. ஆரம்பத்துல இருந்த அதே அன்பு கடைசி வரைக்கும் இருந்தது. 

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்

ஒரு திருமண நிகழ்வின் போது காஞ்சனா, சோ என பழைய நடிகர்கள் எல்லாரும் சந்திச்சப்போ எங்க கூட நேரம் ஒதுக்கி பழைய விஷயங்களை எல்லாம் கேட்டு, கேட்டு தெரிஞ்சுக்கிட்டாங்க. ராஜஶ்ரீ மகன் திருமணத்தப்போ வந்தவங்களுக்கு என தனியே சேர் போட்டிருந்தோம். அவங்க வந்தவுடனே அமர்ந்த பிறகு, எங்க எல்லாரையும் கூப்பிட்டு பக்கத்துல சேர் போட்டு உட்கார வச்சு 15 நிமிடத்துக்கும் மேல் சிலாகிச்சுப் பேசிட்டு இருந்தாங்க. 

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்

அவங்க அவ்வளவு அழகா டிரஸ் செலக்ட் பண்ணுவாங்க. கலர்களும் அவங்கதான் செலக்ட் பண்ணுவாங்க. 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கான அத்தனை ஆடைகளின் கலர்களையும் இவங்கதான் தேர்ந்தெடுத்தாங்க. 

ஸ்டுடியோவுக்கு டப்பிங்கிற்காக வரும்போது கூட, யார்கிட்டயும் தேவையில்லாம பேச மாட்டாங்க. எப்போதும் அவங்கக் கூட ஆங்கில நாவல்கள் இருக்கும். அதைத்தான் படிப்பாங்க. அவங்களை கிராஸ் பண்ணிப் போறவங்களைப் பார்த்து ஹலோ, குட் மார்னிங் இந்த இரண்டு வார்த்தையைத் தான் பேசுவாங்க. அவங்களுக்கு கடைசி வரைக்கும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தது. அவங்ககிட்ட எதைப் பத்திக் கேட்டாலும் தெரிந்திருக்கும்,. அமெரிக்கன் இங்கிலீஷ் பேசினாக் கூட அதில் எந்த பிசிரும் இல்லாம பேசுவாங்க. தெலுங்கில் பேசும்போது மற்ற மொழி வாடையே இருக்காது. ஒவ்வொரு பேச்சுக்கும் ஹோம்வொர்க் பண்ணுவாங்க. இன்னும் சொல்லப்போனா அவங்களுக்கு சமையல் கூடத் தெரியும்.  அவங்க அம்மா போனதுக்குப் பிறகு அவங்ககிட்ட இருந்த சமையல்காரர்களை அவங்க கைப்பக்குவத்துக்கு வர பழக்கிட்டாங்க. அம்மா கேன்டின் மெனு எல்லாம் இவங்கதான் கொடுத்தாங்க. அதே போல கோயில்களில் பரிமாறும் பிரசாத மெனுவும் இவங்கதான் கொடுப்பாங்க. வெங்காயம், பூண்டு போன்ற பொருட்கள் இருக்கக்கூடாது என சொல்லிடுவாங்க. அவங்களுக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். பெண் பிள்ளைகள் ஒரே மாதிரி யூனிபார்ம் போட்டுட்டு வந்து நின்னா அவ்வளவு பிடிக்கும். அதனாலதான் 'பெண் சிசு கொலை' தடுப்பு சட்டம் கொண்டு வந்தாங்க. இப்படி கடைசி வரை மக்களுக்காகவே யோசித்துக் கொண்டு தன்னைப் பற்றி யோசிக்காம விட்டுட்டாங்க. நிறைய உதவி செய்யும் மனப்பான்மை உண்டு. எதையும், யார்கிட்டயும் வெளிப்படையாப் பேசவே மாட்டாங்க. அதனால இன்னும் மனஅழுத்தம் அதிகமாகிடுச்சு. இவ்வளவு சீக்கிரம் இறக்க அதுவும் ஒரு காரணம். என்னுடைய நல்ல தோழியை இழந்துட்டேன்.' என்ற சச்சுவின் கண்கள் கலங்க....  

- வே.கிருஷ்ணவேணி