Published:Updated:

ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்த இட்லி கடை பெண்!

ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்த இட்லி கடை பெண்!
ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்த இட்லி கடை பெண்!

ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்த இட்லி கடை பெண்!

ப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 -ம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் இழப்பை தாங்க முடியாமல் அவரது தொண்டர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் வாழ்ந்த வீட்டைச் சுற்றிப் பார்க்க பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.போயஸ் கார்டன் பகுதியில் நுழைந்து விட்டால் பாதுகாப்புகள் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் போலீசார் கேள்விக்கணைகளால் துளைத்தெடுப்பார்கள். அதற்கு பயந்தே அந்த வழியாக பொதுமக்களும் போக மாட்டார்கள். வாகன ஓட்டிகளும் செல்ல மாட்டார்கள். அந்த பகுதி மட்டுமல்ல ஜெயலலிதாவின் மனதிற்குள்ளும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. அப்படிப்பட்ட இரும்பு ( இதயம்) கோட்டைக்குள்ளும் ஒரு சாதாரண பெண்மணி இடம்பிடித்தார் என்றால் அவர்தான் சரஸ்வதி !

இரும்பு கோட்டைக்குள் இடம் பிடித்த இட்லி கடைக்காரப்பெண் !

பயத்தை ஏற்படுத்தும் வகையில் தடைசெய்யப்பட்ட பகுதியாக காட்சி அளித்த அந்த பகுதியில் ஓட்டல் வைத்தார் சரஸ்வதி.கணவனை

இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சரஸ்வதி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஓட்டலை நடத்த விடாமல் காவல்துறையும், மாநகராட்சியும் விரட்டிய நிலையில் சாப்பாட்டுக் கூடையை எடுத்துக்கொண்டு போயஸ் கார்டனை சுற்றிச் சுற்றி வந்துள்ளார். முதல்வரை  பார்த்து வணங்குவதும், சிரிப்பதுமாக இருந்தவருக்கு ஒரு நாள் முதல்வரே காரை நிறுத்தி வணக்கம் தெரிவித்துள்ளார். அதுவரை சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு அலைந்தவருக்கு அன்றில் இருந்ததுதான் காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடி தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர் காவல்துறை அதிகாரிகாரிகளே அவருடைய ஓட்டலில் போய் சாப்பிடுவதுமாக இருந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் அவருடைய மனநிலை எப்படி உள்ளது ? என்று அவரிடம்  பேசினோம்.

ஏழையின் மீது கொண்டிருந்த எல்லையற்ற அன்பு

"1991- ல் இருந்து இங்குதான் கடை வைத்துள்ளேன்.என்னுடைய கடையை கடந்து போகும் ஒவ்வொரு நாளும் என்னைப் பார்த்து  சிரிப்பார். நான் கையெடுத்து கும்பிடுவேன். அவரும் பதிலுக்கு கையெடுத்துக் கும்பிடுவார். தி.மு.க ஆட்சிக்காலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கடையை எடுத்துவிட்டார்கள். நான் மீண்டும் கூடையை தூக்கிகொண்டுஅலைந்து கொண்டு இருந்தேன். 2001 - ல் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். காவல்துறை அதிகாரிகளிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் பாத்திரத்தை போய் கடையில் வைக்குமாறு  கூறியுள்ளார். பின்னர் எடுத்துச் சென்ற பாத்திரங்களை அதிகாரிகளே கொண்டு வந்து வைத்தார்கள். என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்த ஏழையின் மீது அவருக்கு இருந்த எல்லையற்ற அன்பை கண்டு வியக்கிறேன்.

சரஸ்வதியிடம் கலகலவென சிரித்த ஜெயலலிதா !

ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கொஞ்ச நாள் கடையை திறக்கவில்லை.முதல்வர் அழைத்ததாக வந்து கூட்டிக் கொண்டு சென்றார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னார்கள். நலம் விசாரிக்கவே அழைத்தேன் என்றார். இத்தனை நாள் உங்களைப் பார்க்கிறேன். ஒரு முறை கூட  நீங்கள் என்னிடம் எந்த உதவியும் கேட்டதில்லை. உங்களுடைய கடின உழைப்பு எனக்கு பிடிக்கும் என்றார் முதல்வர் .

பிறகு அவருடைய டாக்டர் சசிகுமாரை அழைத்து சிகிச்சைஅளிக்கும்படி கூறினார். அதோடு நில்லாமல் வருமானம் இல்லாமல் தவிப்பதைக் கண்டு என் கஷ்டத்துக்கு ஏற்றவாறு பணத்தையும்கொடுத்து உதவினார். அம்மா உங்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை என்றேன். சொல்லுங்கள் என்றார். சாதாரண தொண்டர்களிடம்  நேர்காணுங்கள் அம்மா. கடையில் வந்துதொண்டர்கள் பேசுகிறார்கள் என்றேன்.இதை கேட்ட முதல்வர் ஜெயலலிதா கலகலவென சிரித்தார்.
 

அவருடைய புகழை பலரும் பாட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் சோறு சமைத்து ஏழைகளுக்கு கொடுத்து விட்டு வருகிறேன். என்னை வாழ வைத்த தெய்வம் அவர். அந்த தெய்வம் செல்லாத இந்த சாலையில் கடையை திறக்க மனமில்லாமல் இருக்கிறேன். என்னை கடந்து செல்லும் போது அவர் உதிர்த்து விட்டு செல்லும் அந்த சிரிப்பு இன்னும் என் கண்களில் அப்படியே நிற்கிறது "என்று கலங்கினார் சரஸ்வதி .

- கே.புவனேஸ்வரி

அடுத்த கட்டுரைக்கு