Published:Updated:

‘அந்தக் காட்சி வேண்டாம்... அவர் எம்.ஜி.ஆர்!’ #ரஜினி #HBDRajini

‘அந்தக் காட்சி வேண்டாம்... அவர் எம்.ஜி.ஆர்!’ #ரஜினி  #HBDRajini
‘அந்தக் காட்சி வேண்டாம்... அவர் எம்.ஜி.ஆர்!’ #ரஜினி #HBDRajini

‘அந்தக் காட்சி வேண்டாம்... அவர் எம்.ஜி.ஆர்!’ #ரஜினி #HBDRajini

மிழ் சினிமா வரலாற்றை மட்டும் அல்ல, தமிழக அரசியல் வரலாற்றையும் ரஜினியைத் தவிர்த்துவிட்டு நிச்சயம் எழுதமுடியாது.  அவர் தீவிர அரசியலில் இல்லைதான். அவர் பட வெளியீட்டு சமயத்தைத் தவிர, அவர் எப்போதும் அரசியல் பேசியதில்லைதான்... ஏன் அவர் ஒரு காலமும் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர் திண்ணமாக, தன் கருத்தைக் கூறியதில்லைதான். ஆனால், சினிமாவில் வணிக நோக்கத்துக்காகக் கட்டமைக்கப்பட்ட ரஜினி எனும் பிம்பத்தின் நிழல், அரசியல் களத்தில் இன்னும் படர்ந்துதான் இருக்கிறது. ஒரு யுகத்தின் பழமையைக் கடந்த நிமிடத்தின் மீது, அள்ளிப் பூசும்... ஒளியின் வேகத்துடன் போட்டி போட எண்ணும் இந்தச் சமூக ஊடக காலத்திலும்... ரஜினி என்னும் பிம்பம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. அதனால்தான் பிரதமர் வேட்பாளரே தமிழகத்துக்கு வந்தாலும், போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்குச் சென்று ஒரு புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு வெளியிடுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். தேர்தல் காலங்களில், சம்பந்தமே இல்லாமல் ரஜினி என் நண்பர் என அரசியல் தலைவர்கள் பேட்டி அளிக்கிறார்கள். 

சரி, ரஜினி என்னும் பிம்பம் உருப்பெற்றது எப்போது...? அந்தப் பிம்பம் திரை வணிகத்துக்கு எந்த அளவுக்குப் பயன்பட்டு இருக்கிறது என்பதை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். 

ரஜினி என்னும் பிம்பம் உச்சம்தொட்டது அண்ணாமலை திரைப்படத்துக்குப் பிறகுதான். அதற்கு முன்பே அவருக்கு சூப்பர் ஸ்டார் என்னு அடைமொழி அளிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு முன்பே அவர் பாக்ஸ் ஆஃபிஸில் முடிசூடா மன்னனாக இருந்தாலும், ரஜினி என்னும் ஆளுமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது அந்தத் திரைப்படம்தான்.

 “விளம்பரத் தட்டிகள் இல்லை”

சுரேஷ் கிருஷ்ணா  “My days with Baasha" புத்தகத்தில் இவ்வாறாக எழுதுகிறார், “அண்ணாமலை திரைப்படம் வெளியான சமயத்தில், அரசியல் சூழல் ரஜினிக்கு சாதகமாக இல்லை. படம் வெளியாவது குறித்த எந்த போஸ்டர்களும், விளம்பர பதாகைகளும் இல்லை. ஆனால், படம் குறித்த இந்த மெளனம்தான், திரைப்படத்துக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது” என்கிறார். இதை படம் சார்ந்ததாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். எப்போதும் ரஜினியின்  மெளனம் அல்லது அளந்து பேசுதல் தான்... ரஜினி என்னும் பிம்பத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றி இருக்கிறது. ரஜினியின் சமகாலத்து நாயகனாக இருக்கும் கமலின் பிம்பம் பேச்சால் கட்டமைக்கப்பட்டதென்றால்... ரஜினியின் பிம்பம் மெளனத்தால் கட்டமைக்கப்பட்டதுதான்.  மெளனத்தை சரியாக தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த நாயகன் ரஜினி. 

ரஜினி என்னும் பிம்பத்தை வடிவமைப்பதில் இன்னொரு காரணி முக்கிய பங்காற்றி இருக்கிறது. அது அவரது ‘அப்பாவித்தனம்’. பணபலம், படைபலம் வைத்திருக்கும் வலிமையான வில்லனைதான் தன் திரைப்படங்களில் எதிர்த்துக் கொண்டிருப்பார். ஆனால், அதே சமயம், தன் அப்பாவித்தனத்தை திரைப்படங்களில் முன்னிலைப்படுத்துவதிலும் கவனமாக இருப்பார்.  பெரும்பான்மையான தமிழ் மனம், புத்திசாலிகளைவிட அப்பாவிகளைதான் விரும்பும். புத்திசாலிகள் ரசிகனுடைய ஈகோவுடன் மோதுகிறார்கள். ஆனால், அப்பாவிகள் ரசிகனின் மனதைக் கரைக்கிறார்கள்.  இந்த உளவியலை நன்கு அறிந்து வைத்திருந்தார் ரஜினி.  தன் படங்களில் சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தாரோ. அதற்கு சற்றும் குறையாமல், அப்பாவித்தனமான காட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். மீண்டும் அண்ணாமலை படத்தையே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன். பால்காரரான ரஜினி, பால் விநியோகம் செய்வதற்காக பெண்கள் விடுதிக்கு செல்வார். அந்த சமயத்தில் அந்த விடுதியில் ஒரு பாம்பு நுழைந்து, விடுதியே அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்கும். பெண்கள் ரஜினி உதவியை நாடுவார்கள். ஆனால், ரஜினி அந்தப் பெண்களை விட அதிகம் பயம் கொள்வார். அதே நேரம், பெண்கள் ஒரு இக்கட்டில் இருக்கும்போது சினிமா மரபுப்படி நாயகன் விலகி செல்லல் ஆகாது. ரஜினி பயத்துடன் அந்த பாம்பைப் பிடிக்க எத்தனிப்பார். பாம்பு குளியலறை வழியாக வெளியே சென்றுவிடும். அந்த சமயத்தில் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் நாயகியை ரஜினி பார்த்துவிடுவார். அப்பாவித்தனமான வேடம் பூண்ட ரஜினி, தான் தவறு செய்துவிட்டதாக ஒரு விளையாட்டுதனமான ஒரு தோற்றத்தை பார்வையாளனுக்குக் கடத்த...“கடவுளே... கடவுளே...” என்ற வசனத்தை உச்சரித்துச் செல்வார்.  இந்த வசனத்தை இப்படத்துக்குள் கொண்டுவந்தது ரஜினி என்கிறார் அப்படத்தின்  இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா. 
இக்கட்டுரைக்குச் சம்பந்தமில்லாவிட்டாலும், இன்னொரு தகவலையும் இங்கு பகிர்கிறேன், அண்ணாமலை படத்தில் ரஜினியின் மீது ஒரு பாம்பு ஏறும் அல்லவா...? அந்தப் பாம்பு விஷம் எடுக்கப்படாத பாம்பாம். அந்தக் காட்சி எடுத்து முடிக்கும்வரை இந்த தகவல் இயக்குநர், ரஜினி உட்பட யாருக்கும் தெரியாதாம். விஷயம் தெரிந்தவுடன் தான் பதறிவிட்டதாக, சுரேஷ் கிருஷ்ணா தன் புத்தகத்தில் பகிர்கிறார். 

“ரஜினி என்னும் பிராண்ட்”

சரி, மீண்டும் கட்டுரைக்கு வருவோம். ரஜினி இன்னொரு விஷயத்திலும் மிகத்தெளிவாக இருந்திருக்கிறார். தனக்காக திரைப்படங்களில் துதிபாடுவது எல்லைமீறிவிட கூடாது என்பது தான் அது. ‘மலை... அண்ணாமலை’ என்னும் வசனம் அண்ணாமலை திரைப்படத்தில் ஒரே ஒரு முறை தான் உச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அது போல பாட்ஷா படத்தில் வரும், காலங்கள் கடந்து நிற்கும் வசனமான, “நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற வசனம் அந்தப் படத்தில் அதிகப்பட்சமாக ஆறு முறை தான் வருகிறது. இது ஏதோ ஏதேச்சையானது அல்ல... திட்டமிட்ட ஒன்று. தனக்காகத் துதிபாடுவது எல்லைமீறிச் சென்றால், அது தனக்கே எதிராகப்போகும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் ரஜினி. அவருக்குப் பின்னால் வந்த, அவர் போல ‘பாக்ஸ் ஆஃபிஸ்’ நாயகன் ஆகவேண்டும் என்று ஆசைப்பட நாயகர்கள் தவறவிடும் இடம் இது தான். 

அவர் திரைப்படம் தொடங்கும்முன், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” என்ற வரைகலைக் காட்சி வரும் அல்லவா...?  அது அண்ணாமலை படத்தில்தான் முதன்முதலாக வந்தது. இந்த வரைகலையை திரையில் போடுவதற்கு, முதலில் ரஜினி ஒப்புக்கொள்ளவில்லையாம். நீண்ட தயக்கத்துக்கு பின், பாலசந்தரின் வற்புறுத்தலுக்கு பின் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் மறுத்ததற்கு  அவர் வைத்த வாதம், “ரஜினி ஒரு பிராண்ட் ஆகிவிட்டால்... அதற்கு நான் தொடர்ந்து தீனி போடவேண்டும். அது மிகவும் கடினம்” என்பதே... அவர் வாதம் பொய்க்கவில்லை, ரஜினி என்னும் பிராண்டின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யமுடியாத அண்ணாமலைக்குப் பிறகு வந்த பாண்டியன் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.

“பிம்பத்தை உடைத்து மீண்டும் எழுப்புதல்”

அண்ணாமலையில் கட்டமைக்கப்பட்ட பிம்பம் உடைவதைதான் ரஜினி விரும்பி இருக்கிறார். இதற்கு சினிமா என்னும் கலை சார்ந்த எந்தக் காரணமும் இல்லை. அந்தப் பிம்பம் உடைந்தால்தான், மீண்டும் அதை விட வலுவான பிம்பத்தைக் கட்டமைக்க முடியும் என்பதுதான் காரணம். அந்தப் பிம்பத்தை உடைக்க அவர் தேர்ந்தெடுத்தது, தெலுங்கு  “அலரி மொகுடு” திரைப்படம். இரண்டு மனைவிகள் உள்ள ஒரு நாயகனின் கதை. இதைத் தமிழாக்கம் செய்யலாம் என்று ரஜினி  கூறியபோது சுரேஷ் கிருஷ்ணா பதறிவிட்டாராம். அவர், “வேண்டாம். இது விஷப்பரிட்சை... நாம் முன்பே பேசியது போல ‘பாட்ஷா’ படத்தை செய்யலாம்” என்றிருக்கிறார். அதற்கு ரஜினி,  “இல்லை... நாம் அண்ணாமலையில் உண்டாக்கிய பிம்பத்தை உடைக்க வேண்டும். மக்களை மறக்கச் செய்யவேண்டும். அப்போதுதான், பாட்ஷா பார்வையாளன் மனதில் நிற்பான். அதற்கு நாம் 'அலரி மொகுடு' திரைப்படத்தை தமிழாக்கம் செய்யவேண்டும்” என்றிருக்கிறார்.  பாட்ஷாவிற்காக அவர் வடிவமைத்த செயல்திட்டம் தோற்கவில்லை.  ரஜினி என்னும் பிம்பத்தை வேறு வடிவில் வெளிப்படுத்திய, அலரி மொகுடின் தமிழ் பதிப்பான வீராவும் வெற்றி அடைந்தது. மீண்டும் ரஜினி பிம்பம் கட்டமைக்கப்பட்ட ‘பாட்ஷா’வும் மாபெரும் வெற்றி பெற்று, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் ஆனது. 

வீராவில் அவர் இருமனைவிகளைக் கொண்ட நாயகனாக, குடும்பம் சார்ந்த ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அந்த படத்துக்குப் பிறகும் அவர் பிம்பம் அப்படியேதான் இருந்தது.  எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் ஆர்.எம்.வீரப்பன் தான், ‘பாட்ஷா’ படத்தின் தயாரிப்பாளர்.  அவர், ரஜினியை ஆனந்த்ராஜ் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சிக்கு ஒப்புக்கொள்ளவே இல்லையாம். அவர் சொல்லிய காரணம், “எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த ஒரு பிம்பத்தை நான் ரஜினிக்கு பார்க்கிறேன். நிச்சயம் அவர் ரசிகர்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். என்னால், இந்தக் காட்சிக்கு சம்மதிக்கவே முடியாது” என்று கூறியுள்ளார். பின், ரஜினியே இதில் தலையிட்டுதான் இந்த காட்சிக்குச் சம்மதம் வாங்கி உள்ளார்.  “நாயகன் அந்தக் காட்சியில் அடிவாங்கினால் தான், பின் அந்த நாயகன் திரும்பி அடிக்கும் போது, ரசிகர்களின் மனநிலை உச்சத்தைத் தொடும்” என்றிருக்கிறார். அதுதானே நிகழ்ந்தது. 

கபாலி வரை அதுதானே நிகழ்ந்து கொண்டும் இருக்கிறது. ரஜினி நிச்சயம் வெறும் சினிமா மட்டும் தெரிந்த நாயகன் இல்லை... ரசிகர்களின் உளவியல் அறிந்த நாயகன். அதனால்தான் அவரால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் சந்திரமுகியையும் தேர்ந்தெடுக்க முடிகிறது, வில்லனுக்குப் பயந்து ஓடும் வசீகரனாகவும் நடிக்க முடிகிறது.  அவரது முடிவுகள் சில நேரம் பிசகி இருக்கலாம் மறுப்பதற்கில்லை. ஆனால், ஒப்பீட்டளவில் மற்ற நாயகர்களைவிட, எம்.ஜி.ஆருக்கு பின் ரஜினிதான் ரசிகர்களின் உளவியலை நன்கு அறிந்திருக்கிறார். 
ரஜினி... உளவியல் அறிந்த நாயகன்!

-மு. நியாஸ் அகமது

அடுத்த கட்டுரைக்கு